இதி ஹாசம் என்பது ஒரு சம்ஸ்க்ருத சொல்.. இதன் பொருள் ” இவ்வாறு இருக்கின்றது” என்பதாகும்.. அதாவது வரலாறு என்று பொருள்..
சதபத பிரமாணம், மனு ஸ்மிருதி, மகாபாரதம் ஆகிய சம்ஸ்க்ருத நூல்களில் இது ஆளப்பட்டுள்ளது.. இச்சொல் ஆனது இதி-ஹ -ஆஸம் என்று பிரித்து படிக்க வேண்டும்..
தத்துவ விசாரத்தில் ஏன்? எதனால்? எப்படி? என்று கேள்விகளைக் கேட்டு நாம் விவரங்கள் அறிந்து கொள்வது போல.. அதற்கான விடையாக இந்த நூல்கள் விளங்குகின்றன..
இதி என்றால் இவ்வாறு, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள் கொள்ளலாம்..
ஹ என்ற சொல் ஒரு அசைச் சொல்.. அதாவது இப்படித்தான் இவ்வாறாகத்தான் என்று சொல்லப் படுகிற போது தான் சேர்ந்து வருகிறது அல்லவா? அந்த தான் என்பதுதான் இந்த ஹ..
அடுத்தது ஆஸ என்பதன் பொருள் இருந்தது..அஸ் என்றால் இரு..இது நிகழ்காலம்.! இதன் இறந்த கால வடிவம் ஆஸ..
ப்ரும்ஹ காண்டவழி நூல்களில் புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய இரண்டிலும் இதிகாசங்களே சிறந்தவை என்று கூறப்படுகின்றன.. அதற்கு காரணம் புராணங்களே இதிகாசங்கள் தான் சிறந்தவை என்று கூறுகின்றன..
” வேத வேத்யே பரே புமஸிஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ராசேத ஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா” எனும் ஸ்லோகம் ” வேதங்களினால் அறியப்பெறும் பரம புருஷன், சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதாரம் செய்த போது, அப்பரம புருஷனே அறிவிக்கும் வேதம், வால்மீகி முனிவரிடமிருந்து, அச்சக்கரவர்த்தி திருமகனின் திருக் கல்யாண குணங்களையும், ஆச்சரியமான செயல்களையும் கூற இராமாயணம் பிறந்தது என்பதை தெளிவாக கூறூகிறது..
அதேபோல், பரம புருஷன்,
அப்பரம புருஷனை அறிவிக்கும் வேதங்கள்,
அவ்வேதங்களைக் கொண்டு அப்பரம புருஷனை அறிஞர்,
அப்பரம புருஷனையும் அவ்வேதங்களையும் உதவி புரியும் ஆசாரியர்
அந்த ஆச்சாரியாரின் அன்பிற்கு இடமான அடியார்; ஆகிய இவர்கள் திறத்தில், சிறந்த அன்பானது, அறிஞர்க்கு ஏனைய நூல்களின் உதவி சிறிதும் இன்றி மகாபாரதத்திலேயே கிடைக்கின்றது என்பதனைக் கீழ் காணும் ஸ்லோகம் உணர்த்துகிறது..
” விஷ்ணௌ வேதஷு வித்வத்ஷு குருஷு ப்ராஹ்மணேஷு பக்தி:
பவதி கல்யாணீ பாரதாவே தீமதாம்//”



இன்னும் சொல்லப்போனால் இந்த ஸ்லோகங்கள் இந்த இரண்டு இதிகாசங்களை எந்த அளவு உயர்த்தி சொல்கின்றன என்பது நன்கு விளங்கும்.. இவ்வாறு புகழ்ந்து கூறுதலை சாஸ்திரபரிக்ரஹம் என்று கூறுவர்..
இந்த இதிகாசங்களுக்கு பக்ஷபாதம் ஏதும் இல்லை. ஆகவே இவைகளின் சிறப்பை வேறுவிதமாகவும் அறியலாம்..
படைப்பவனாகிய ப்ரும்மா முதலில் புராணங்கள் எல்லாவற்றையும் படைத்தார்.! அப்பிரம்மனும் மனிதர்களைப் போலவே ஸத்வம, ரஜஸ்ஸு மற்றும் தமஸ்ஸு எனும் முக்குணங்களைக் கொண்டவர்..
இந்த முக்குணங்களில் தமோ குணம் மேலிட்டு, அக்குணத்திற்குத் தான் வயப்பட்டு இருக்கும் போது அக்னி, சிவன் ஆகியோர் சிறப்பைக் கூறும் தாமஸ புராணங்களையும், ரஜோ குணம் மேலிட்டு அக்குணத்திற்குத் தான் வயப்பட்டு இருக்கும் போது பிரம்மனாகிய தன் சிறப்பைக் கூறும் ராஜஸ புராணங்களையும், ஸத்வ குணம் மேலிட்டு அக்குணத்திற்குத் தான் வயப்பட்டு இருக்கும் போது நாராயணன் சிறப்பைக் கூறும் ஸாத்வீக புராணங்களையும் வெளியிட்டதாக கீழ்காணும் ப்ரமாண வசனங்கள் கூறுகின்றன..
“ யஸ்மின் கல்பே துயத் ப்ரோக்தம் புராணம் ப்ராஹ்மண பரா/
திவ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸவரூபணே, வர்ண்யதே//”
“ அங்கே: சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு பிரகீர்த்யதே://
ராஜஸேஷு சமாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோவிது://
ஸாத்விகேஷு அத கல்பேஷு மாஹாத்ம்யம் அதிகம் ஹரே:/
தேஷு ஏவ யோக ஸம்ஹித்தா: கமிஷ்யந்தி பாரம் கதிம்//”
இச்சுலோகங்களை ஆழ்ந்து படித்தால் அவ்வப்போது அந்த அந்த மேலிட்ட குணத்திற்கு தக்கவாறு ” புராணங்கள் செய்யப்பட்டுள்ளன” என்பது தெளிவாகிறது.. ஒரு தலைச் சார்பினால் அந்த அந்த தாமஸ், ராஜஸ, புராணங்களில் அந்த அந்த தேவதைகளின் மேன்மை கூறப்பட்டுள்ளது..ஸத்வ குணம் மேலிட்டபோது செய்யப் பெற்றுள்ள ஸாத்வீக புராணங்கள், ஸத்வ குணம் உண்மை உணர்வுக்கு உபாயமாக இருத்தலால் உண்மைப் பொருள்களை உணர்த்துகின்றனவாம்.. ஆனால் இதிகாசங்களில் இந்த பக்ஷ பாதம் இல்லை.. மேற்கொண்ட அவதாரத்தின் குணாதிசயங்களை கொண்டே செயல்கள் நிகழ்ந்தது..
எவன் ஒருவன் ஓர் உண்மையைத் தான் உள்ளபடி உணர்ந்து, பிறரும் அவ்வுண்மையை உள்ளபடி உணர்ந்து, உய்வுபெற விரும்பி, நூலின் மூலமாய் வெளியிடுகின்றானோ, அந்த நூலைச் செயத அவன் ஆப்தமன் என்று கூறப்படுகின்றான்
வால்மீகி முனிவர், இராமபிரான் மீது சிறந்த பேரன்பு கொண்டவர்.. அந்த இராமபிரானது வெளிப்படையாயும், ரகஸியமாகவும் இல்லாது உள்ள சரித்திரத்தைக் கண்கூடாகக் கண்டு இராமாயணத்தைச் செய்து, இவ்வுலகு உணர்ந்து உய்வுபெற உதவியனவாம்.. அவரது இராமாயணம் “நதே வாக் அந்ருதா காவ்யே காசித் அத்ர பவிஷ்யதி” என்று ப்ரும்மா அருளினவாறு பொய்யல்லாத பாடலாகவே அமைந்துள்ளது..


வியாஸ முனிவர் நாராயணனின் திரு அவதாரமாகவே புகழபெற்றவர். அவரும் கண்ணனுடைய சரித்திரத்தினைக் கண்கூடாகக் கண்டு, மஹாபாரதத்தை இயற்றி இவ்வுலகிற்கு உய்ய உதவினார்
மேலே சொல்லப் பட்ட ஆப்தமன் என்ற சொல்லுக்கு இணையான அறிஞர்கள் வால்மீகி முனிவரும் மற்றும் வியாசர் முனிவரும் என்பது தெள்ளத் தெளிவாகிறது!!
மணவாள மாமுனிகள், ” இவையிரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் ப்ரபலம்” என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸுத்திரத்திற்கு வியாக்கியானம் அருளிச் செய்த இடத்தில் ” புராணத்திற் காட்டிலும் இதிகாசங்கள் ப்ராபல்யம், பரிக்ரஹாதிசயம்,மத்யஸ்த்யை, கருத்து: ஆப்ததமத்வம் ஆகிய இவற்றாலே” என்று அருளிச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது..
இந்த இரண்டு மாபெரும் காவியங்களைப் பெற்ற நம் பாரத நாடு புண்ணிய பூமி.. நாம் அதன் புதல்வர் இந்நிலை மறக்காதீர்கள்..
“ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே//
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே//”