
காலையில் கட்டிலில் இருந்து கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்த போதே அந்த எண்ணம் கண் முன்னால் நிழலாடியது. நீண்ட நாட்களாகஅந்த ஆசை என்னுள்ளே புதைந்து போய் இருந்தது. இன்று அது மெல்ல துளிர்க்க தொடங்கியது. பல்துலக்கி விட்டு ஹாலில் வந்து நின்ற போது என்னவள் குளித்து தலை துவட்டி அன்று பூத்த பூப்போல இருந்தாள். தலையில் அவளுக்கு பிடித்த முல்லை சரம். சாமி சன்னதியில் விளகேற்றியவள் ஏதோ முணுமுணுத்து விட்டு என்னை திரும்பிப் பார்த்தாள். “ ஒரே நிமிஷம்,சாமி கும்பிட்டுவிட்டு உங்களுக்கு காபி தரேன்” என்று அவளது முணுமுணுத்தலை தொடர்ந்தாள். “ ஓகே டார்லிங்..நோ ப்ரோப்ளம்..” என்று சொல்லிவிட்டு ஹிந்து பேப்பரில் முழுகினேன். காபி சாப்பிட்டு குளித்து காலை டிபனெல்லாம் ஆயிற்று... அவளிடம் என் ஆசையை சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பினேன்..இருந்தாலும் அவளிடம் ஒரு கோடு காட்டிடலாம் என்று எண்ணி..” சுமி....நம்முடைய நீண்ட நாளைய ஆசை இன்னிக்கு நிறை வேத்தலாம்னு இருக்கேன்..என்ன சொல்ற..?” என்று ஆரம்பித்தேன். அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்...பிறகு சற்று புரிந்தது போல ..” ஆமாம்..நமக்கு வயசாயிடுச்சுன்னு ஞாபகம் இருக்கா..?’’ என்று என்னை பார்த்தாள்.. “ கண்சிமிட்டிக் கொண்டே." நோ! சுமி..இதுக்கெல்லாம் வயசு கிடையாது ..என்ன எனக்கு ஐம்பது, உனக்கு நாப்பத்தெட்டு..தட்ஸ் ஆல்..இது ஒரு வயசா?” அவனவன் அறுபது வயசாகியும் என்னென்னமோ செய்யறான்..” “வயசு பசங்க நமக்கு இருக்காங்க..அதுவாவது உங்க மூளைக்கு எட்டுதா..? “இருந்தா என்ன..? அவங்கதான் இப்போ இங்கே இல்லையே..நம்ம ஷியாம்..ஆபிசு வேலையா மும்பை போயிருக்கான்..சுகி அவ ப்ரெண்ட்ஸ் கூட பிக்னிக் போறதா சொல்லிட்டு முன்னார் போய் இருக்கா...ஸோ, நாம இன்னிக்கு ஃப்ரீ..என்ன வேணும்னாலும் செய்யலாம்..” ‘முதல்ல ஆபிசுக்கு கிளம்புங்க...எதையாவது தத்து பித்துன்னு உளறிகிட்டு..” என்னை செல்லமாக கடிந்து கொண்டாள்..உள்ளுக்குள்ளே அவளுக்கும் அந்த ஆசை இருக்கிறது..ஆனால் வெளியே சொ
ல்லிக் கொள்ள வெக்கம்..
என்னை பிடித்து ஆபிசுக்கு தள்ளி விட்டாள்.
ஆபீசுக்கு வந்தாலும் என் மனதில் அந்த ஆசை தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்தி கொண்டிருந்தது. ஆயிற்று..மாலை வந்தது. ஒட்டமும் நடையுமாக பஸ்ஸை பிடித்து வீடு வர வேண்டும்..வழியில் நான் நினைத்த படி அதனை வாங்கிக் கொண்டேன்.
வீட்டிற்கு வந்ததும் சுமி..சுமி என்று அவளை ஆசையுடன் கூப்பிட்டேன். என் பெட் ரூமுக்குள்ள நுழைந்து என் பையை திறந்தேன்..நான் ஆசையா வங்கி வந்த குச்சி மிட்டாய்..அவளுக்கு மிகவும் பிடித்தது..திருமணமான புதிதில் அவள் என்னிடம் அவளுக்கு மிகவும் பிடித்தது என்று சொன்னது..அவளிடமும் ஒரு ஆசை தெரிந்தது…அவசரமாக என்னிடம் இருந்து பிடுங்கி அவள் பேப்பரை பிரித்து சுவைத்து என்னை பார்த்து கண்ணடித்தாள்…நான் இருபத்தைந்து வருடம் முன்னே சென்றேன்..
*