கீதையின் நாயகன்

ஸ்ரீ பகவான் உவாச

” குதஸ் த்வா கஷ்மலம் இதம் விஷமே ஸமூபஸ்திதம்

அனார்ய ஜூஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்த்தி கரம் அரஜுன”

குரக்ஷேத்திரப் போர்களத்தில் தன்னுடைய தாத்தாக்களை, சகோதரர்களை, குருவினை எதிர்த்து எப்படி நான் போர் தொடுப்பேன் என்று மயங்கி நின்ற அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்:

எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இது போன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தையே கொடுக்கின்றன”

இவ்வாறு புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார் என்று பகவத் கீதை அத்தியாயம் இரண்டு பதம் இரண்டில் சொல்லப் பட்டுள்ளது..

கிருஷ்ணர் என்றாலும் புருஷோத்தமன் என்ற முழுமுதற் கடவுளான பகவான் என்றாலும் ஒன்றே.. ஸ்ரீ கிருஷ்ணர், கீதை முழுவதுமே ‘பகவான்’ என்று அழைக்கப்படுகிறார். பகவான் என்பது பூரண உண்மை நிலையின் இறுதி நிலையைக் குறிக்கும்..அருவமாக எங்கும் நிறைந்திருக்கும் தன்மை கொண்ட பிரம்மன், எல்லா உயிர்களின் இதயத்திலும் வசிக்கும் முழுமுதற் கடவுளின் ரூபமான பரமாத்மா, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பகவான் ஆகிய மூன்று நிலைகளில் பூரண உண்மை உணரப் படுகின்றது.. ஸ்ரீ மத் பாகவதத்தில் (1. 2.11) இது பற்றி கூறும் போது

வதந்தி தத் தத்வ விதஸ் தத்வம் யஜ் க்ஞானம் அத்வயம்

ப்ரம்ஹேதி பரமாத்மேதி பகவான் இதி ஷப்த்யதே

இந்த மூன்று நிலைகளை சூரியனை உதாரணமாகக் கொண்டு விளக்கலாம்..

சூரியனுக்கும் மூன்று வெவ்வேறு தோற்றங்கள் உண்டு..அவை, சூரிய ஒளி, சூரியனின் மேற்பரப்பு, மற்றும் சூரிய கிரகம்.. சூரிய ஒளியை மட்டும் கற்பவன் ஆரம்ப நிலை மாணவன்.. சூரியனின் மேற்பரப்பை மட்டுமே புரிந்து கொள்பவன் இடைநிலை மாணவன்.. சூரிய கிரகத்திற்கே செல்பவன் உயர் நிலையைச் சேர்ந்தவன்..அகிலமெங்கும் பரவியிருக்கும் சூரிய ஒளி, கண்களைப் பறிக்கும் பிரகாசத்துடன் தெரிவதால் அதன் உருவத்தை காண இயலாமல் விளங்குகிறது.. சூரிய ஒளியின் இத்தகு தன்மையை அறிவதால் திருப்தியடையும் சாதாரண மாணவனை பூரண உண்மையின் ‘ பிரம்மன்’ நிலையை மட்டும் உணரக் கூடியவரோடு ஒப்பிடலாம்.. சூரிய வட்டத்தை அறியும் மாணவன், அந்நிலையில் இருந்து சற்று முன்னேறியவன் ஆவான்..அவனை பூரண உண்மையின் பரமாத்மா தோற்றத்தை அறிபவனுடன் ஒப்பிடலாம்.. சூரிய கிரகத்தின் இதயத்தினுள் நுழையக்கூடிய மாணவனை பூரண உண்மையின் உன்னத நிலையான வியக்கியத்துவத்தை(அனுபவத்தை) உணருபவனுக்கு ஒப்பிடலாம்..

எனவே, பூரண உண்மையை அறிவதில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவர்களும் ஒரே விஷயத்தை அறிந்து கொள்ள முயல்கின்றனர் என்றபோதிலும், அப்பூரண உண்மையின் பகவான் நிலையை உணர்ந்து கொள்ளக் கூடிய பக்தர்களே அனைத்து ஆன்மீகவாதிகளிலும் உயர்ந்தவராவார்..மேலே சொல்லப்பட்ட சூரிய ஒளி, சூரிய வட்டம், மற்றும் சூரிய கிரகத்தின் உட்செயல்கள் ஆகியவை ஒன்றையோன்று பிரிக்க முடியாதவையாக இருப்பினும், இம்மூன்று வெவ்வேறு தன்மையினை உணரும் மாணவர்கள் சமநிலையில் இருப்பவர்கள் அல்ல..ஆக, பகவானை அறிந்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று கீதையில் சொல்லப்பட்டுள்ளது..

அடுத்து பகவான் என்ற சொல்லுக்கு இணையான பொருள் என்ன என்பதை பார்ப்போம்.. இந்த சம்ஸ்கிருத சொல் வேதவியாசரின் தந்தை பராசர முனிவரால் விளக்கப் பட்டுள்ளது..பகம்+வான் என்று பிரித்து படித்தால் பகம் என்ற சொல்லுக்கு ஆறு என்ற பொருளும் வான் என்ற சொல்லுக்கு உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.. இதில் ஆறு என்பது என்ன? செல்வம், புகழ், பலம், அழகு, அறிவு, மற்றும் தியாகம் ஆகிய இந்த ஆறு பொருட்களைப் பெற்று உடையவனாக இருப்பதால் அவனை பகவான் என்று அழைக்கிறோம்..பிரம்ஹ சம்ஹிதையில் பிரம்ம தேவர் பகவான் கிருஷ்ணரை ஆதி புருஷராக, முழுமுதற் கடவுளாக முடிவு செய்துள்ளார்..அவரே கோவிந்தன், என்று அறியப்படும் ஆதி புருஷர், பகவான். மேலும் அவரே எல்லா காரணங்களுக்கும் உன்னதக் காரணமானவர்..

” ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச் சித் ஆனந்த விக்ரஹ:

அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ காரண காரணாம்”

இதன் பொருள்

பகவானின் குணங்களை உடைய பல நபர்கள் உள்ளனர்..ஆன எவராலும் மிஞ்ச முடியாதவரான கிருஷ்ணரே அவர்களில் உயர்ந்தவர்..அவரே பரம புருஷர்; மேலும், அவரது உடல், நித்தியமான, அறிவு நிரம்பிய, ஆனந்த மயமானதாகும்.. ஆரம்பமும் முடிவும் இல்லாத அந்த கோவிந்தனே, எல்லா காரணங்களுக்கும் காரணமாக விளங்குபவர்..( பிரம்ம ஸம்ஹிதை 5.1)

பாகவத புராணத்திலும் பரம புருஷ பகவானின் பற்பல அவதாரங்களை குறிப்பிடுகிறது.. ஆனால் கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுளாக வர்ணிக்க படுகிறார்..அவரிடமிருந்தே பற்பல அவதாரங்களும் முழுமுதற் கடவுளின் பல்வேறு ரூபங்களும் வெளிவருகின்றன.!

” ஏதேசாம்ஷ கலா: பும்ஸ: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்

இந்த் ராரி வ்யாகுலம் லோகம் ம்ருடயந்தி யுகே யுகே”

இதன் பொருள் என்னவென்றால்

இத்துடன் கொடுக்க பட்டுள்ள கடவுளது அவதாரங்களின் பட்டியல் அனைத்தும், முழுமுதற் கடவுளின் சுய அம்சங்களோ, அம்சங்களின் அம்சங்கள் தான்.. ஆனால் கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஆவார்”

எனவே கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுளும் பூரண உண்மையும் ஆவார்..அருவ பிரம்மன் மற்றும் பரமாத்மாவிற்கும் அவரே மூலம்..

சரி, முதலில் சொல்லப்பட்ட ஸ்லோகத்திற்கு வருவோம்..

புருஷோத்தமனான முழுமுதற் கடவுள் தம் முன் வீற்றிருக்கும் போது, உறவினருக்கு எதிராக போர் புரிய தயக்கம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது..எனவே கிருஷ்ணர் ‘குத:’ எங்கிருந்து என்ற சொல்லின் மூலம் தனது வியப்பை வெளிப்படுத்துகிறார்.. க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்த ஒரு மனிதனிடம் இது போன்ற களங்கங்களை ஒரு போதும் எதிர் பார்க்க படுவதில்லை.. போர் செய்ய மறுப்பதன் மூலம் தனக்குரிய கடமைகளிலிருந்து விலகிக் கொண்டு இருந்தான்.. இவ்வாறு கடமையிலிருந்து விலகுவது, ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவாதது மட்டும் அல்ல, இவ்வுலகில் புகழ் பெறுவதற்கான வாய்ப்பைத் தராது.. உறவினர்களுக்கான இரக்கம் பகவான் கிருஷ்ணரால் அனுமதிக்கப்படவில்லை.!

மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே முழுமுதற் கடவுளான பகவான் என்பதை உறுதிப் படுத்துகிறார்.. செய்பவனும் அவரே செய்ய தூண்டுவதும் அவரே..

கீதையின் சாரம் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் நம் நினைவிற்கு வருகிறது…

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா…
மரணத்தின் தன்மை சொல்வேன்…
மானிடர் ஆன்மா மரணமெய்தாது…
மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் 
மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்…

என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்…
துணிந்து நில் தர்மம் வாழ…


புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்…
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க…

இதைவிட கீதையின் சாரத்தை எளிதாக எப்படி தர இயலும்?

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!!!!

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: