பண்டைய தமிழ் நாட்டில் சுபதேவன் என்று ஒரு சோழ மன்னன் இருந்தான்..அவனது பட்டத்தரசி கமலவதி என்பாரோடு தில்லையில் கோயில் கொண்டுள்ள அந்த கூத்தாடும் எம்பிரான் நடராஜரை வழிபட்டு கொண்டு இருந்தான்.. நெடுங்காலமாக மக்கள் பேறு இல்லாத அவ்விருவரும் இறைவனை வழிபட்டு வந்தனர்.. இறைவனும் அருள் புரிந்தார்.. அதன் பயனாக கமலவதி கருவுற்று இருந்தாள்.. குழந்தை பிறக்கும் நேரம் வந்துவிட்டது.. அப்போது ஜோதிடர்கள் ” இன்னும் ஒரு நாழிகை நேரம் கழிந்ததும் குழந்தை பிறக்குமானால் அக்குழந்தை மூன்று உலகும் அரசாளும்” என்று கூறினார்கள்..கமலவதியும் அவ்வாறு ஒரு நாழிகை பொறுத்து குழந்தை பிறக்கும் வண்ணமாக தனது கால்களை பிணைத்துத் தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துமாறு கூறினார்..அவ்வாறே செய்தனர்.. குறித்த வண்ணம் ஒரு நாழிகை கழித்து ஆண் குழந்தை பிறந்தது. மாசி மாதம் சத்ய நட்சத்திரம் கூடிய நன்னாள்.கால நீட்டிப்பால் அந்த குழந்தையின் கண்கள் சிவந்து இருந்தன..ஈன்ற தாய் அந்த குழந்தையைக் கண்டு’ என் கோச்செங்கணானே’ என்று அழைத்தாள்

..உடனே அவளது உயிர் நீங்கியது.. மன்னன் தன் குழந்தையயைத் தன் உயிரெனக் காத்து வளர்த்து உரிய பருவத்தில் நாடாள் வேந்தராக முடிசூட்டி விட்டு தன் தவநெறியைச் சார்ந்து சிவலோகம் சென்றான்..
இவன் திருப்போர்புறம்( இன்றைய திருப்பூர்) எனும் இடத்தில் நடந்த போரில் சேர மன்னன் கணைக்கால் இரும்பொறயைக் கைது செய்து வந்து உறையூர்க் குடவாயில் கோட்டத்தில் சிறை வைத்தான்.. சிறைக் காவலர்கள் காலம் தாழ்த்தி பருக நீர் தந்ததால் அதனைப் பருகாமல் கணைக்கால் இரும்பொறை தன்மானத்தை விளக்கும் பாடல் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிர் துறந்தார்..சங்க கால சோழர்களின் கடைசி அரசன் கோச்செங்கணான்..சங்க கால சேரர்களின் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை.. இவர்கள் காலம் கி.பி.125-150..
இவன் சிவபெருமான் திருவருளால் தன் முற்பிறவி பற்றி தெரிந்து கொண்டான்..

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக ஒரு தலம் இருந்தது.. அங்கே வெண் நாவல் மரத்தின் கீழ் ஒரு சிவலிங்கம் இருந்தது.. சிவகணங்கள் இருவர் தாம் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டினில் ஒரு யானையாகவும், ஒரு சிலந்தியாகவும் பிறந்தனர்.. சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் அந்த சிலந்தி பந்தல் போல வலை பின்னி காத்தது..யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டு வந்து வழி பட்டது. யானை சிலந்தி வலையை தேவையற்றது என கருதி அதை அழித்து விட்டு பூஜை செய்யும்.. சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும்..இது தினசரி தொடர்ந்தது. அதனால் ஆத்திரமடைந்த சிலந்தி யானையைத் தண்டிக்க வேண்டி அதன் துதிக்கைக்குள் புகுந்தது.. யானையும் சிலந்தியும் போராடி இரண்டுமே மடிந்தன.. இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான் யானையை சிவகணங்களுக்கு தலைவனாக்கினார்.. சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்து சிவத் தொண்டு செய்தது..
பூர்வஜென்ம வாசனையால் இந்த சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமானத்தின் மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்களைக் கட்டினான்..அவை யாவும் மாடக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன..கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக் கோயில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறைக் கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது.. பணியாளர்களின் உழைப்புக்கு ஏற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.. அதனால் இந்த மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கின்றனர்..
இது பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று..அப்பு என்பதன் பொருள் நீர்.. மூலவரான ஜம்புகேஸ்வரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்கு கீழ் இருப்பதால் எப்போதும் நீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும்.. காவிரியில் நீர் வறண்டிருக்கும் நேரங்களிலும் இங்கு நீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும்.. அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் கோயில் கொண்டுள்ளார்.. மூலவரான ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்பு லிங்கமாக எழுந்தருளி உள்ளார்..
இந்த ஸ்தலத்தினைப் போற்றி திருநாவுக்கரசர் அருளிய தேவாரப் பதிகம் :
துன்பம் இன்றித் துயரின்றி
என்றும் நீர்
இன்பம் வேண்டில்
இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன்
என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே!!!
கோச் செங்கட் சோழன் சோழ நாட்டின் பல கோயில்களுக்கு திருப்பணி செய்து செங்கோல் முறையே ஆட்சி புரிந்து உள்ளார்..

பின்னர் தில்லையம்பதி வந்து பெருமான் திருவடிகளை போற்றி அங்கே வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு திருமாளிகை கட்டி, பின்னர் பல திருப்பணிகள் செய்து தில்லையம்பதியில் அம்பலவாணரின் திருவடி நிழலை அடைந்தார்..
இவரே பின்னாளில் ” கோச்செங்கட் சோழ நாயனார்” என்று புகழப்பெற்றார்.