

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜ மப்ரமேயம்
ஸீதாபதிம் ரகு குலான்வய ரத்ன தீபம் |
ஆஜானு பாஹும் அரவிந்த தளாயதாக்ஷம்
ஸ்ரீராமம் நிசாசர வினாசகரம் நமாமி ||
இந்த நாள் இனிய நாள்.. வரலாற்றுப் பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய புனித நாள்.. நீண்ட நெடுங்காலமாக போராடி நீதி கிடைத்து நெடிய சிலை இராமன் கோயில் அமையும் நாள்.. அயோத்தி மாந்தர்கள் மட்டும் அன்றி இந்த அவனியின் மாந்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நன்னாள்..இந்த நெகிழ்வான தருணத்தில் சில கசப்பான பின்னணிகள்..அது என்ன?
இராம ஜென்ம பூமி
அது என்னவோ!! நமது இதிகாச நாயகர்கள் இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தை புண்ணிய பூமியாக கருதினரோ? அயோத்தியையும் மதுராவையும் தான் அவதரிக்க சிறந்த பூமி என்று தேர்வு செய்தனர்? பதில் அந்த பரந்தாமனைத் தவிர வேறு யார் அறிவார்?

இராம ஜென்ம பூமி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசலாபாத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும், லக்னோவிலிருந்து கிழக்கில் 136 கிலோமீட்டர் தொலைவிலும் சரயூ நதிக்கரையில் அமைந்துள்ளது.. இந்த இடத்தில் தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார்..முக்தி தரும் ஏழு இந்திய புனித நகரங்களில் இராம ஜென்ம பூமியும் ஒன்று..
மொகலாய மன்னர் பாபரின் படைத்தலைவர் இங்கிருந்த இராமர் கோயிலை இடித்து விட்டு அதன் மேல் கி.பி.1528ல் தொழுகைப் பள்ளி வாசல் கட்டி அதற்கு பாப்ரி மசூதி என்று பெயர் சூட்டினான்.. இவ்விடத்தில் மொகலாய மன்னர் பாபர் 1528 முதல் 1853 வரை இஸ்லாமியர்களின் பள்ளி வாசலாக இருந்தது..

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசினர், 1863 முதல் 1949 முடிய இவ்விடத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் வழிபட வேண்டும் என்று கூறி இவ்விடத்தை இஸ்லாமியர்களுக்கும் பிரித்து கொடுத்தனர்..
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று கரசேவகர்களால் பாப்ரி மசூதி இடிப்பு துவங்கியது..

ஆனால் அவை நிறுத்தப் பட்டு கைது நடவடிக்கை தொடர்ந்தது.. அது முதல் அந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட இந்து அமைப்பினரும், பள்ளி வாசலுக்கு சொந்தமான இடம் என்று கூறி இஸ்லாமிய அமைப்பினரும் போராடி வந்தனர்..
இந்த இடத்தில் இந்தியத் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி, இராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தையும், பாப்ரி மசூதி இருந்த இடத்தையும் 1970, 1992, மற்றும் 2003ல் அகழ்வாராய்ச்சி செய்ததில், பாப்ரி மசூதிக்கு முந்தைய காலத்து தொன்மையான கட்டிடங்கள், பாப்ரி மசூதிக்கு கீழும் பக்கவாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டெடுத்தனர்.
பிரச்சினைக்குரிய இராம ஜென்ம பூமி- பாப்ரி மசூதி இடம் குறித்து செப்டம்பர் 30, 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. சர்ச்சைக்குரிய மேற்படி 2.27 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து, தற்போது குழந்தை இராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ஒரு பகுதியாகவும், சன்னி வஃக்போர்டு அமைப்பிற்கு மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும், நிர்மோகி அகாரா அமைப்பிற்கு மீதி உள்ள நிலத்தையும் வழங்கி தீர்ப்பளித்தது.. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூன்று அமைப்புக்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்..
ஜனவரி 27, 2013ல் இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பகுதிகளை ஏற்கனவே உள்ளது உள்ளபடி ( status quo) மாநில அரசு நிர்வகிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.. சர்ச்சைக்குரிய இராமர் ஜென்ம பூமி மற்றும் பாப்ரி மசூதி குறித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தள்ளி வைத்தது..
2019 மார்ச் 8 அன்று ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இராம ஜென்ம பூமி பிணக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியே, பைசாபாத் நகரத்தில் தங்கியிருந்து அயோத்தி பிரச்சினையை சமரசம் செய்து கொள்ளும் வகையில் பக்கீர் முகமது இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில், மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீ ராம் பஞ்சு மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியவர்களைக் கொண்ட ஒரு சமரசக் குழுவை நியமித்தது..
இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு 9 நவம்பர் 2019ல் தீர்ப்பு வழங்கியது.. இந்த வழக்கில் இந்து அமைப்புகள் சார்பில் பழம் பெரும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன் அவர்கள் வாதிட்டது பெருமைக்குரிய விஷயம்.. தீர்ப்பில் பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்படிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு சன்னி வஃக்பு வாரியமும் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார்.. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என்று இஸ்லாமியர்கள் நிருபிக்கவில்லை.. ஆகையால் நிரமோகி அகாரா மற்றும் சன்னி வஃக்பு வாரியத்தின் மனுக்களை ரத்து செய்யப்படுகின்றது எனவும் சன்னி வஃக்பு வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்திய அரசுக்கே உரிமை என்றும், இராம ஜென்ம பூமியில் மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை மூலம் குழந்தை இராமருக்கு கோயில் கட்ட அரசு அனுமதி வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது..
அதன் பின்னர் முழு வேகத்தில் செயல் பட்டு இன்று 5 ஆகஸ்ட் 2020ல் குழந்தை இராமருக்கு கோயில் கட்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரந்திர மோடி தலைமையில் பூமி பூஜை துவங்க உள்ளது..
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் அவதரித்த அன்று அயோத்தி எவ்வாறு விழாக்கோலம் பூண்டு இருந்ததோ, அதை நாம் யாரும் பார்த்ததில்லை!! ஆனால், தற்போது அயோத்தியில் விழா அனைவருக்கும் கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.. அயோத்தி மாந்தர்கள் யாவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.. ஒவ்வொரு தெருக்களிலும் வீடுகளும் கட்டிடங்களும் புதிய வண்ண பூச்சு பெற்று இராமாயண நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப் பெற்றுள்ளன..



இராமர் கோயில் கட்ட முன்மாதிரி வடிவமைப்பு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது

அயோத்தியில் உத்தரப் பிரதேச அரசு இராமரின் பிரும்மாண்டமான சிலையை நிறுவ இடம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது..

இந்த சிலையின் உயரம் 251 மீட்டர் அதாவது 823 அடி.! இது தான் உலகிலேயே மிக உயரமான சிலை.. அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை உயரம் 83 மீட்டர்.. குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர்.. இந்த சிலை ரூபாய் 2500 கோடி செலவில் அமைய உள்ளது.!
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இந்த நாள் மிகவும் சிறந்த நாள்.. ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வெற்றி பெற்று குழந்தை இராமருக்கு கோயில் கட்ட பூமி பூஜை செய்ய பட்ட நாள்.. விரைவில் நாம் அனைவரும் அயோத்தி சென்று அந்த கோசலை மைந்தனைக் குழந்தை இராமனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது நாம் அனைவரும் செய்த ஏதோ ஒரு சிறு புண்ணியம்..

இனியாகிலும் நாம் தாய் திருநாடாம் இந்த புண்ணிய பாரத பூமியில் ராமராஜ்யம் நடைபெற்றால் அதைவிட நமக்கு வேறு என்ன பேறு வேண்டும்..
ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஸ்ரீ ராம்
Arputhamana pathivu.we need more postings like this.atleast this will guide us in dark hours of our life.
LikeLike