கி.மு….கி.பி (பதிவு அத்தியாயம் 17)

சென்ற பதிவில் நான் யயாதியின் வழித்தோன்றல்கள் பற்றி கூறியிருந்தேன்.. இவர்களில் தமிழகத்திற்கு கடல் வழியாக மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த கிரேக்கர்களையும் பின்னர் ரோமானியர்களையும் யவனர்கள் என்று சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.. அவர்களின் மரக்கலங்களில் கப்பல் தலைவனது பாதுகாப்புக்காக வந்த யவனர்கள், மிலேச்சர்கள் எனப்பட்டனர்.. தமிழ் அரசர்களுக்கு இவர்களில் சிலர் மெய்காப்பாளராகவும் தங்கி விட்டனர்.! இவர்கள் ஊமையர்கள்..

புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள், கௌரவர்கள், ஆவார்கள்.. பிற்காலத்தில் பௌரவ அரச மரபைச் சார்ந்த போரஸ் கி.மு 326ல் நடந்த போரில் ஜீலம் ஆற்றங்கரையில் அலெக்சாண்டரிடம் தோல்வி அடைந்தார்.. இருப்பினும், போரஸின் போர் வீரத்தைப் பாராட்டி அலெக்சாண்டர் தாம் பெற்ற இந்திய பகுதிகளுக்கு பிரதிநிதியாக போரஸை நியமித்து கௌரவித்தார்..

சரி, நாம் யயாதி கதைக்கு வருவோம்..

யயாதி, தனக்கு தெரியாமல் சர்மிஷ்டையை மணந்து கொண்டு அவள் மூலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர் என்ற விவரத்தை அறிந்த தேவயானி, கோபம் கொண்டு தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள்.

தேவயானி சர்மிஷ்டையிடம் பிள்ளைகள் குறித்து கேட்டல்

அவர் யயாதி மன்னன் கிழட்டுத் தன்மை அடையுமாறு சாபமிட்டார்..யயாதியும் கிழவன் ஆகினான்.. அவன் முனிவரிடம் மன்னிப்பு கேட்க தன் கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான்.. அதற்கு அவர் அவனது மகன்களில், யாரேனும் ஒருவனுக்கு கிழட்டுத் தன்மையை அளித்து மீண்டும் இளமை அடையலாம் என்று கூறினார்.. பின்னர் யயாதி தனது மூத்த மகன் யதுவிடம் வேண்ட அவன் மறுத்து விட்டான்.! அதனால் ஆத்திரமடைந்த யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கும் அவன் தலைமுறைகளுக்கும் அஸ்தினாபுர அரசு அரியணை ஏற தகுதி இல்லாமல் போகும் என்று சாபமிட்டான்.. சர்மிஷ்டையின் மகன் புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டான்.. யயாதி தனது இளமையை மீண்டும் பெற்று பல ஆண்டுகள் இரு மனைவியருடன் வாழ்ந்தான்.. ஒரு நாள் அவனுக்கு தன் மகன் புருவின் நினைவு வர, அவனை அழைத்து அவனுக்கு மீண்டும் இளமையைக் கொடுத்து அஸ்தினாபுரத்தின் மன்னனாக முடி சூட்டினான்.. பின்னர் தனது இரு மனைவியருடன் வனவாசம் செய்து தவம் புரிந்து தேவலோகம் அடைந்தான்..

யது குலம்

யதுவின் வழித்தோன்றல்களான யாதவர்கள், நாட்டை ஆள இயலாது என்பதனால் ஆடு, மாடுகளை மேய்த்து பால், வெண்ணெய் உற்பத்தி செய்து வாழ்ந்தனர்.. பின்னாட்களில், யாதவர்கள் மேற்கு, மத்திய, கிழக்கு இந்தியாவில் சிறிதும் பெரியதுமாக பகுதிகளை ஆண்டனர்.. வடமதுரை, விதர்ப்பம், சேதி, குந்தி போஜம், துவாரகை, சூரசேனம்,மகதம் போன்ற நாடுகளை ஆண்ட சிற்றசர்களான யாதவர்கள் கம்சன், கிருஷ்ணர், பலராமர், சிசுபாலன், ஜராசந்தன், குந்தி, கிருதவர்மன், சாத்யகி, உத்தேவர் ஆகியோர்..

புராணங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு யாதவ குலங்களுக்கிடையே ஹைஹையர்கள் எனும் குலத்தினர் மட்டுமே தங்களை யதுவின் மூத்த மகன் சகஸ்ரஜித்தின் வழித்தோன்றல்கள் என்று அழைத்துக் கொண்டனர்..மற்ற அனைத்து யாதவ குலங்களான சேதி நாட்டவர்கள், விதர்ப்ப நாட்டவர்கள், அந்தகர்கள், குரூரர்கள், போஜர்கள் மற்றும் வ்ருஷ்ணிகள் யதுவின் இளைய மகன் குரோஸ்த்துவின் வழித்தோன்றல்கள் என்று நம்புகின்றனர்..

புராணங்களில் குறிப்பிடப்படும் யாதவ குலங்களின் வரலாற்றின்படி, யாதவ குலங்கள் ஆரவல்லி மலைத்தொடர் பகுதிகள், குஜராத் நர்மதா ஆற்றின் சமவெளி பகுதிகள், வடக்கு தக்காணப் பகுதிகள், கிழக்கு கங்கை சமவெளி பகுதிகளில் பரவலாகக் வாழ்ந்தனர்.. காலப்போக்கில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு ஏற்ப விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குரூரர்கள், சேதிகள் என உட்பிரிவு ஏற்பட்டன..

யதுகுல பிரிவுகள்:

சேதிகள்:

புராணங்களின் படி யாதவ குல குரோஸ்து வழியில் வந்த விதர்பனின் பேரனும், கைஷிகனின் மகனுமான சேதி என்பவனின் வழித்தோன்றல்களே சேதி நாட்டு யாதவர்கள்.. இவர்களில் குறிப்பிடத்தக்கவன் சிசுபாலன்

விதர்பர்கள்:

இவர்களும் குரோஸ்துவின் வழித்தோன்றல்களே ஆவர்.. ஸ்ரீ கிருஷ்ணரின் மாமனாரும், ருக்மணி மற்றும் ருக்மி ஆகியோரின் தந்தையும் தக்கணத்தின் விதர்ப்ப நாட்டு மன்னனும் ஆன பீஷ்மகன் ஆவார்..வாயு புராணத்திலும், மச்ச புராணத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது..

அந்தகர்கள்

பாணினி எழுதிய அஷ்டாத்தியில் (iv.1.114) யாதவ குல பிரிவான அந்தகர்கள் ஷத்திரிய கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் அரசமைத்து ஆண்டனர் என்றும் கூறப்படுகிறது.. மகாபாரதத்தில் துரோண பருவத்தில் (141.5) அந்தகர்களை சமயப் பற்றற்றவர்கள் எனும் விராத்தியர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது!! அந்தகர்கள் சத்வாதனின் பேரனும் அந்தகனின் மகனுமாகிய பஜாமனாவின் வழித்தோன்றல்கள்.. எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.!குருக்ஷேத்திரப் போரில் அந்தகர்கள் குலத் தலைவனான கிருதவர்மன் கௌரவர்களுக்காக போரிட்டான்..

போஜர்கள்

ஐதரேய பிராமாணம் பகுதி viii-14 ன் படி சோழர்கள், மத்திய இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. விஷ்ணு புராணத்தில் ( iv.13.1.61) போஜர்கள் சத்வாதர்களின் கிளையெனக் கூறப்படுகிறது.. மகாபாரதத்தின் படி யது குலத்தின் ஒரு பிரிவினை போஜர்கள் ஆண்ட நிலப்பரப்பை குந்தி நாடு என்று அழைக்கப்பட்டது.. இந்த நாட்டை சார்ந்தவர் தான் பாண்டவர்களின் தாய் குந்தி ஆவார்..

குரூரர்கள்

பாகவத புராணத்தின் படி யாதவ குலத்தின் ஒரு கிளையாக குரூரர்கள் துவாரகை நகரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..வாயு புராணத்தின் படி துவாரகையின் யதுகுல மன்னர் உக்கிரசேனர் குரூர குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. புராணங்களின் படி குரூர குல அரசன் அஹுகன் என்பவனுக்கு உக்கிரசேனர் மற்றும் தேவகன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர்..உக்கிரசேனருக்கு ஒன்பது மகன்களும், ஐந்து மகள்களும் பிறந்தனர்.. அவர்களில் கம்ஸன் மூத்தவன்..தேவகனுக்கு நான்கு மகன்களும் ஏழு மகள்களும் பிறந்தனர்..ஏழு மகள்களில் தேவகியும் ஒருத்தி.. தேவகியின் முதல்வனே ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார்

புராணங்களின் படி வசுதேவர் குரூர குல அரசன் அஹுகனின் இரண்டாவது மகனான தேவகனின் மகள் தேவகியை மணந்தார்.. இவர்களின் எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார்..

இவர் கி.மு 3218ல் பிறந்ததாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..இது குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களைத் தனியே பார்ப்போம்..

இந்த பதிவை மேற்கொண்ட நேரத்தில் இன்று கோகுலாஷ்டமி என்றும், கண்ணன் பிறந்த விவரத்தை பதிவு செய்யும் போது சரியாக மாலை ஆறு மணி என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது..தெய்வ சங்கல்பம்

அடுத்து சந்திப்போம்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: