நான் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு வார காலம் தங்கி சில கோயில்களை தரிசனம் செய்தேன்.. அவற்றில் ஒன்று அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் மேச்சேரி.
நான் உறவினர் ஒருவர் இல்லத்தில் தங்கி இருந்தேன்.. அன்று ஞாயிற்றுக்கிழமை..காலை சுமார் 7 மணி அளவில் Red Taxi. எனப்படும் வாடகைக் காரை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டேன்.. சென்னேயிலுள்ள ஓலா மற்றும் உபேர் போல அங்கே ரெட் டாக்ஸி.. மிகவும் சௌகரியமாக இருந்தது.. உள்ளுர் டிரைவர் என்பதால் ரூட் ஒரு பிரச்சினை இல்லை..
இந்த கோயில் சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.! திருக்கோயிலை சுமார் 8 மணி அளவில் சென்றடைந்தேன்.. ஊர் கிராமம் என்றும் சொல்ல முடியாது நகரம் என்றும் சொல்ல முடியாது.. ஒரு நடுத்தர ஊர்.. அந்த காலை வேளையிலேயே மக்கள் சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டு இருந்தார்கள்..பூக்கடை அர்ச்சனை கடைகளில் வியாபாரம் நன்றாக நடந்து கொண்டு இருந்தது..

இந்த கோவிலின் பிராதான வாயில் வடக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் உள்ளது.. கோவிலைச் சுற்றி மதற்சுவர்கள் உள்ளன.அவற்றில் நான்கு திசைகளிலும் நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் உள்ளன..
சன்னதியில் மக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து கொண்டு இருந்தனர்.. நானும் இணைந்து கொண்டேன்.. அர்ச்சனை செய்ய மக்கள் பூஜாரியிடம் தங்களது குடும்ப பட்டியலை ஒப்புவித்து கொண்டு இருந்தார்கள்..வரிசை மெதுவாக நகர்ந்தது..சன்னதிக்கு அருகில் சென்றேன்..
திவ்ய தரிசனம்..அன்னை எட்டு கைகளோடு ருத்ர ரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, நாள், கேடயம் தலை பணிகளைத் தாங்கி இருந்தாள்.. பொன் சலங்கை கட்டி வலது காலை மேலூன்றி இடது காலை அசுரன் மீது ஊன்றி அமர்ந்த கோலத்தில் இருந்தாள்.. மூக்கில் மூக்குத்தி மின்ன புன்சிரிப்புடன் இருந்தாள்.. தலையில் அக்னி ஜொலிக்கும் கிரீடம் காதுகளில் குண்டலம்..
நான் சென்றது மாசி மாதம் ஆனபடியால் திருவிழா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.. முதல் நாள் இரவு வீதி உலா சென்றுவிட்டு உற்சவ மூர்த்தி அம்பாள் மண்டபத்தில் கொலு வீற்றிருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை..மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது..எனவே பூஜாரியிடம் ஸ்தல புராணம் கேட்க இயலவில்லை.. மூலஸ்தானம் ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை..
வெளியில் பிரகாரம் சுற்றி வந்த போது அங்கிருந்த பிரஸாத கடையில் விவரம் சேகரித்தேன்.. இந்த கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோயில்.. யார் காட்டினார்கள் என்று தெரியவில்லை..


இங்கே பாவ தோஷங்கள் ஏவல் பில்லி சூனியம் போன்ற தொல்லைகளுக்கும் ராகு கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகளுக்கும் குழந்தை பாக்கியம் ஆகியவைகளுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் அவை நீங்கும் என்பது நம்பிக்கை.பக்தர்கள் அங்கே மேடைகளில் எலுமிச்சை விளக்கு ஏற்றி மனமுருக ப்ரார்த்தனை செய்து கொண்டு இருந்ததைக் கண்டேன்.. மேலும் மன நோய் பாதித்தவர்களுக்கும் இங்கு தீர்த்தம் விபூதி தரப் படுகின்றன.. கால் நடைகளுக்கும் நோய் ஏற்பட்டால் விபூதி வாங்கிச் செல்கின்றனர்.. மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறினால் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.. ஒரு சில பக்தர்கள் அதனைச் செய்வதையும் கண்டேன்.

தினமும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விசேஷமாக பூஜைகள் நடைபெறுகின்றன..மாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது..
மொத்தத்தில் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலை தரிசனம் செய்த ஆத்ம திருப்தியுடன் அடுத்த கோவிலுக்கு பயணமானேன்..