சென்ற பதிவில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார் என்று பதிவை முடித்திருந்தேன்.. புராணங்களின் படி வசுதேவர் குகுர குல மன்னனான அஹுஹனின் இரண்டாவது மகனான தேவகனின் மகள் தேவகியை மணந்தார். இவர்களின் எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார்..

ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகிறது.. ஸ்ரீ கிருஷ்ணர் திருமாலின் அவதாரமாகக் கருதப்படுகிறது..அவரை ஒரு குறும்புக் குழந்தையாக, முன் மாதிரி காதலனாக பல வகைகளில் சித்தரிக்கப் படுகின்றன.!அரிவம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணத்திலும் காணப் படுகின்றன..
கிருஷ்ண வழிபாடு பாலகிருஷ்ணன் அல்லது கோபாலன் என்ற பெயரில் 4வது நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் பல ஆதாரங்கள் தெளிவாக்குகின்றன..சிலப்பதிகாரத்தில் கண்ணன் பற்றி கி.பி 2ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் கூறியுள்ளார்..கி.பி 10ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கங்களின் மூலமாக கிருஷ்ண வழிபாடு உச்சத்தை அடைந்தது.. குறிப்பாக ஒரிஸ்ஸா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதன், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன், துவாரகையில் துவாரகதீசர், இமயத்தில் பத்ரி நாதர் எனப் பல்வேறு இடங்களில் கோயில் கொண்டுள்ளார்..1960 களில் உருவாக்கப்பட்ட இஸ்கான் அமை கிருஷ்ண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளிலும் கொண்டு சென்று பரப்பியுள்ளது.. மேலும் 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டின் வரை வாழ்ந்த ஆழ்வார்கள் கண்ணனை பல்வேறு விதமாக பாசுரங்கள் மூலமாக வழிபட்டுள்ளனர்..

கிருஷ்ண என்றால் கரிய நிறம் உடையவன் என்று பொருள்.!பெண்களை வசீகரிப்பதால் மோகன் என்றும், பசுக்களை மேய்ப்பதனால் கோவிந்தன் என்றும் அவைகளைப் பாதுகாப்பதினால் கோபாலன் என்றும் அழைக்கப்பட்டார்.. அதேபோல் கோகுலத்தில் வாழ்ந்ததால் கோகுலன் என்றும் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாகப் பிடித்ததால் கோவர்த்தனன் என்றும், இராதையின் காதலன் என்பதால் ராதாகிருஷ்ணன் என்றும் வசுதேவர் மகன் என்பதால் வாசுதேவன் என்றும் அழைக்கப்பட்டார்.. ஸ்ரீ கிருஷ்ணரின் கதை ஸ்ரீ மத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது..

இளமைக் காலத்தில் பல லீலைகளை செய்த கண்ணன் பின் மதுராவில் கொடுங்கோல் ஆட்சி செய்த கமஸனையும் அவன் நண்பன் சாணூரனையும் வதை செய்தார்.. அவனது தந்தை உக்கிரசேனரை அரசனாக்கினார்..பின்னர் ஜராசந்தன் மற்றும் கால்யவான் ஆகியோரின் தொடர் தொல்லைகள் ஏற்பட்டன..ஆகவே கிருஷ்ணர் தமது நாட்டு மக்களுடன் சௌராஷ்டிரத்தில் கடற்கரையோரம். ஒரு புது நகரத்தை உருவாக்கி, அதற்கு துவாரகை என்று பெயரிட்டு அங்கே அரசராக வாழ்ந்து வந்தார்..அந்நாடு அனர்த்த நாடு என்று அழைக்கப்பட்டது..

கிருஷ்ணருக்கு எண்மனையாட்டிகள் அல்லது அஷ்டமன்யா என்ற பெயரில் எட்டு மனைவிகள் இருந்தனர்.. அவர்கள் ருக்மணி, சத்தியபாமா,ஜாம்பவதி, காளிந்தி, நக்னசித்தி, மித்திரவந்தை, இலக்குமணை,பத்திரை ஆகியோர்.. ஆயினும் பெரும்பாலும் ருக்மணி மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருமே பிரதானமாக ஸ்ரீ கிருஷ்ணர் வரலாற்றில் பேசப் படுபவர்கள்..
இந்த எட்டு மனைவிகள் பற்றி சிறு குறிப்புகளை அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்..