” எங்கெல்லாம் தேடறது!! இந்த தே……..சிறுக்கி துட்ட எங்க வச்சிருக்கான்னு தெரியலையே..கைகாலெல்லாம் வடவடங்குது..நாக்கு வேற நமநமங்குது…ஹும்! இப்ப என்ன செய்யறது…சாமி படத்தாண்ட உண்டியல் வச்சிருப்பாளே..ஒடச்சிட வேண்டியதுதான்.. ஆங்!! அட! இங்கணயும் காணலயே? எங்க வச்சிருப்பா? கடவுளே!கடவுளே!! கடை வேற தொறந்து இருப்பான்.. அதுக்கும் க்யூவுல தள்ளி தள்ளி நிக்கணும்… டோக்கன் தீந்திடுச்சுனா?.. கடவுளே..என்ன இப்புடிக்கு செய்ற?”
” கூப்பிட்டாயா அப்பா?”
” யாரு?”
நாங்க தான் நீ கூப்பிட்ட கடவுள்”
” நான் இன்னும் ஊத்திக்கவே இல்ல…ரெண்டா தெரியுது?”
” இல்லப்பா! நாங்க ரெண்டு பேருமே கடவுள்கள் தான்!! நான் தன்வந்திரி, அவரு தர்மராஜா.. நான் ஆயுள கொடுக்கறவன்.!அவரு ஆயுள எடுக்கறவரு”
” சரி..அதுக்கு இன்னா இப்போ?”
” இல்லப்பா நீ கூப்பிட்ட…எங்கள்ல யாரு வேணும் உனக்கு?”
” எனக்கு ஆரும் வேணா…துட்டு தான் வோணும்..வச்சுகுறியா?”
” துட்டு? அப்படி என்றால்?”
” அட! இன்னாபா? துட்டு தெரியாதா? காசு பணம் துட்டு மனி!! வளவளன்னு பேசாம துட்ட கைல வச்சிட்டு போய்கினே இரு.. எனக்கு சரக்கு வாங்க போணம்”
” ஏம்பா!! மளிகை கடை வச்சிருக்கியா?”
” யோவ் ஏன்யா ரவுசு பண்ற?”
” ரவுசு!!?”
” துட்ட குடுய்யா.. போய் ஒரு கட்டிங் போட்டு வந்துட்றேன்..”
” கட்டிங்கா.!!? ஓ!! முடி வெட்டிக்க போறயா?.. சம்மர் கட்டிங்கா? ஸ்டெப் கட்டங்கா? உனக்குத்தான் மண்டைல மயிரே இல்லையே!!?”
” யோவ்!!ஒன்னோட ரம்ப பேஜாரா கீது..”
” பேஜாரா..? தர்மராஜரே.. இவன் ஏதோ தேவ பாஷைல பேசுகின்றான்!!”
” என்னது!!? தேவரா!!? நாங்க நாய்க்கருங்கப்பா..!!”
“சரி..நீ இன்னும் எங்களுக்கு பதில் சொல்லலியே..எங்கள்ல யாரு வோணும்…சீசீ.. வேணும் உனக்கு?”
” யோவ்..வாணாம்..சதாய்க்காத..! ஏ முனிமா..இங்கண வா..இவனுங்கள என்னன்னு கேளு..”
” முனிமா? உன் தர்மபத்தினியா?”
” தர்ம….பத்தினியா? இஸ்துகினு வந்ததுபா..”
” இஸ்துகினா… நாராயணா..! ஒண்ணும் புரியவில்லை..”
” அட…அவள இஸ்துகினுதான்.. வந்தேன்”
“ஓஓ! புரிகிறது.. கூட்டிக்கொண்டு வந்தாயா?” எங்கிருந்து?”
“ஆங்…எங்கேருந்து இஸ்துகினு வருவாங்க… அவன் புருஸன் வூட்லருந்துதான்..”
” என்னது? அவன் புருஷன் வீட்டில் இருந்தா?.. அவள் புருஷன் ஒன்றும் சொல்லவில்லை?”
” அஅங்காம்!! இன்னாத்த சொல்றது.. அவன் தான் எம் வூட்டுக்காரிய தள்ளிகினு பூட்டானே..”
” தள்ளிகினா? ஓஓ அவன் இஸ்துகினு..சேசே.! அழைத்து கொண்டு போய் விட்டானா?..எக்சேஞ்ச் ஆஃபர் போல.!”
” யோவ்.. நான் முன்னமே சொன்னேன்..துட்டு கொடுத்தா கொடு இல்ல எடத்த காலி பண்ணு…… யோவ்.. யோவ்.. நான் சொல்லிகினே கீறேன்…ஆஆ… அடப்பாவி…துட்டு இல்லன்னா சொல்ல வேண்டியது தானே?…அதுக்கினு மூஞ்சில தண்ணி ஊத்திட்டு போற…!!!”

” ஆங்!! குடிச்சிட்டு வந்து நடு ஹால்ல படுத்துகினு கெடந்தா..மூஞ்சில. தண்ணி ஊத்தாம..பன்னீரா ஊத்துவாங்க? அட சீ!! எந்திரியா..!”
” முனிமா.!நீயா.! அந்த தண்ணில அப்டியே கொஞ்சம் சரக்க ஊத்தி ஊத்தேன்…ஹிஹி..”
” அடச்சீ…ஒன்னெல்லாம் திருத்தவே முடியாது..ய்யா!!!”