கி.மு,………..கி.பி(பதிவு அத்தியாயம் 19)

சென்ற பதிவில் கிருஷ்ணருக்கு எண்மணியாட்டிகள் என்று சொல்லப்படுகின்ற எட்டு மனைவிகள் இருந்தனர்; அவர்களை பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுவதாகத் தெரிவித்திருந்தேன்..அவர்கள் யார்? என்று இப்போது பார்க்கலாம்..

எண்மனையாட்டிகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் மைசூர் ஓவியம்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மொத்தம் 16 ஆயிரத்து எட்டு மனைவிகள் இருந்தனர் என்றும், இவர்களில் 16 ஆயிரம் பேர் சுதேசி மனைவிகள் என்றும், அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரன் மாளிகையில் அடைக்கப் பெற்றிருந்தனர்.. கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற பின்னர், அவர்களை விடுதலை செய்து அப்பெண்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.. ஆனால் அவர்களை அவர்களின் குடும்பத்தார் ஏற்க மறுத்துவிட்டதால், கிருஷ்ணரே அவர்களை ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டார்.. அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டிக்கொடுத்து,  மரியாதையுடன் வைத்திருந்தார் என்றும்,  ஆனால் அவர்களுடன் எவ்வித தொடர்பும் அவர் கொண்டு இருக்கவில்லை என்றும் புராணங்கள் கூறுகின்றன..

கண்ணனின் மனைவியாக எண் மனையாட்டி அல்லது அஷ்டமன்யா என்பது மொத்தமாக கூறப்படும் பதம் ஆகும்..ஆயினும்,  இது நூலுக்கு நூல் மாறுபடுகிறது.. அறுபதினாயிரம் தேவியர்,  ராதை மற்றும் தமிழ் வழக்கில் குறிப்பிடும் நப்பின்னையும் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிகள் என்று பல்வேறு குறிப்புகள் உண்டு.. ஆனால் இந்த எட்டு தேவியரே, அவருக்கு உண்டு என்ற குறிப்பு பெருவாரியான வைணவ நூல்களில் சொல்லப்படுகின்றது.. அவற்றிலும் குறிப்பாக ருக்மணி மற்றும் சத்யபாமா ஆகிய இருவரையும் கண்ணனின் வரலாற்றில் இணைத்து சொல்வதே பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது..

இனி ஸ்ரீ கிருஷ்ணரின் எட்டு மனைவிகள் பற்றி சிறுகுறிப்பு காணலாம்..

ருக்மணி

ருக்மணி விதர்ப்ப நாட்டு இளவரசி ஆவார்.. இவருக்கு வைதர்பிணி  என்று இன்னொரு பெயரும் உண்டு.. இவருக்கு ஐந்து சகோதரர்கள் அவர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி ஆகியோர் .. ஆவார்கள்.. ருக்மணியின் சகோதரன் ருக்மி, தன் நண்பனும் சேதி நாட்டு மன்னனான சிசுபாலனுக்கு ருக்மணியை மணம்முடித்து கொடுக்க முடிவு செய்திருந்தான்.. ருக்மிணி, கிருஷ்ணரை மணம் செய்யவே விரும்பினாள்.. எனவே, கிருஷ்ணர் ருக்மிணியைக் கடத்திச் சென்று மணம் முடித்தார்.. இவர்களுக்கு, பிரத்யும்னன், சாருசேதனன் ,சாருதேஹன், சுதேஷணன் ,சுகாரு, சாருகுப்தன், சாருசந்திரன்,விகாரு,சாரு ஆகிய 10 புதல்வர்கள் இருந்தனர்

சத்யபாமா

இவர் ஸ்ரீகிருஷ்ணரின் மூன்றாவது மனைவி ஆவார்.. இவர்,வசந்தபுரி நாட்டின் இளவரசி ஆவார்.. சித்ரலேகா, வசந்த பாமா என வேறு பெயர்களும் உண்டு. ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை போரிட சென்றபோது அவருக்கு சத்தியபாமா தேரோட்டியாக சென்று ,நரகாசுரனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன..

இவர்களுக்கு பானு, சுபானு, சுவபானு, பிரபானு, சந்திரபானு, பிரஹத்பானு, அதிபானு, ஸ்ரீ பானு, பிரதுபானு என்று பத்து புதல்வர்கள் இருந்தார்கள்

ஜாம்பவதி

இவர் ராமாயண காவிய மாந்தரான ஜாம்பவானின் மகள் ஆவார்.. சூரியதேவன் யாதவ குல முக்கிய பிரமுகரான சத்தியஜித்திற்கு  செல்வத்தை வாரி வழங்கும் சியமந்தக மணியை அடளித்தார்.. அதனை அவர் தம்பி ப்ருகத்சேனன் அணிந்துகொண்டு வேட்டைக்கு செல்ல,அவன் ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டான்.. அவ்வழியே வந்த ஜாம்பவான், அந்த சிங்கத்தை கொன்று, சியமந்தக மணியை கைப்பற்றி, அதனை தன் மகள் ஜாம்பவதிக்குக் கொடுத்தார்.. சத்யஜித்  கிருஷ்ணரே பிருகத்சேனனைக் கொன்று விட்டார்; மணியையும் அவரே கவர்ந்து கொண்டார் என்று வதந்தி பரப்பினான்.. கிருஷ்ணர் காட்டிற்குச் சென்று ஜாம்பவான் உடன் போரிட்டு வென்று ஜாம்பவதியை மணந்து சியமந்தக மணியை பெற்று சத்யஜித் இடம் ஒப்படைத்தார் இதனால் மனம் மகிழ்ந்த  சத்யஜித் தனது மகள் சத்யபாமாவை  இவருக்கு திருமணம் செய்து வைத்தார்.. ஜாம்பவதிக்கு சாம்பன், சுமித்திரன் ,புருஜித், சதாஜித், சஹஸ்ரஜித் ,விஜயன், சித்ரகேது, வசுமானன், திராவின், க்ருது என்று பத்து மகன்கள் பிறந்தனர்

காளிந்தி

இவள், கிருஷ்ணரின் நான்காம் மனைவியாவார்.. இவருக்கு யமுனை என்று மற்றொரு பெயரும் உண்டு.. இவருக்கு, சுருதன்,கவி ,விருஷன், வீரன், சுபாகு,பத்ரா,சாந்து, தர்ஷன், பூர்ணமாஷ், சோமகன் என்று பத்து புதல்வர்கள் இருந்தனர்..

நக்ன சித்தி

இவர் கண்ணனின் ஆறாவது மனைவி ஆவார்.. இவருக்கு சத்தியை, கோசலை என்று வேறு பெயர்களும் உண்டு.. இவர் கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னசித்து என்பவரின் மகள் ஆவார்.. இவரே தமிழ் மரபில் நப்பின்னை என்று கருதப்படுகிறாள்..இவரது சரித்திரம், விஷ்ணு புராணம், ஹரிவம்சம் ஆகியவற்றில் உள்ளது.. அடக்கமுடியாத ஏழு காளைகளை “ஏறுதழுவல்” (ஜல்லிக்கட்டு) மூலம் அடக்கி கிருஷ்ணர் சுயம்வரத்தில் இவரை கரம்பிடித்தார்.. இவர்களுக்கு, வீரன் ,சந்திரன், அசுவசேனன் சித்திராகு, வேகவான் ,விருசன், ஆமன்,சுங்கு ,வசு ஆகிய பத்துப் புதல்வர்கள் இருந்தனர்..

மித்திரவிந்தை

இவருக்கு சைப்பி என்று மற்றும் ஒரு பெயர் உண்டு..இவர் கண்ணனின் ஐந்தாவது மனைவி ஆவார்..இவர் வரலாறு, மகா பாரதம், விஷ்ணு புராணம், ஹரிவம்சம் ஆகியவற்றில் சொல்லப்படுகின்றது..பாகவத புராணத்தின்படி,  இவள் பாண்டவர்களின் தாயான குந்தியின் தமக்கை ராசாத்தி தேவியும், அவந்தி நாட்டரசன் ஜெயன்சேனனின் மகள் ஆவாள்.. இவர்களது சகோதரர்கள், விந்தன், அனுவிந்தன் ஆகியோர், துரியோதனனின் தோழர்கள் என்று பாகவதம் கூறுகிறது.. எனவேதான் அவர்கள் கௌரவர்கள் பக்கம் சார்ந்து குருக்ஷேத்திரத்தில் போரிட்டனர் என்பதே மகாபாரத வரலாறு.. விஷ்ணு புராணத்தில். மித்திரவிந்தை சைப்பி என்ற பெயரால் (சிபி வம்சத்தார்) அழைக்கப்படுகிறாள்

ஹரிவம்சம் கூற்றின்படி அவள் சிபி மன்னனின் மகளான சுதத்தை எனப்படுகிறாள்.. மேலும்வாக பாகவதத்தின்படி மித்திரவிந்தை குடும்பத்தினர் அவளை துரியோதனனுக்கு மணம் முடிக்க  திட்டமிட்டிருந்தனர்..ஆனால் அவள் கண்ணனை காதலித்ததால்,அவளது சுயம்வரத்தில் கலந்து கொண்டு கிருஷ்ணர் அவளைக் கவர்ந்து சென்றதாகவும் கூறப்படுகிறது..

இன்னொரு கதையில் பலராமரின் ஆணைப்படி அவந்தி நாடு கௌரவர்களுடன் இணைவது துவாரகைக்கு அச்சுறுத்தல் என்பதால்,கண்ணன் சுபத்திரையை அழைத்துச் சென்று மித்திரவிந்தையின் மனம் அறிந்து அவளைக் கவர்ந்து சென்றதாக கூறப்படுகிறது..

இவர்களுக்கு விருகன், கர்சன், அன்னிலன், கிரித்தரன், வர்த்தனன், உன்னடன், மகாம்சன், பவணன்,வக்கினி, சுதி என்று பத்துப் புதல்வர்கள் உண்டு..

இலக்கு மணை

இவர் ஸ்ரீ கிருஷ்ணரின் எட்டாவது மனைவி ஆவார்.. இவர் மத்திர தேசத்து மன்னன் பிருஹத்சேனரின்  மகள் என்பதனால் மாத்திரி என்றும் அறியப்படுகின்றாள்.. விஷ்ணு புராணம், இலக்குமணையை ” சாரு காசினி“என்று குறிப்பிடப்பட்டுள்ளது..பாகவத புராணத்தில் மத்திர நாட்டின் பெயர் தெரியா மன்னன் ஒருவனின் மகளாகவும், நற்குணம்  நிறைந்தவளாகவும் இலக்குமணையைக் காட்டுகிறது..

பத்ம புராணத்தில் மத்திய நாட்டு மன்னன் என்று அடையாளம் காட்டுகிறது..ஹரி வம்சத்தில் இவரை சுகாசினி என்று கூறுகிறது.. இவளை சுயம்வரத்தின் மூலம் கண்ணன் என்று மணம் முடித்ததாக பாகவத புராணம் கூறுகிறது.. இன்னொரு கதையில், ஜராசந்தன், துரியோதனன் ஆகியோரை போட்டியில் வென்று,அவளை கண்ணன் மாலையிட்ட தாகவும் கூறப்படுகிறது..அந்தப் போட்டியில் வேண்டும் என்றே அர்ஜுனன் தோற்றுப் போனதாகவும்; பீமன் போட்டியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. தனது மணம் குறித்து அஸ்தினாபுரம் சென்ற இலக்குமணை திரௌபதியிடம் விவரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.. இவர்களுக்கு பிரகோசன், கத்திரவான்,சிங்கன், பலன், பிரபலன், ஊர்த்துவகன், மகாசக்தி, சகன், ஓயன், அபராயிதன் என்று பத்து புதல்வர்கள் பிறந்தார்கள்

பத்திரை

இவர் கிருஷ்ணரின் ஏழாவது மனைவி ஆவார்.. இவர் கேகய நாட்டின் இளவரசி என்பதால் கைகேயி எனவும் அழைக்கப்பட்டார் திருட்டகேது மற்றும் குந்தியின் சகோதரி, சுருதகீர்த்தி ஆகியோரின் மகள் ஆவார்.. இவரையும் கண்ணன் சுயம்வரம் மணம் முடித்தார்

இவர்களுக்கு சங்கிராமசித்து,  பிருகத்சேனன், சூரன், பிராகரணன், ஆர்சித்து, சயன், சுபத்திரன், வாமன், ஆயுர், சத்தியகன் ஆகிய பத்துப் புலவர்கள் இருந்தனர்..

கண்ணனின் மறைவிற்குப் பிறகு இந்த எட்டு மனைவியர்களும் உடன்கட்டை ஏறியதாக கூறப்படுகிறது.. இவர்களுக்கு பிறந்த 80 பேரில், பிரத்யும்னன் வரலாறும், பேரன் அநிருத்தன் வரலாறும் பாகவத புராணத்தில் கூறப்படுகிறது..சால்வன், துவாரகையை தாக்கியபோது, பிரத்யும்னன்,சாம்பன், சாரு சேதனன் ஆகிய மூவரும் அவனோடு போரிட்டு உள்ளனர்.. சாம்பன் பற்றியும்,அவன் துர்வாசரிடம் சாபம் பெற்ற கதையும் மஹாபாரதத்தில் ஒரு குறிப்பிடப்பட்டுள்ளது.. மற்றவர்கள் யாவரும் அழிந்ததால், அவர்கள் வரலாறு ஏதுமில்லை..

மேலே குறிப்பிட்டுள்ள 8 மனைவியர்களும் தவிர, கண்ணன் வரலாற்றில் மேலும் இருவர் இடம் பிடிக்கின்றனர். அவர்கள் நப்பின்னையும், ராதையும் ஆகும்..

நப்பின்னை

இவர்களில் நப்பின்னை தென்னக பாடல்களில் இடம் பெற்றுள்ளார்..குறிப்பாக, ஆண்டாளின் திருப்பாவையில் பல இடங்களில் ஆண்டாள் நப்பின்னை பற்றி சிலாகிக்கிறார்.. வட இந்தியாவில் காணப்படும் புராணங்களில் நப்பின்னை பெயர் இடம்பெறவில்லை.. திருமால் கண்ணனாக அவதாரம் செய்தபோது, லட்சுமி, ருக்மிணி ஆகவும், பூமிதேவி சத்யபாமா வாகவும், நீளாதேவி நப்பின்னை யாகவும் அவதரித்ததாக கூறப்படுகிறது..முன்னரே குறிப்பிட்டது போல், கண்ணனின் தாய் யசோதையின் அண்ணன் கும்பகன் எனும் நக்னசித்து என்றும் கூறப்படுகிறது..

வடநாட்டு காவியங்களில் கண்ணனின் காதலியாக சித்தரிக்கப்படுபவள் ராதை மட்டுமே..அங்கே நப்பின்னை என்ற பெயர் இடம்பெறவில்லை.. தமிழ்நாட்டுக்கு கண்ணனோடு நீங்காத ஒரு தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நப்பின்னை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது..

ஆனால் நப்பின்னை வரலாறு சங்க காலம் தொட்டு வழங்கி வருகின்றது என்பது தனித் தமிழ் பெயர்.. அதனை உபகேசி என்று வடமொழி கற்ற தமிழ் புலவர் நல்கூர் வேள்வியால் திருவள்ளுவ மாலையில் குறிப்பிடுகின்றார்.. உபகேசி என்பது நப்பின்னை என்று நேமிநாத உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.. கண்ணன் நப்பின்னை வரலாறு தமிழ்நாட்டில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்துள்ளது என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது இனி கண்ணனின் காதலியான ராதை பற்றி அடுத்து பார்ப்போம்..

அடுத்த பதிவில் சந்திப்போம்..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: