செக்கு மாடுகள்( சிறு கதை)

மாம்பலம் ரெயில் நிலயத்திலிருந்து வெளியே வந்து ஸ்டேஷன்ரோட்டில் நடந்தபோது என் மனது என்னிடத்தில் இல்லை. எனக்கு முன்னால் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தது. என் காதுகளில் பல கைகளின் தட்டும் ஓசை விழுந்து கொண்டு இருந்தது. “ கன்க்ராட்ஸ் , சாதிச்சுட்டீங்க சார்...”

என் முன்னால் சன் டிவி, ஜெயா டிவி, போன்ற பலவற்றின் மைக்குகள் அணி வகுத்து நின்றிருந்தன. “ சொல்லுங்க சார்..இந்த வருஷம் அகாடமி விருது உங்களுக்கு கிடைக்கும்னு எதிர் பார்த்தீங்களா..? ..”
கெத்தான ஒரு புன்சிரிப்புடன் ..” ஆமா சார்….இந்த வருஷம் விருது வாங்கணும்னுதான் என்னுடைய கற்பனைகளை எல்லாம் திரட்டி இந்த நாவலை எழுதினேன்.அதுக்கு எனக்கு பலன் கிடைச்சது…மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..”
“ எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு..அப்புறம் சந்திக்கலாம்..என்ன?..” கைகளை குவித்த வாறே விடை பெறும்போது, என் தோளில் ஒரு கை விழுந்தது.
“ எதிர்லே வர்ரவங்கெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்களா..?கை கூப்பி வணக்கம் சொல்லிட்டே வர்றீங்க.” பக்கத்தில் என் எதிர் வீட்டுக்காரர் ரங்கநாதன் ..” பாத்து சார்.. சீவேஜ் போர்டு காரங்க அங்க அங்க பள்ளம் தோண்டி வச்சிருக்காங்க விழுந்துடகிழுந்துட போறீங்க..” சொல்ல்லிக்கொண்டே என்னைத் தாண்டி போனார்.
நான் அப்போதுதான் இந்த உலகத்திற்கு வந்தேன்…என்னுடைய இந்த நிலைக்குகாரணம் இன்னைக்கு ஆபீசில் நடந்த ஒரு சம்பவம்தான்.
வழக்கம் போல ஆபீஸ் பைலில் மூழ்கியிருந்த என் காதுகளில் “ யோவ் பர்சு..என்ன எழவுய்யா எழுதி இருக்கிறீர்,…இங்கே வா..” எனது சூபரின்ட்டேன்டன்ட் காதர் பாட்சா கரண கடூரமாய் கத்திக் கொண்டு இருந்தார்.
“ என்ன சார்..? என்ன விஷயம்..எதுக்கு இப்படி கூப்பாடு போடுறீங்க..”…நான் அவரை அப்பப்போ இப்படித்தான்…இல்லன்ன அவருக்கு நான் தினமும் வாங்கித் தர டீ..கட்.அதுவுமில்லாம அவர் என்னை பர்சு அப்படின்னுதான் கூப்பிடுவார். ஒருவிதத்துல அதுவும் சரிதான். அவருடைய பர்சு நாந்தான்.அப்பப்ப சில்லறை கடன் வேற என்னிடம் வாங்குவதுண்டு. .அது திரும்ப வந்ததா சரித்திரமே இல்ல …அந்த ஒரு பிணைப்புதான் ரெண்டு பேருக்கும் ..
“ஏன்யா..இத்தினி வருஷம் சர்வீஸ் போட்டு இருக்கயே..இன்னமும் இப்படிநோட்போடறே..சுருக்கமா எழுதவே உனக்கு வராதா..பெடிஷனர் ஒரு கத சொன்னா..நீ ஒரு கத சொல்ற..இங்கே எங்கய்யா..பாட்டி வட சுட்ட கதை எல்லாம் வருது…இத படிச்சுட்டு உள்ளாற உக்காந்து இருக்கனே உங்கப்பன் என்ன கன்னா பின்னான்னு ஏசுவான்..பைலு மூஞ்சிமேல கடாசுவான்…
நீ …ஒண்ணு செய் பர்சு….. பேசாமே..எதாச்சும் கதை கிதை எழுது..இந்த உத்யோகம்லாம் உனக்கு சரிப்பட்டு வராது..”
எனக்குள் இருந்த எழுத்தாளன் எழுந்து உட்கார்ந்தான்.. காலேஜ் டேஸ்ல..கத கவிதைன்னு எழுதுவேன்..எல்லாம் ரெகார்ட் நோட்லதான்..ஒருதரம் ப்ரோபெசர் கையில நோட் மாட்டி அதுல கதைக்காக ஒரு காதல் கடிதம் எழுதப்ப்போய்..அதுல சொன்ன ஒரு பேருல என் கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்து..இது தற்செயல் தான்..ஆனா அது விபரீதம் ஆகி.. அந்தாளு ப்ரின்சி கிட்ட சொல்லி ஒரு வாரம் சஸ்பென்ட் ..வீட்டுல அதுக்குமேல அர்ச்சனை…
அப்பா போஸ்டு மாஸ்டர் .” படிக்க அனுப்பிச்சா உருப்படாத வேலைய செய்..நீ எல்லாம் படிச்சு பின்னாள்ள என்ன கிழிக்க போரையோ…..சொந்தக்காரங்கள் எல்லாம் போன போட்டு உன் புள்ளய காலேஜ்ல இருந்து சஸ்பென்ட் பண்ணிட்டாங்களாமேன்னு துக்கம் விசாரிக்கறாங்க..வெளில தல காட்ட முடியல.. நம்ம புழப்பே கதையாத்தான் இருக்கு..இதல கதை என்ன வேண்டி கிடக்கு..” அப்பா சரமாரியாக திட்டுகளால் துளைத்தார்.
அம்மா தன் பங்குக்கு “ ஏம்பா உனக்கு இந்த வேண்டாத வேல.காலேஜ்க்கு போனோமா படிச்சோமான்னு இருக்கக் கூடாதா..?”
என்னுடய கதை வித்து முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது .
அதனைத்தான் இப்போது பாட்சா பாய் தோண்டி எடுத்திருக்கிறார்.. அவரை மனசுக்குள்ளேயே பாராட்டிக் கொண்டேன்.
ஸ்டேஷன் ரோட்டிலிருந்த அந்த ஸ்டேஷனரி ஷாப்பில் நுழைந்தேன்..ஒரு குயர் வெள்ளை பேப்பரும், ஒரு செலோ பென்னும் வாங்கிக் கொண்டேன்..கூடவே ரெண்டு கோடு போட்ட பேப்பரும்…எனக்கு இன்னமும் நேராக எழுத வராது..ஆபீசில் கூட பேப்பருக்கு அடியே ஒரு கோடு போட்ட பேப்பர் வைத்துதான் எழுதுவேன்..சமயத்தில் அப்படி பேப்பர் வைக்காமல் எழுதி விட்டு, பாய்..”என்னய்யா பர்சு..வரி புடிச்சு எழுத மாட்டியா ..தாம்பரத்துல ஆரம்பிச்சு விழுப்புரம் போவுது லைன்..” ….அவர் வீடு தாம்பரம்..
மனதில் ஆயிரம் கற்பனைகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்..யாருக்கும் தெரியாமல் பேப்பரையும், பேனாவையும் என் ரூம் டேபிளில் வைத்து விட்டு..வீட்டு நிலவரங்களில் அக்கறையாக விசாரித்தேன்..அன்று இரவு சரியாக தூக்கம் வரவில்லை..சிறிது நேரத்துக்கு ஒரு முறை டேபிளில் இருந்த பேப்பரையும், பேனாவையும் பார்த்துக் கொண்டி இருந்தேன்..கலர் கலராய் கனவு வந்தது..எல்லாவற்றிலும்..டிவி சானல்கள்..பத்திரிக்கைக் காரர்கள் ரவுண்டு கட்டி என்னை பேட்டியாக எடுத்தார்கள்.
இரவு நான் எடுத்த முடிவை என் சகதர்மிணியிடம் கூட சொல்ல வில்லை. சொல்லிருந்தால், இரவு நான் தூங்கி இருக்க முடியாது. பொழுது விடிந்தது…என் வாரிசுகள் எல்லாம் ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் சென்றதும்..நான் இன்னமும் குளிக்காமல் ரெடியாகாமலும் இருப்பதை பார்த்த என் பாரியாள்..”ஏங்க இன்னும் புறப்படல..? “
அப்போதுதான்..” இல்லம்மா..நான் இன்னிலேருந்து ஒரு மாசம் சிக் லீவ்..” என்று விஷயத்தை தொடங்கி கதையெழுத போற விவரத்தை சொன்னேன். அவ்வளவுதான்..அவ முகத்த பாக்கணுமே.
.” என்னது…லீவ் போட்டு கதை எழுத போறீங்களா..எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை..எதோ கவர்மென்ட் உத்யோகம்னுதான் என்னை உங்களுக்கு கட்டி குடுத்தாங்க…அதுக்கும் இப்போ வேட்டா…என்ன புழப்பு இது.. கத எழுதராராம்..கத..அதுவும் லீவ் போட்டுட்டு..இப்படி ஏதும் ஏடாகூடம் செய்வீங்கன்னு எனக்கு தெரியாம போச்சே..தெரிஞ்சி இருந்தா உங்களுக்கு கழுத்த நீட்டி இருக்க மாட்டேனே..அந்த பேங்க் ஆபிசரை கட்டி இருந்தா.”.என்று நிறுத்தினாள்..
“.ஆமாம் , அவன்தான் இந்த மூஞ்சிய வேண்டாம்னுட்டு தல தெறிக்க ஓடினானாமே….” என் சொல்ல வாயெடுத்தேன். அப்புறம் அதன் விபரீத விளைவுகளை எண்ணி கை விட்டேன்..
“ இந்நேரம் ராணி மாதிரி வாழ்ந்திருப்பேன். என்ன செய்ய..அதுக்கு நான் குடுத்து வக்கலையே..இப்போ லீவ் வேற போடுங்க..அப்புறம் உங்களை வேற ஊருக்கு மாத்திடுவாங்க.காலேஜ் படிக்கற ஒரு பொண்ணு, ஸ்கூல் படிக்கற ஒரு புள்ள…படிக்கற புள்ளைங்கள வச்சுகிட்டு..வேற அட்மிசன் தேடணும் இல்ல நீங்க அங்கேயும் நான் இங்கேயுமா குடும்பம் நடத்தணும்…உங்களுக்கென்ன அது சௌகரியம்தானே..” அவள் என்னை உண்டு இல்லன்னு ஆக்கினாள்..ஒரு வழியாக அவளுக்கு புரியும்படியாக அப்படி லீவ் போட்டா.. டிரான்ஸ்பர் எல்லாம் ஆகாது.. அது தவிர..வேற விஷயங்களயும் எடுத்து சொல்லி ஒரு வழியாக சமாதானம் சொல்லிவிட்டு..குளிக்க சென்றேன்..குளித்து விட்டுவந்து சாமி கும்பிட்டுவிட்டு “ என் வாழ்க்கையயே அவர் கிட்டே ஒப்படைக்கனுமே.. என் ரூமில் நுழைந்து டேபிள் முன் உட்கார்ந்தேன்…அங்கு வைத்திருந்த பேப்பர், பேனாவைக் காணோம்..
“ அமிர்தம் …இங்க வச்சிருந்த பேப்பர் பேனா எங்கே?’
“காலைல..நம்ம குமாருதான் பேப்பர், பேனாவைக் காணோம்னு தேடிக்கிட்டு இருந்தான்..அது உங்க ரூம்ல இருந்திச்சு..நாந்தான் எடுத்து கொடுத்தேன்..”
நான் தவம் செஞ்சு பெத்த புள்ள..குமாரு..நேத்துதான் என்கிட்டே பேப்பர், பேனா எக்ஸாமுக்கு வேணும்னு பைசா வாங்கிட்டுபோனான். பய புள்ள அந்த காச ஏதோ செஞ்சிட்டு…எதோ தேடற மாதிரி அவன் அம்மா எதுர்ல டிராமா ஆடி நான் வாங்கி வச்சிருந்த பேப்பர் பேனாவ ஆட்டைய போட்டுட்டான்.. ஹூம்..எனக்கு வந்து வாச்சுதுகளேன்னு..மனசுல புலம்பி கிட்டே மறுபடியும் ஸ்டேஷனரி ஷாப் போய் பேப்பர், பேனா வாங்கி வந்தேன்..முன் வைத்த காலை பின் வைக்க கூடாது..என்ன தடங்கல் வந்தாலும் எழுதியே தீர்றதுன்னு ஒரு முடிவுல எழுத ஆரம்பிச்சு ….
தடால்” என்று ஒரு சத்தம்..” ஐயோ ..பரசு..பரசுன்னு “ ஒரு கூப்பாடு..ஹாலில் என் அம்மா..தரையில் தவக்களைமதிரி கிடந்தாள்..
ஓடி வந்து “ என்னம்மா ஆச்சு…என்றவாறே தூக்கினேன்..” டேய் பாழாப்போன இந்த குமாரு எண்ணைய தரையில ஊத்தி வச்சிருக்கான் போல.வழுக்கிடுச்சு..கால் உடைஞ்சிடுச்சு..அய்யோ வலி தாங்கலையே..”
“இரும்மா..தைலம் கொண்டாந்து தடவறேன்..எல்லாம் சரியாய் போய்டும். என்னது..தைலம் தடவறையா..ஏண்டா..என் கால் உடன்சுடிச்சுன்னு சொல்றேன்..தைலம் தடவரேன்கற..என்னை ஆசுபத்திரி கூட்டிட்டுபோப்பா..”
அதை கேட்டுக்கொண்டே வெளியே இருந்து வந்த என் பொண்டாட்டி அமிர்தம்..” யாரு…எதுக்கு ஆசுபத்திரி..” என்று கேட்டுகொண்டே வந்தாள்..நான் நடந்தவற்றை சொல்ல..” ஆமா..உங்கம்மாளுக்கு வேற பொழப்பே கிடையாது..எதாச்சும் இங்கன அங்கன தடமாட வேண்டியது..அப்புறம் கிழே விழுந்து வக்க வேண்டியது…எங்கயாவது மூலைல கிடக்க வேண்டியது தானே..” என்றாள். இந்த மாமியார் மருமக சண்ட இந்திய பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையவிட மோசமானது..முடிவே கிடையாது.
“ ஆமாம்…பேருதான் அமிர்தம்..வாய தொறந்தா விஷம்தான்..” எங்கம்மா பதிலுக்கு பதில்..இதற்கிடையே, காது கேக்காத என் அப்பா வேற..
“டேய் பரசு..என் காது மெசின் எங்கடா..?” கேட்டு கொண்டே..அங்கே வந்தார் ரூமில்ருந்து..
இவர் வேற..”சட்ட பாக்கட்ல இருக்கு பாருப்பா..”என்றதும் எடுத்து காதில் மாட்டி கொண்டார்..அது வரை ஹாலில் நடந்த கூத்து எதுவும் அவருக்கு தெரியாது..
அவருக்கு விவரம் சொல்லுவதர்க்குள் ஒரு பரத நாட்டிய அரங்கேற்றமே செய்ய வேண்டி இருந்தது.. எல்லாவற்றையும் கேட்டவர் மறுபடியும்..ஆஹா பட செவிட்டு தாத்தா போல முதலில் இருந்து ஆரம்பித்தார்..அவரிடம் இருந்து தப்புவதற்காக அம்மாவை ஆசுபத்திரிக்கு கூட்டி கொண்டு போக எத்தனித்தேன்..”
“ டேய் பரசு இரு நானும் வரேன்..எனக்கு இந்த மிஷின் சரியாய் கேக்கல..அதனால டாக்டர்கிட்ட கேப்போம்.” என்றவாறே எனக்கு முன்னால் ஆட்டோவில் ஏறி விட்டார்.
ஆசுபத்திரியில் அம்மா ஒருவர் விடாமல் வந்திருந்த பேஷண்டுகள் உட்பட எல்லோரிடத்திலும் தான் விழுந்த சமாச்சாரத்திலுருந்து தனக்கு ஆர்தேரிடிஸ், அதுக்கு தைலம் தடவுவது உட்பட எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள்.. டாக்டர் அம்மாவை செக்கப் செய்து விட்டு சுளுக்கு விழுந்துள்ளதாகவும், அதற்காக ஊசியும்,போட்டு மருந்தும் எழுதி கொடுத்தார்..அம்மாவுக்கு நம்பிக்கை இல்லை..எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப்பார்த்து விடலாம்..இல்லை என்றால் ஒரு ஆர்த்தோ டாக்டரை பார்க்கலாம்னு ஒபினியன் கொடுத்தாள். அம்மாவிடம்,…. டாக்டர் கன்வின்ஸ் செய்வதற்குள் அவர் பொழப்பு நாறிவிட்டது..அரை மனதோடு இருந்த அம்மாவை வெளியே கூட்டி வந்து வெராந்தாவில் ஒரு சேரில் உக்காரவைத்து விட்டு அப்பாவை கூட்டிக் கொண்டு இ.என்.டி இடம் சென்றேன்..அம்மாவின் படுத்தலில் பாதி ஆவி எனக்கு போய் இருந்தது . மீதி இருந்ததை காது கேளாத என் அப்பா வாங்கி விட்டார். ஒரு வழியாக ஆசுபத்திரி படலம் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது மதியம் மணி இரண்டு..அமிர்தம் விஷயம் கேட்டதும் எங்கம்மாவையும் அப்பாவையும் அர்ச்சனை செய்து எனக்கு பிரசாதம் கொடுத்து விட்டாள்..
சாப்பிட்டு விட்டு மீதி கதையை தொடரலாம்…மீதி கதையா..!கதை எழுத ஆரம்பிக்கவே இல்லையே..சாப்பிட்டதும்..தூக்க தேவதை கண்களில் நடனம் ஆடினாள். அவ்வளவுதான் எழுதுவது மாலைக்கு ஒத்தி வைக்கப் பட்டது..நல்ல ஒரு தூக்கம் போட்டு மாலை ஐந்து மணி ஆனது..அமிர்தம் காபி டம்பளருடன் என் ரூமில் நுழைந்தாள்…ஹாலில் பேச்சு சத்தம்கேட்டுக் கொண்டிருந்தது..
“ என்ன அமிர்தம் ஹாலில் பேச்சு சத்தம் கேக்கிறது..பசங்க வந்துட்டாங்கள..?’
அவளின் முகம் முகவாய் கட்டையில் ஒரு இடி இடித்தது..” ஆங்..பசங்க எப்பவோ வந்துட்டு வெளில போய் ட்டாங்க..இது உங்க அருமை தொங்கச்சியும், அவளோட விளங்காத புருஷனும்..அம்மா விழுந்துட்டங்களேன்னு பாக்க வந்திருக்காங்க..வந்தது வராததுமா என்கிட்டே.ஏன் எண்ணையை கொட்டி வச்சீங்கன்னு ஒரே சண்டை…நானா கொட்டி வச்சேன்..”
எனக்கு தூக்கிவாரி போட்டது..” என் அமிர்தம்..எதுக்கு அவளுக்கேல்லாம் போன் போட்டு வர சொன்னே..வந்தா ஒருவாரம் டே ரா போட்டுடுவாளே..
என் கதை எழுதும் வேலைக்கு உலை வந்திடுமோன்னு பயத்தில் கேட்டேன்.
‘ஆம்மாம்..எனக்கு வேற வேலை இல்ல..போன் போட்டு தகவல் சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேளுங்க..”
“ என்னது நான் போன் போட்டேனா..? எனக்கு நானே சூனியம் வச்சுப்பேனா அமிர்தம்..சத்தியமா நான் இல்ல..”
ஹாலுக்கு வந்தேன்.. எதுக்கு வந்தாங்கன்னு உள்ளுக்குள்ளே தோன்றினாலும் முகத்தில் வலு கட்டாயமாக புன் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு “ வாம்மா..வேணி……”பெயர் கிருஷ்ணவேணி..வாங்க மாப்பிள்ள..” என்று வரவேற்றேன்…வேற வழி..காலங்காலமாக….தமிழர் பண்பாடு..
“ என்ன அண்ணே..அம்மா விழுந்துட்டாங்கன்னு ஒரு தகவல் எனக்கு குடுத்திருந்தா ஆசுபத்திரிக்கே வந்து இருப்பேனே.கேட்டதும் எப்படி துடிச்சு போயிட்டேன் தெரியுமா..?” என்றாள்.
நான் போன் செய்யலன்னு அமிர்தம் தெரிந்து கொண்டாளே அதுவே எனக்கு நிம்மதி..
“உனக்கு யார்மா போனே போட்டு சொன்னங்க..” சொன்னவங்களை மனதுக்குள் சபித்தேன்..
“வேற யாருண்ண பண்ணுவாங்க..அம்மாதான்..” பூனை வெளியே வந்து விட்டது..நான் அம்மாவைப் பார்த்தேன்..
‘அம்மா..”ஆமாண்டா பரசு,… நீ அப்பாவை கூட்டிகிட்டு போனதும் அந்த சேர்ல ஒக்காந்திருந்தேனா..பக்கத்துல இருந்த பைய்யன் கிட்டே செல் போன் இருந்துச்சி..அதான் வாங்கி இவளுக்கு விவரம் சொன்னேன்..அவ இப்படி வந்து நிப்பான்னு எனக்கு தெரியாது..”
“அட நீ என்னம்மா..உனக்கு ஒண்ணுன்னா உடனே ஓடி வர மாட்டேனா நானு..” என்றாள் என் தங்கை வேணி..
அமிர்தம் மனசுக்குள்ளேயே..” ஆமா அம்மாளை ரெண்டு நாள் கொண்டு வச்சுக்க துப்பு இல்ல..பேச்சுமட்டும் வக்கணையா பேசுவா..” என்றாள்.
மொத்தத்தில் அன்றய பொழுது என் கதை எழுதும் ஆர்வத்தை ஒன்றும் இல்லாமல் பறித்துவிட்டது..பாப்போம் இன்னும் இருபத்துஒன்பது நாள் இருக்கே..என் மனதை சமாதான படுத்திக்கொண்டேன்.
மறுநாள் பொழுது விடிஞ்சது..எப்படியும் என் தங்கையும் அவள் புருஷனும் இன்னும் ஒரு வாரத்திற்கு இங்கேதான் என்பது உறுதியாகி விட்டது..வீட்டில் இருந்து கொண்டும் கதையெழுதும் சூழ்நிலை இல்லை..என்ன செய்வது என்று யோசித்தேன்..
எனக்குள் ஒரு பொறி தட்டியது..பேசாமல் ஏதேனும் ஒரு பார்க்கில் போய் உட்கார்ந்து விடுவது என்று..எந்த பார்க் போவது..? பனகல்..இல்ல….வேண்டாம்…அங்கே ஒரே இரைச்சல இருக்கும்..ஜீவா ..அதுவும் வேண்டாம்..நடேசன்…நோ..நோ..இறுதியில் யாரும் இல்லாத ஒரு பார்க் வேண்டும் என்று கே.கே.நகர் சிவன் பார்கைத் தேடிப் போனேன்…அங்கு ஒரு மூலையில் சீரியல் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. இன்னொரு மூலையில் இருந்த சிமென்ட் பெஞ்ச்சில்..யாரும் இல்லை..
ச்சே ச்சே..வரவர பார்க்கில் இடம் பிடிப்பது கூட இவ்வளவு கஷ்டமா..? கல்யாண பரிசு காலமெல்லாம் மலை ஏறிவிட்டது..தங்கவேலு கொடுத்து வைத்தவர்..காலியாக இருந்த அந்த பெஞ்சில் இடம் பிடித்து..என் உபகரணங்களை வெளியே எடுத்து பேப்பரில்..பிள்ளையார் சுழி போட்டேன்..கற்பனை குதிரை பிடரியை சிலிர்த்துக்கொண்டு புறப்பட்டது ‘


கதை ஆரம்பம்..பொழுது விடிஞ்சது..கண்களை கசக்கிக் கொண்டே எழுந்தேன்..என் மனைவி கையில் காபி கப்புடன் நின்றாள்..வாசலில்” சார்..சார்.” என்று ஒரு குரல்…
நிஜமாகவே என் காதுகளில் சார்..சார்..என்று ஒரு குரல்..திரும்பினேன்..பெஞ்சின் மற்றொரு பக்கத்தில் ஒருவர்..ஐம்பது வயது இருக்கலாம்..நீட்டாக ட்ரெஸ் பண்நீருந்தார்…
என்னைப்பார்த்து..” என்ன சார்..கதை எதாச்சும் எழுதறீங்களா..கதாசிரியரா…இல்ல சினிமா க்காரர..” என்றார்..எப்படியோ..நான் ஒரு எழுத்தாளங்கறது..இவருக்கு தெரிஞ்சி இருக்கேன்னு ஒரு சந்தோசம்..
“ஆமாம்..எழுத்தாளன்தான்..பல வருஷங்களுக்கு முன்ன விகடன்., குமுதம்னு நான் எழுதாத பத்திரிகையே கிடையாது..அப்புறம்..அரசாங்க உத்யோகத்துல ஓய்வில்ல..அதனால நேரம் இல்ல.. விட்டுப் போச்சு..இப்பதான் நேரம் கிடைச்சுது..வீட்டு சூழ்நில அமைதியா இல்ல…அதான் இங்க;;” சர மாரியாக அளந்து விட்டேன்..”ஆமாம்..நீங்க..” என்று அவரை கேட்டேன்.
“சார்..நான் ஒரு ப்ரோட்யுசெர்..சினிமா எல்லாம் எடுத்தேன்..இப்போ சீரியல் எடுத்துகிட்டு இருக்கேன்..அதோ அந்த மூலைல எடுத்துகிட்டு இருக்காங்களே..அது என் சீரியல் ஷூட்டிங்க்தான்..” என்றார் ..அவர்மீது எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது..
அவர் …”ரொம்ப சந்தோஷம் சார்..உங்கள மாதிரி ஒரு புது கதாசிரியர்தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன்..இந்த சீரியல் இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துல முடிஞ்சிடும்..புதுசா சீரியல் ஆரம்பிக்கணும்…ஒரு புது எழுத்தாளரை அறிமுகம் செய்யலாம்னு இருக்கேன்..” என்றார்..என் மீது தேவதைகள் பூமாரி பொழிந்தனர்..எவ்வளவு பெரிய சந்தர்ப்பம்…கடவுளே..இவர் மனசுல புகுந்து அந்த கதைய நாந்தான் எழுதணும்னுசொல்ல வச்சிரு..உனக்கு பால் அபிஷேகம் பண்றேன்னு..மனசுக்குள்ளயே வேண்டிகிட்டேன்..கடவுள் என் கோரிக்கைய பரிசிலிச்சுட்டார்..

“அடுத்த சீரியல் உங்க கதைதான்..ஒரு எபிசொடுக்கு
ஆயிரம் ரூபா தரேன்..என்ன சொல்றீங்க..”
கரும்பு தின்ன கூலியா..? அப்படின்னுதான் நான் சொல்லுவேன்னு எதிர் பார்த்தீங்களா..அதான் இல்ல..அவர் சொன்னதும் நான் ஓகே சொல்லிட்டா..நான் ஒரு சாதாரண எழுத்தாளன்னு நினச்சிடுவார் இல்ல..கொஞ்சம் பிஸின்னு காமிக்கனுமே..தொண்டய செருமிக்கொண்டு
.”ஆங்..நீங்க சொல்றது சரிதான் ..இப்ப நான் கொஞ்சம் பிஸி..விகடன்ல கதைகேட்டு இருக்காங்க..அப்புறம் கல்கிக்கு ஒரு தொடர் எழுதணும்..இது தவிர..சின்ன சின்ன பத்திரிகைகாரங்களெல்லாம் வேற தொந்தரவு பண்றாங்க..பரவா இல்ல..நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..உங்களுக்கு நான் எழுதறேன்..எப்போ சீரியலுக்கு எழுதணும்னு சொன்னீங்க..?”
கூடிய சீக்கிரம்…இந்தாங்க என் விசிடிங் கார்டு.உங்க கார்டை குடுங்க..நான் காண்டாக்ட் பண்றேன்..
எனக்கு ஏது கார்டு கவர் எல்லாம் ..ஹி ஹி…என்று அசிங்கமான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு “கார்டு வீட்டுல வச்சிட்டு வந்துட்டேன்…கதை எழுததானே போறோம்..கார்டு எதுக்குன்னு..பரவா இல்லசார்..நான் என் செல் நம்பர் தறேன்னு சொல்லி, வச்சிருந்த பேப்பரை கிழித்து அதில் நம்பர் எழுதி கொடுத்தேன்..
அவர் வாங்கி கொண்டு”ஓகே சார்..ரொம்ப தாங்க்ஸ்..” என்றார்..
அந்த நிமிடமே என் மனம் வானில் பறந்தது..என் முன்னால் சான் மீடியா, ராடன், விகடன் டெலிவிஸ்டா..ஆகிய சீரியல் ப்ரோடுசெர்கள் எல்லாம் வரிசையாக காத்திருந்து..எபிசோடுக்கு வசனம் எழுதி வாங்கி போனார்கள்..ஒரு எபிசோடுக்கு ஆயிரம்..ஒரு நாளைக்கு ஐந்து என்றால் கூட ஒரு நாள் வருமானம் ஐயாயிரம்..மாசத்துக்கு..மனக்கண் முன்னே..என் எதிர்காலம்..பிரகாசமாக இருந்தது..எபிசோடுக்கு வசனம் எழுத அவன் அவன் என்று முண்டியடித்துக்கொண்டுநின்றனர்..சார்..சார்..என்று..என்னை துளைத்து விட்டனர்..
“சார்..சார்..”..”அய்யா அய்யா….”
இங்கே என்னை யார் கூப்பிடறதுன்னு..திரும்பினேன்..பக்கத்தில் இருந்த அந்த ப்ரோட்யுசெரை தான் ஒரு ஆட்டோ காரர் கூப்பிட்டு கொண்டிருந்தார்..” என்ன அய்யா..உங்களை எங்கெலாம் தேடறது..ஆட்டோவிலேயே இருங்கன்னு சொல்லிட்டுதானே பக்கத்துல எங்க வீட்டுக்கு போய் ஒரு வா சாப்பிட்டு வரலாம்னு போனேன்..அதுக்குள்ளார..இந்த பார்க்ல வந்து உக்காந்த்துட்டீங்களே ..என்றவன்…” என்னை பார்த்து.
.” இவர் இப்படி தான் சார்..எங்கனாச்சும் சூட்டிங் நடந்துச்சுனா..அங்க போய் உக்கார்ந்துடுவாருங்க..பாவம் வாழ்ந்து கெட்டவர்..ஒரு காலத்துல ஓஹோன்னு இருந்த சினிமா ப்ரோடுசெருங்க…நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வந்து இப்ப மெண்டல் ஆகிட்டார்..ஹூம்..என்னத்த சொல்ல..”என்று பெருமூச்சு விட்டபடி அவர அழைத்துக் கொண்டு போனார் அந்த ஆட்டோ ட்ரைவர்..
என் கதை இன்னும் ஆரம்பே ஆகவில்லை ..எந்த நேரத்தில் “ பொழுது இன்னும் புலரவில்லை.” என்று ஆரம்பித்தேனோ.. அங்கேயே நின்று விட்டது..
வீட்டை நோக்கி நடை கட்டினேன்..
மறுநாள் காலை வழக்கம் போல் எழுந்து..” அமிர்தம்..நான் ஆபீஸ் கிளம்பறேன்..டிபன் எடுத்து வை..” என்றேன்..அவளின் கண்களில் ஒரு நிம்மதி தெரிந்தது..
மாம்பலம் ஸ்டேஷன் நோக்கி நடை ….மீண்டும் அதேஆபீஸ்..அதே பைல்..அதே காதர் பாட்சா..”
“ஹூம்..செக்கு மாடுகளுக்கு சுதந்திரம் இல்லை..
**

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: