அத்தியாயம் 3
வேதங்களின் வரலாறு
வேதங்களின் வரலாறு பற்றித் தெரிந்து கொள்ளும் முன் இந்து சமயத்தின் தொன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.. இந்து சமயம் இரும்பு காலமாகிய கி.மு 1200 க்கு முன்னரே தோன்றியது என்று கூறப்படுகிறது.. இந்து மதத்தின் முதல் தோற்றம் வரலாற்றின் படி வேத காலம் என்று சொல்லப் படுகிற கி.மு. 1900 முதல் 1400 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் என்று கூறப்படுகிறது.. ஆயினும் வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்பதும் நாம் அறிந்ததே.. வேத வியாசர் மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்.. அவ்வாறாயின், வேதம், மகாபாரதக் காலமான கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பானது.. இன்னமும் ஆராய்ந்தால், இந்த பிரபஞ்சம் தோன்றிய நாளில் நான்முகனால் வேதங்கள் படைக்கப்பட்டன என்று பிரம்ம புராணம் கூறுகிறது.. அதன் படியாகின் வேதம் தோன்றியது பல ஆயிரம் அல்லது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.. வேதங்கள் வாய் வழியாகவே கற்கப்பட்டு வந்ததால் இந்த பொக்கிஷத்தின் காலத்தை நிர்ணயிக்க இயலவில்லை என்பது என் கருத்து..
உலகின் மூன்று பெரும் சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றில் இந்து மதம் முதலிடத்தில் உள்ளது.. அதன் காரணம் அதன் தொன்மை.. கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் தோன்றியது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே.. இவ்விரு மதங்களும் உலகின் பல நாடுகளின் மக்களால் அதிக அளவு பின்பற்றப் பட்டாலும் இந்து மதம் மட்டிலுமே மிகவும் பழமையான ஒன்றாகும்..
இந்த பரந்த உலகில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு மதங்கள் பல்வேறு மக்களால் பின்பற்றப்படுகின்றன..அவற்றினைப் பற்றி இத்தொடரில் பதிவிட்டால் இந்த தொடரின் நோக்கம் பயனற்றுப் போகும்..மற்ற மதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் ஒரு ஆர்வம் தான்.. அப்போதுதான் இந்து மதத்தின் சிறப்பை நாம் அறிந்து கொள்ள முடியும்..எனவே, மற்ற மதங்களைப் பற்றி தனியே இந்த நூலின் தொடக்கத்தில் பதிவு செய்துள்ளேன்..
எல்லா வேதங்களுமே தர்மத்திற்கு அடிப்படை அந்த தர்மம் என்றால் என்ன? பெரியோர்களால் எந்த காலத்திலும் நிந்திக்கப்படாமல் எது எது பின்பற்றப்படுகின்றனவோ அவைகள் தர்மங்கள்.. இந்த விஷயத்தை ஆபஸ்தம்பரும்
” யநத்வார்யா: க்ரியமாணம் ப்ரசம்ஸந்தி ஸ தர்ம:
யம் கர்ஹந்தே சோபி அதர்ம:”
என்பதாகச் சொல்கிறார்.. “அதாவது எந்த காரியமும் செய்யப்படும் காலத்திலும், மகான்கள் செய்யும் ஸத் காரியங்கள்;என்ன சத் காரியத்தை செய்கின்றவர் யார்? இவைகளையும், இவர்களையும், புகழ்கிறார்களோ அதுதான் தர்மம்.. எதை நிந்திக்கிறார்களோ அது அதர்மம்” என்பது இதன் பொருள்..
வேதங்களின் நோக்கமே எல்லா ஜனங்களுக்கும் வாழ்க்கையை நன்றாக அமைய வேண்டும் அடிப்படையாக எல்லோரும் நல்ல கல்விமான்கள் ஆக ஆகி பிரம்மன் ஞானிகளாகவும் ஆக வேண்டும் என்பதே அடிப்படை தர்மானுஷ்டானம்.. அந்த தர்மங்களை போதிப்பதும் வேதம்தான்..
அந்த விதமாக பார்க்கும்பொழுது கிருஷ்ண யஜுர் வேதம் இரண்டாம் காண்டம் ஐந்தாம் பிரசன்னத்தின் ஆரம்பமே தர்ம போதகம் தான் எடுத்த எடுப்பிலேயே இதுதான் தர்மம் இவைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் ஒரு இதிகாசத்தை சொல்லி அதன் பலாபலன்களை விரிவாகச் சொல்லுகின்றது..
இனி, வேதத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்..
1957 -58ல் காஞ்சி மகாபெரியவர் வேதங்களின் தோற்றம் பற்றிய உபன்யாசங்கள் அடங்கிய தொகுப்பிலிருந்து நன்றியுடன் நமஸ்கரித்து இங்கே நான் பதிவு செய்து கொள்கிறேன்.. வியாசருக்கு வேதவியாசர் என்று பெயர் வேதங்கள் நிறைய இருந்திருக்கின்றன.. கலியுகம் ஆரம்பத்திற்கு முன் துவாபர யுகத்தின் முடிவில் வியாச பகவான் வேதங்களை நான்காக பிரித்தார்..” இனி வரப்போகிற யுகத்தில் ஜனங்களுடைய வயசும் குறைச்சல்; ஞாபகசக்தியும் குறைச்சல்; பெரிய யோக சக்திகள் எல்லாம் குறைச்சல் ஆகப் போகின்றன அல்லது போகப் போகின்றன.. ஒரேடியாக வேதம் அழிந்து போகாமல் இருக்க, ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தில் வேதங்களை எழுத்து வடிவமாக உருவாக்கினார்.. காதினால் கேட்டு வாக்கினாலே ஸ்வரத்தோடு அத்யயனம் செய்து லோகத்தில் வேதம் பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்க வேண்டுமென்று ஒவ்வொரு வேதத்தையும் ஒவ்வொரு ரிஷிக்கு உபதேசம் செய்தார்..
ஸுமந்து, பைலர், ஜைமினி, வைசம்பாயனர் என்ற நான்கு ரிஷிகள் இடத்தில் நான்கு வேதங்களையும் ஒப்படைத்தார்.. ஜைமினியிடத்தில் சாம வேதத்தை ஒப்படைத்தார் வைசம்பாயனரிடத்தில் யஜுர் வேதத்தை ஒப்படைத்தார்.. ஸுமந்துவிடம் ரிக் வேதத்தையும், பைலரிடம் அதர்வண வேதத்தையும் ஒப்படைத்தார்..
வேதம் முழுவதும் மந்திரங்கள் நிரம்பியிருக்கின்றன மிகவும் நியமமாகவும், ஆசாரமாகவும் இருந்து ஜபம் பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த மந்திரங்களின் சக்தியினால் உலகத்தில் ஒரு ஸ்ரேயஸ் ஏற்படும்..
வேதத்திற்கு ரிஷி என்ற பெயர் உண்டு.. ஆகையால், அந்த மந்திரத்தை யார் பார்த்தவர்களோ அவர்களுக்கு ரிஷி என்று பெயர்..
“ரிஷயோ மந்த்ர த்ரஷ்டாரா:”
எத்தனையோ அனாதியான சப்தங்கள் ஒலி ரூபமாக ஆகாசம் முழுவதும் வியாபித்திருக்கின்றன.. யோகாப்பியாசங்கள் செய்து மந்திரங்களை அனாதியான சப்தங்களை ரிஷிகள் கிரகித்துக் கொள்கிறார்கள் அப்படி கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களைத்தான் “த்ரஷ்டாக்கள்”என்கிறோம்..
ஒரு மருந்தை வாங்கி உபயோகப்படுத்தாமல் கொஞ்ச நாள் வைத்திருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும் அதேபோலத்தான் வேதத்தை அடிக்கடி அப்பியாசம் செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரிய சக்தி குறைந்துவிடும்.. அந்த வீரிய சக்தியை திரும்ப உண்டு பண்ணுவதற்கு பூஜை செய்து ஹோமம் செய்து பல தடவைகள் உச்சாடனம் செய்ய வேண்டும் இவ்வாறு செய்யாமல் தவறு செய்பவர்களுக்கு பிராயச்சித்தமாக இருப்பது காயத்ரி ஜெபம் ஆகும்..
வேதம் மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்பது சத்தியம்.. ஆகவே அதற்கு “அபௌருஷேயம்”என்றும் பிரம்மத்தால் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அடுத்த யுகம் ஆரம்பிக்கும் போதும் முன்னரே படைக்கப்பட்ட வேதங்கள் காற்றுவெளியில் இருப்பவை ரேடியோவின் ஒலிவாங்கி கருவியைப் போல மகரிஷிகளும் முனிவர்களும் கிரகித்து சுவடிகளில் பதிவு செய்ததை வேத வியாசர் நான்காகப் பிரித்து தந்தார்..
மேக்ஸ் முல்லர் என்கிற ஜெர்மானியர் வேதகாலம் கி-மு 1200 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுகிறார்.. ஆனால் பால கங்காதர திலகர் இதனை மறுக்கிறார் தன்னுடைய வேதகால கணக்கை 8000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நிரூபித்துக் காட்டுகிறார்.. வேறு ஒரு விஞ்ஞானி வேதம் தோன்றி குறைந்தது 25 ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறார் சிலேகல் என்ற ஜெர்மானியர் வேதங்கள் உலகத்தின் மிக மிகப் பழமையான நூல்கள் என்று கூறுகிறார்..
இந்து சமயத்திற்கு அடிப்படையானவை நான்மறைகள் என்று சொல்லப் படும் ரிக் வேதம்,யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகியவை ஆகும். இவற்றில் ரிக் வேதம் தான் மிகப் பழமையானது..அதர்வண வேதத்தில் முக்கியமாக மாந்திரீகம் மற்றும் தாந்திரீகம் பற்றி கூறப்பட்டுள்ளது என்பதால் இந்த வேதத்தினை தீமையாகக் கருதினார்கள் நம் முன்னோர்கள்.. இந்த வேதத்தினைப் பிற்காலத்தில் தான் சேர்க்கப்பட்டது என்றும் கூறுவர்..
அத்தியாயம் 4.
வேதகால வாழ்க்கை நெறிமுறைகள்
வேதகால வாழ்க்கையின் சில வழக்கங்களும் ரகசியங்களும் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்..
ஏகாசமே, திசிரசமே, திதிரசமே,பஞ்ச்சமே போன்ற மந்திரங்கள் இந்த பூமி சுற்று கிறதையும் சந்திரன் முதலிய கிரகங்கள் சுற்றுவதையும் அறிந்தார்கள்.. இவ்வாறு அறிந்து கொண்டவர்கள் எல்லோருமே ரிஷிகள்.. இவர்கள் இந்த நவீன வானியல் உண்மைகளை அறிந்து இருந்தார்கள்..
வேதத்தை யார் படிக்க முடியும் என்று சௌனக ரிஷி சொல்வதாவது:
“இளமையுடன் பலமுள்ளவர்களாலேயே அறிய முடியும் ஏன்? மொழி என்பது மேல் வழியாகச் செல்லும்..கீழ் வழியாக செல்லாது.. ஓசையுள்ள மொழி நாபியிலிருந்து கழுத்தில் வந்து வடிவத்தை அடையும்.. பிரம்மச்சாரிய இளங்காளையாக மிக வாழ்க்கை உள்ள எல்லோருக்கும் பலம் இருக்கும் அவனுக்கு மேலே செல்லும் சக்தியும் உண்டு அவனே வேத மந்திரங்களை உதவும் சொல்லவும் முடியும்”அதே நேரத்தில் மேற்சொன்ன தகுதியை உடைய பெண்களும் வேதம் பயின்று பெரும் பண்டிதைகளாக வேதகாலத்தில் இருந்துள்ளார்கள்.. அவர்கள்
1) கோஷை 2) கோதை 3) விசுவவரஸ் 4) அபாலை 5) உபநிஷதை 6) நிசதை7)பிரமாஜயை 8) அதிதி 9) இந்திராணி 10) சராமை 11) ரோமஸை 12) ஊர்வசி 13) லோபமுத்திரை 14) நதிகள் 15) யமி 16) ஸ்ரீ 17) லக்க்ஷை 18) ரஜினி 19) வாக்கு 20) சிரத்தை 21) மேதை 22) தட்சிணை 23) ராத்திரி 24) சூரிய சவிதா ஆகியோர்கள்.. வேதகால பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதிலும் சுதந்திரம் உண்டு..
வேத யக்ஞம்
வேதத்தின் பல சொற்கள் பகவானையும் அக்னியையும் இன்னும் பல இடங்களில் இடி முழக்கத்தையும் ரதங்களையும் கப்பலையும் விமானத்தையும் குறிக்கும்.. யக்ஞம் என்பது மனிதனே ஆகும்.. யக்ஞ தேவ பாண்டங்களே, நமது புலன்கள் இந்திரன் முதலிய தேவர்கள் இந்த உடலில் இங்கு இருக்கிறார்கள் நமக்கு எல்லா வன்மையும் கிடைக்க வேண்டும் என்று யாகத்தில் கேட்கப்படுகிறது.
பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், பிராணி யக்ஞம், அதிதி யக்ஞம் என்று கூறப்படும் யாகங்களின் பல மந்திரங்களின் பொருட்களை நாம் பார்ப்போமேயானால் நமக்கு தெளிவாக தெரியும்..
தேவர்களை துதித்து எல்லா உலகமும் எனக்கு வசமாக வேண்டும் என்று வேண்டிக் கொள்வது தான் பிரம்ம யக்ஞ மந்திரங்கள்.. பிராணிகளுக்கு ஃபுல் ஜலம் முதலியவற்றை அளித்து அதனை தினந்தோறும் திருப்திப்படுத்துவது அஜித் இயக்கமாகும்..
வேத ஸம்ஸ்காரம்
ஆசசுவாலாயனர், ஆபஸ்தம்பர் ஆகியோர் வேதத்திலிருந்து 16 சம்ஸ்காரம் களுக்கான மந்திரங்களை தொகுத்து வழங்கியுள்ளனர்.. அவை,
1) கர்ப்பதானம் 2) பும்ஸவனம் 3) சீமந்தம் 4) ஜாதகர்மம் 5) நாமகரணம் 6) சூடாகர்ணம் 7) நிஷ்கிரமணம் 8) அன்னப்பிராசனம் 9) கர்ண பேதம் 10) உபநயனம் 11) வேத ஆரம்பம் 12&13) சமாவர்தனம் 14) விவாகம் 15) வானப்பிரஸ்தம் 16) துறவரம் 17) அந்தியேஷ்டி. இவையெல்லாம் ஒரு மனிதனின் வாழ்நாளில் செய்யப்படவேண்டிய வைதீகச் சடங்குகள் ஆகும் இதற்கென தனி மந்திரங்களும் உண்டு இதற்கான வேத மந்திரங்களை விட அதனை பிரயோகம் செய்வதிலும் பல குறிப்புகள் உண்டு நம்முடைய வாழ்க்கையின் அவசரம் செல்வம் தேடுவதில் உள்ள ஆர்வம் மேலே சொன்னவைகளை சிந்திக்க வைப்பதில்லை அதனால் நாம் இவைகளை அறிந்த பிரகஸ்பதியின் வாக்கினிலே மந்திரமாக செய்வித்து இதனை விடுபடாமல் செய்து வர வேண்டும்..
அத்தியாயம் 5
வேதாங்கங்கள்
வேதங்களில் ஆறு உறுப்புகள் உள்ளன..வேத ஒலிகளையும், அக்ஷரங்களின் உச்சரிப்புகளையும் சரிவர புரிந்து கொண்டு பயன்படுத்துவதே வேத தர்மமாகும்.வேதங்களக் கற்பிப்பதில் வேதாங்கங்களே முதன்மை வகிக்கின்றன.. செவியில் கேட்டு ஒலி வடிவமும் அட்சரம் பிசகாமல் ஒதுதலே வேதத்தின் சிறப்பாகும்.. எனவேதான் நம் முன்னோர்கள் குருகுலத்தில் தமது குழந்தைகளை சேர்ப்பித்து வேதம் பயில வைத்தார்கள்.! தற்போதைய காலத்திலும் வேதம் பயில பாடசாலைகள் உள்ளன.

வேதாங்கங்கள் ஆறு என்று பார்த்தோம் அல்லவா? அவை:-
1). சீக்ஷா– உச்சரிப்பு முறைகளை விளக்குவது
2). வியாகரணம்- இலக்கணம்
3) சந்தஸ்– செய்யுள் இலக்கணம்; மந்திரங்களின் அமமப்பு
4) நிருக்தம்– சொல் இலக்கணம்
5) ஜோதிடம்— வான சாஸ்திரம்
6) கல்பம்– செயல் முறை..
மேற்குறிப்பிட்ட ஆறு உறுப்புகளைத் தான் வேதாங்கங்கள் அல்லது வேத சாஸ்திரங்கள் என்று கூறுவர்.
வேதத்தின் முதல் உறுப்பான “சீக்ஷா” பற்றி பார்ப்போம்
சீக்ஷா என்றால் உச்சரிப்பு முறை என்பது பொருள். இதுவே வேத மந்திரங்களுக்கு உயிர்; அந்த உயிரானது உச்சரிப்பில் உள்ளதால் அதனைச் சரியாக உச்சரிக்க வேண்டும்..இதனை அட்சர சுத்தம் என்று கூறுவர்.. சம்ஸ்கிருத மொழியில் சில அட்சரங்களுக்கு நான்கு சப்தம் (ஒலி) இருக்கும்.
உதாரணமாக, தமிழில் ‘ க’ என்ற எழுத்தை எடுத்து கொள்வோம்..இந்த எழுத்து சம்ஸ்கிருத மொழியில் க( ka), க்க(kka),க(ga) ,க்க(gha) என்று ஒலி மாறுபாடு உச்சரிப்பில் இருக்கும்.. நாம் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களை தமிழில் எழுதிப் படிக்கும் போது அந்த எழுத்தின் மேல் 1,2,3,4 என்று குறிப்பிடப் பட்டு இருப்பதை பார்த்து இருப்போம்.. அது அந்த அட்சரத்தினை எந்த ஒலி மாத்திரையில் உச்சரிக்க வேண்டும் என்று கூறுவது ஆகும்.. ஒவ்வொரு அட்சரத்தினையும் குரல் உயர்த்தி சொல்வதா அல்லது தாழ்த்திச் சொல்வதா , சமமாகச் சொல்வதா என்ற வேறுபாடுகள் உண்டு.. இந்த மூன்றையும் முறையே உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்று கூறுவர்..
இவைகள் யாவும் இருக்க வேண்டிய அளவில் இருந்தால் ஸ்வர சுத்தம் என்று கூறுவர்..அட்சர சுத்தம், ஸ்வர சுத்தம் இரண்டுமே மந்திரத்தின் இரு கண்கள்..இவை இரண்டும் சரிவர இருந்தால்தான் மந்திரங்களை பிரயோகிப்பதின் பலன் தரும்.. இதன் தொடர்பாக வாசகர்கள் ஒரு கதை படித்தோ கேள்விப்பட்டோ இருக்கலாம்.. இராவணனின் தம்பி கும்ப கர்ணன் ப்ரும்மாவை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற போது ” நித்தியத்துவம்” என்று வேண்டுவதற்கு பதிலாக ” நித்திரத்துவம்” என்று வேண்டியதால் அவன் உறங்கும் நிலை ஏற்பட்டது என்பது.. ஆகவே மந்திரங்களின் பொருள், அதன் ஒலி மற்றும் உச்சரிப்பில் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. மந்திரங்கள் கூட்டமாக உள்ள வேதத்திற்கு மூச்சு ஸ்தானம் என்று பெயர்..
இனி, மற்ற அங்கங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
வளரும்