ஊண் உறக்கம் தவிர்த்த உன்னத புருஷர்கள்

       அயோத்தி மாநகரில் ஆட்சீபீடத்தில் அமர்ந்து தசரத மகாசக்ரவர்த்தி மந்திரிப் பிரதானிகளுடன் ராஜ்ய பரிபாலனம் பற்றி ஆலோசித்து கொண்டு இருக்கின்றார்.. வாயிலில் அண்டம் யாவும் நடுங்கும் வண்ணம் ஒரு அதிர்ச்சி..வாயிற்காப்போன் விஸ்வாமித்திர மகரிஷி வருகையை கட்டியங் கூறி அறிவிக்கின்றான்..தசரதனுக்கு உள்ளம் நடுங்கியது..என்ன விஷயமாக அவர் வந்திருக்கிறாரோ என்று அச்சம்.. இருப்பினும் இருக்கையை விட்டு எழுந்து ” வர வேண்டும் வர வேண்டும்..ராஜ ரிஷியே.. இந்த ஏழையின் குடிசையில் தங்கள் பாதம் பதிய நான் என்ன தவம் செய்தேனோ!!” என்று மிகவும் மரியாதையுடன் வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்து ஆசனம் அளித்தான்..அதே நேரத்தில் வசிஷ்ட மாமுனிவரும் அவரை போற்றி வரவேற்றார்..

  வந்த முனிஸ்ரேஷ்டரை வரவேற்று தசரதர், ” தபோநிதியே!  உமது வரவினால் நான் அமிர்தம் பெற்றவனைப் போல மகிழ்ச்சி அடைகிறேன்..மழை பெய்யாத தேசத்தில் மழை பெய்ததினால் உண்டாகும் சந்தோஷத்தை அடைகிறேன்.. புத்திரன் இல்லாமல் வருந்துபவர்களுக்கு தமக்குரிய மனைவியிடத்தில் புத்திரன் பிறந்ததனால் அடையும் ஆனந்தத்தை அடைகிறேன்!. தங்களுக்கு எந்த காரியத்தையும் எப்படி நடத்தித் தர வேண்டுமோ அப்படியே செய்ய சித்தமாயிருக்கிறேன்..நீரே என் தெய்வம்.. ஏதாவது காரியம் கருதி வந்திருந்தாலும் அதைச் சொல்லி அருள வேண்டும். எப்படி ஆனாலும் பணிவிடை செய்ய விழைகிறேன்.. உமது கட்டளையை செய்ய காத்திருக்கிறேன்” என்றார்..

   மனம் மகிழ்ந்த முனிவரும் தசரதர் எதிர் பாராத ஒரு வேண்டுகோளை வைத்தார்…” ஹே!! ராஜசிங்கமே!!.. மேலான குலத்தில் பிறந்து வசிஷ்டரைக் குருவாகக் பெற்று இருக்கிற உம்மைத் தவிர யாவருக்கு இப்படி மரியாதையாய் பேசத் தெரியும்..?  நான் நினைத்துக் கொண்டு வந்த காரியத்தைச் சொல்கிறேன்..நன்மை அடைவதற்கு ஒரு யாகம் செய்யத் தொடங்கி இருக்கிறேன்.. வேண்டிய வடிவம் எடுத்து கொள்ளும் திறன் படைத்த மாரீசனும், சுபாஹுவும் அதைக் கெடுக்க காத்திருக்கிறார்கள்.. யாகம் முடிவு பெறும் சமயம், அவ்விருவரும் அந்த யாகத்தை கெடுக்க மாமிசத்தையும் ரத்தத்தையும் கொண்டு வந்து கெடுக்கிறார்கள்.! அவர்கள் என் யாகத்துக்கு செய்யும் விக்னத்தை கண்டு மனம் வருந்தி ஆஸ்ரமத்தை விட்டு வந்து விட்டேன்.. நான் பட்ட பிரயாஸை எல்லாம் வீணாகி விட்டது.. நான் யாக தீட்சையில் இருப்பதனால் அவர்களைக் கோபிக்கலாகாது..இது சாஸ்த்திர விதி. ஆகையால் அவர்களை சபிக்க எனக்கு எண்ணம் இல்லை.!இதற்காக உமது மூத்த பிள்ளையான ஸ்ரீ ராமனை அழைத்து போக வந்திருக்கின்றேன்.. அவன் சிறு பிள்ளை ஆனாலும் அவன் மகா சாமர்த்தியசாலி..அவனை நான் பத்திரமாக என் ஆஸ்ரமத்திற்கு அழைத்து போகிறேன்.. இந்த காரியம் முடிவதற்கு அவனுக்கு சகல அஸ்திரங்களையும் கற்றுக் கொடுப்பேன்.. அவன் இந்த விக்னத்தை நீக்கி வெற்றி பெறுவான் என்பது சர்வ நிச்சயம்.. ஸ்ரீ ராமனுடைய கீர்த்தியும் மூவுலகமும் அறியும்..” என்றார்.

     இதைக் கேட்ட மாத்திரத்தில் தசரதர் அஞ்சி மூர்ச்சையானார்.. பிறகு தெளிந்து விஸ்வாமித்திரரிடம் பலவாறு கோரிக்கை வைத்தார்.. ஸ்ரீ ராமனுக்கு பதிலாக தானே தமது சேனைகளுடன் வந்து அந்த அரக்கர்களை அழிப்பதாகச் சொன்னார்.. ஆனால் விஸ்வாமித்திரர் கடும் கோபம் கொண்டு அந்த இடத்தை விட்டு அகல முயற்சித்தார்.. வசிஷ்டர் உடனே தசரதனுக்கு எடுத்து சொல்லி ஸ்ரீ ராமனையும், அவரோடு லக்ஷ்மணனையும் அனுப்பி வைக்க அறிவுறுத்தினார்.. முடிவாக தசரதர் அவர்களை அனுப்பி வைத்தார்..

   அவர்களை அழைத்து கொண்டு முனிவர் வனம் சென்றார்!! வனத்தில் முதலில் தாடகை  எனும் அரக்கியை வதம் செய்து மேலும் முன்னேறினார்கள்.. அவர்களுக்கு சுஷ்காசனி, ஆர்த்திராசனி என்ற அஸ்திரங்களையும், பிநாகாஸாதிரம், நாராயணாஸ்திரம, ஆக்னேயாஸ்த்திரம் முதலான இன்னும் பல அஸ்திரங்களையும் கொடுத்தார்.!

இராம லக்ஷ்மணர்களுக்கு ஸம்ஹார மந்திரத்தை உபதேசித்தார்.. மேலும் பல மந்திரங்களும் உபதேசித்தார்.. அவற்றில் ஒன்று ” பலா, அதி பலா” எனும் இரண்டு மந்திரங்கள்..இவற்றினை ஜெபித்தால் பசி, தூக்கம், இயற்கை உபாதைகள் ஏதும் ஏற்படாது.. அந்த மந்திரம் இது தான்:

  ” ஓம் ஹ்ரீம் பலே மஹாதேவி ஹ்ரீம் அதிபலே ஸ்வாஹா!

     ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் பலே அதிபலே மஹாபலே பிரம்ம பலே ரக்ஷரக்ஷ ஹூம் பட் ஸ்வாஹா!!”

      அந்த மந்திரங்களின் பயன் பின்னர் பயன்படும் என்பது விஸ்வாமித்திர மகரிஷிக்கும் தெரியும், ஸ்ரீ ராமனுக்கும் தெரியும்.. ஆம்!! பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளின் காரணமாக ஸ்ரீ ராமபிரான் வனவாசம் சென்ற போது இந்த மந்திரங்கள் தான் அவருக்கு பயனை அளித்தது..

  அது சரி.. உணவும், உறக்கமும் தவிர்க்கும் வித்தை தெரிந்தவர் ஸ்ரீ ராமன்.. ஆனால், நாம் அன்றாட வாழ்வில், யாரேனும் வேலை எதுவும் சரியாகச் செய்யாமல் சாப்பாடு ஒன்றே குறியாக உள்ளவரை சாப்பாட்டு ராமன் என்று கிண்டல் செய்கிறோம்..அது எப்படி?  கண்ணனாவது வெண்ணெய், தயிர் போன்றவற்றை திருடித் தின்றான்.. ஆனால், ராமனோ, சூதுவாது தெரியாத அப்பாவி.. இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணர் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவருக்கு பலவிதமான பட்சணங்கள், வெண்ணெய் மற்றும் தயிர், பழவகைகள் வைத்து நிவேதனம் செய்கிறோம்.. ஆனால், பாவம் ராமர் பிறந்த நாள் ராமநவமி அன்று நீர்மோரும், பானகம் மட்டிலுமே நிவேதனம்.. அப்படி என்றால் சாப்பாட்டு கிருஷ்ணன் என்று தானே சொல்லி இருக்க வேண்டும்.. அதற்கும் ஒரு காரணம் இருக்கலாம்..

     விஸ்வாமித்திரர் உடன் காட்டுக்கு சென்றிருந்த போது கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் தங்கினர்.. அங்கே சபரி என்கிற ஒரு வயதான மூதாட்டி இருந்தாள்.. அவள் இராமனின் வரவுக்காக பல ஆண்டுகள் ராம ஜெபம் செய்து கொண்டு காத்திருந்தாள்.. அந்த நாளும் வந்தது.! இராமனுக்கு தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்தாள்.. உண்ணுவதற்கு கனிகளைப் பறித்து வந்து அதனைக் கடித்துப் பார்த்து சுவை மிகுந்த கனிகளை ராமனுக்கு கொடுத்தாள்.. அவள் எச்சில் படுத்தி கொடுத்ததை அந்த கருணாமூர்த்தி கனிவுடன் ஏற்றுக் கொண்டார்..பக்தையின் எச்சிலானாலும் அதில் சபரியின் பாசம் தெரிந்தது, பக்தி தெரிந்தது..ஆகவே அவள் கொடுத்த சாப்பாட்டிற்கு மரியாதை தந்தார்

   அதே போல கங்கைக் கரையில் படகோட்டியும், வேடுவனுமான குகன் அளித்த தேனையும் மீனையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.. இங்கேயும் பாசம், பரிவு, பக்தி எல்லாவற்றுக்கும் மேலாக நட்பு முன்னின்றது. ஆகவே இவ்விரண்டு நிகழ்வுகளுமே ராமனுக்கு சாப்பாட்டு ராமன் என்ற பெயர் ஏற்பட காரணமாக இருக்கலாம்..

  இன்னொரு நிகழ்வு 2012 ஆம் ஆண்டு தினமணியில் வந்த கட்டுரை தற்செயலாக படிக்க நேர்ந்தது.. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

   ஒரு முறை சுவாமி விவேகானந்தர் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஒரு ஊருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்..

அவரிடத்தில் பணம் ஏதுமில்லை.. அதனால் ரயிலில் ஏதும் வாங்கி உண்ண முடியவில்லை.. ஆனால், அவருடன் பயணம் செய்த ஒரு வியாபாரி, எல்லா ரயில் நிலையங்களிலும் ஏதாவது வாங்கி சாப்பிட்டு கொண்டே இருந்தான்.. அதோடு மட்டுமல்லாமல் விவேகானந்தரைப் பார்த்து சாப்பிட வழி இல்லாதவன் என்று சொல்லி கேலியும் கிண்டலும் செய்தபடியே இருந்தான்.. ஆனால், விவேகானந்தர் அவனைப் பொருட்படுத்தவில்லை.. ஆனாலும் அவன் தனது கேலி கிண்டல்களை விடுவதாக இல்லை.. அவர் இறங்க வேண்டிய தாரிகோட் ரயில் நிலையம் வந்தது..அவர் இறங்கி அங்கிருந்த ஒரு மர நிழலில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்.. பசியும் தாகமும் அவரை மிகவும் சோர்வடைய செய்து இருந்தன.. அந்த வியாபாரியும் அங்கே இறங்கி வந்து தனது கிண்டல்களைத் தொடர்ந்தான்.. அப்போது அங்கு ஒருவன் வேகவேகமாக ஒடி வந்து விவேகானந்தரிடம் ” சாமி! இங்கே இருக்கீங்களா? உங்களுக்கு தான் சாப்பாடு.. என் ராமன் கொடுக்க சொன்னார்..” என்று ஒரு சாப்பாட்டு பொட்டலத்தை நீட்டினான். கூடவே தண்ணீரும் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து இருந்தான்.. சுவாமி விவேகானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை..அவனை ஏதோ கேட்க வேண்டும் என்று எண்ணும் நேரத்தில் அவன் மீண்டும் சொன்னான்..” இல்ல சாமி.. நான் இந்த ஸ்டேஷனில் தான் வேலை செய்யறேன்..அதோ அந்த பெஞ்சிலதான் படுத்துகிட்டு இருந்தேன்.. கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. நான் கும்பிடற ராமன் என் கனவுல வந்து ஒன்ன காமிச்சு..அவரு பசியோட இருக்காரு! போய் அவருக்கு சாப்பாடு ஏதும் வாங்கி கொடு..அப்படீன்னாரு.. நான் முழிச்சு பாத்தேன்.. சரி ஏதோ கனவுதானேன்னு திரும்பத் தூங்கிட்டேன்.. அவரும் திரும்ப வந்து ஏண்டா மடையா! அவர் பசியோட இருக்காரு சாப்பாடு வாங்கி கொடுன்னு சொன்னேன்.. திரும்பவும் தூங்கறியா? அப்படீன்னு சத்தம் போட்டாரு, அதான் வாங்கிகிட்டு ஓடி வர்றேன்” அப்படீன்னு சொன்னான்.. விவேகானந்தர் அந்த வியாபாரியைப் பார்த்தார்.. அவன் தலை குனிந்தது..

   இந்த நிகழ்வு அந்த கருணாமூர்த்தியின் மற்றோருமுறை அவனது எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது..” கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும்” உணவு அளிக்கும் சர்வ குண போதன்.. தான் உணவை தவிர்க்க மந்திரங்கள் கற்றறிந்தவன் தனது பக்தர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் உணவு அளிக்கின்ற அந்த கருணக் கடலை வாயாரப் பாடி மனமார நினைப்போம்

  ஜெய் ஸ்ரீ ராம்!!!!                                      ஜெய் ஸ்ரீ ராம்!!!!

Dear Readers

This is a writeup about the power ful mantra called” Bala, Athi Bala” taught by Rishi Viswamithra to Lord Sri Rama and Lakshmana during their course of journey in the woods to kill Maricha and Subagu, the demons.. The mantra if recited will not allow hunger and sleep to occupy the human life..It was used by Rama and Lakshmana later..

Once Swamy Vivekananda was traveling in train in UP..He was penniless and could not buy anything..A co-passenger was buying foods and snacks and eating, he never offered anything to Swamy, instead, he was teasing..It continued till Swamy got down his destination station called Tharicot.. Swamy sat in a bench under a shadow tree..He is still starving.. The other man also got down and continued his teasing..By that time one man came rushing towards Swamy and gave a packet of food and water. He said he was working in the Railway station and was sleeping in a bench on the other side. Lord Rama whom he always worship came in his dream and ordered him to provide food to Swamy.. That is the kindness of Rama..Though he learnt to live without food he is not allowing the Bakthas to starve.

Jai Sriram!!! Jai Sriram!!!!

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: