பரந்தாமனின் பஞ்ச நிலைகள்

ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்

ஸபீத வஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம்

ஸஹார வக்ஷஸ்தலஸோபி கௌஸ்துபம்

நமாமி விஷ்ணும் ஸிரஸா ஸதுர்புஜம்

ஹரி: ஓம்

சங்கு சக்கரம் உடையவரும், கிரீடத்தையும் குண்டலங்களையும் அணிந்திருப்பவரும், தாமரைக் கண்களைக் கொண்டவரும் மாலைகள் அணிந்த திருமார்பில் கௌஸ்துப மணியை உடையவரும் நான்கு திருக்கரங்களை உடையவருமான ஸ்ரீ விஷ்ணுவாகிய எம் பெருமானே உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..

பரந்தாமனான அந்த ஸ்ரீ விஷ்ணு பாகவத உத்தமர்களுக்காக சேவை சாதிக்கும் வண்ணமாக ஐந்து நிலைகளில் தரிசனம் தருகிறார்..அவை பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் மற்றும் அர்ச்சை என்பனவாகும்..

இவற்றில் பரம் என்ற நிலையில் பகவான் ஸ்ரீ விஷ்ணு பரமபதத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி சமேதராக எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.. இங்கே நித்ய சூரிகள் இருந்து கொண்டு பகவானுக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டு பகவானின் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை கண்ணாரக் கண்டு ஆனந்தக் களிப்பில் வாழ்கின்றனர்.. இவர்கள் பெருமாளையும் தாயார்களையும் சாம கானத்தினால் வாயாரப்பாடி மனமார நினைந்து மனம் மகிழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.. இவர்களுக்கு மெய் வருத்தம், பசி, தாகம், தூக்கம் ஆகிய எதுவுமின்றி வாழ்கின்றனர்..

அடுத்தது.. வியூகம் . வியூகம் என்றால் விரிவு படுத்துதல்.. இது பற்றி நாம் போர்களில் கேள்வி பட்டு இருப்போம்.. அதுவல்ல இது.. பகவான் ஸ்ரீ விஷ்ணு தமது க்யாதிகளை விரிவு படுத்த பரமபதத்தில் இருந்து இறங்கி பாற்கடலில் பள்ளி கொண்டு பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.. இந்த நிலையே வியூகம் எனப்படுகிறது..

கிழக்கு நோக்கி சிரிப்புடன் வாசுதேவனாகவும்,

தெற்கு நோக்கி சிங்க முகத்துடன் சங்கர்ஷணாகவும்

வடக்கு நோக்கி வராக முகத்துடன் பிரத்யும்னனாகவும்

மேற்கு நோக்கி ருத்ர முகம் கொண்டு அனிருத்தனாகவும்

வியூகம் அமைத்து நான்கு திசைகளிலும் காக்கின்றார் என்பது ஐதீகம்..பிரளய காலத்தில் வியூக வாசுதேவனுடன் மற்ற மூன்று முகங்களும் ஐக்கியமாகி விடும்..

அடுத்து நாம் அறிந்து கொள்வது விபவம் பற்றி..

விபவம் என்பதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் தமது பக்தர்களை காத்து ரக்ஷிக்கவும் பரந்தாமன் இப்பூவுலகில் இறங்கி வருகவே அவதாரங்கள் எனப் படும்..

இந்த அவதாரங்கள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச அவதாரம் என்று வகைப்படுத்தலாம்..

இவற்றில் ராமர், கிருஷ்ணர், வாமனன், பரசுராமர் அவதாரங்கள் பூர்ணாவதாரம் ஆகும்.. ஏனெனில் இவ்வவதாரங்களில் பெருமாள் மானுட ரூபம் தரித்து வாழ்ந்தார்..

மச்சம் மற்றும் கூர்ம அவதாரங்கள் அமிசாவதாரம்..

நரசிம்ம அவதாரம் ஆவேச அவதாரம்..எங்கே உன் ஸ்ரீஹரி? என்று ஹிரணியன் கேட்ட நொடியில் தூணைப் பிளந்து கொண்டு ஆவேசத்துடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணன் அவதரித்தார்..

இதுவரை ஒன்பது அவதாரங்கள் பூரணத்துவம் பெற்ற நிலையில் பகவானின் மற்றொரு அவதாரம் கல்கி அவதாரம் இன்னும் நிகழப் பெறவில்லை.. அவரது அவதாரம் தோன்றிவிட்டதா? அல்லது தோன்றவில்லையா? எப்போது அவர் திருவுள்ளம் என்பது இன்னும் அறியப்படவில்லை..

இந்த பத்து அவதாரங்கள் தவிர மேலும் 14 அவதாரங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது..இவை ஹயக்க்ரீவர், இருது மன்னன், நவநாராயணன், மோகினி, தத்தாத்ரேயர், தன்வந்திரி, ஜனகர், நாரதர், குப்தர், அம்ஸவர்த்தனர், ரிஷபன், கபிலர், வியாசர், யக்ஞர்..இது தவிர லிங்க புராணத்தில் கௌதம புத்தரின் அவதாரமும் விஷ்ணுவின் அவதாரமாகக் கூறப்பட்டுள்ளது..

அடுத்து நாம் அறிந்து கொள்ள இருப்பது அந்தர்யாமித்துவம்

அந்த பரம் பொருளான ஸ்ரீ மன் நாராயணன் ஒவ்வொரு ஜீவாத்மா உள்ளேயே இருந்து கொண்டு நம்மை இயக்கி வழி நடத்திக் கொண்டு இருக்கிறார்.. அந்த நிலை எல்லோருக்கும் கிட்டுவதில்லை.. முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் பரம பாகவத உத்தமர்களுக்கு மட்டிலுமே இந்நிலை சாத்தியமாகிறது..

இறுதியாக நாம் அறிந்து கொள்வது அர்ச்சை

மேலே சொல்லப்பட்ட நான்கு நிலைகளுமே நமக்கு வாய்க்கவில்லை.. பரமபதம் சென்று அந்த பரந்தாமனின் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை தரிசிக்கும் பாக்கியம் நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.. நாம் நித்ய சூரிகளும் இல்லை.. வியூகத்தை காண நாம் தேவர்கள் அல்ல..விபவ அவதாரங்களைக் காண நாம் அந்த காலகட்டத்தில் இல்லை.. ஒரு வேளை நம் முற்பிறப்புக்ளுக்கு அந்த பாக்கியம் கிட்டியிருந்ததோ அதனை உணரும் நிலையும் நமக்கில்லை..எனவே நமக்கு கிட்டிய ஒரே வழி உருவ வழிபாடு..மரம் கல் உலோகம் கொண்டு அரச்சாவதார மூர்த்தியாக அந்த பரந்தாமனை நாம் விக்ரக ஆராதனை செய்கிறோம்..

மனிதர்கள் வடிவமைக்காமல் அந்த பரந்தாமனே அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியுள்ளதும் உண்டு.. பக்தர்களுக்கு விரும்பிய வடிவத்தில் சேவை சாதிப்பதும் உண்டு.. அவர் மிக எளிமையானவர்.. நாம் நினைத்த போது அவரை தரிசிக்க முடியும்.. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஒரு குழந்தை போல நீராடுவதற்கும், உணவு உண்ணவும் பட்டர்களுக்காக காத்திருப்பதும் தான்.. சர்வ சுதந்திரமும் பெற்ற அந்த பெருமானே நமக்கு ஒரு அடிமை போல எளிமையாக்கிக் கொள்கிறான்.. திருக்கோயிலில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்களுக்காக வீதி உலா வந்து சேவை சாதிக்கும் அவரது எளிமை விவரிக்க இயலாது.

பகவான் அர்ச்சாவதார மூர்த்தியாக எழந்தருளி சேவை சாதித்த பல திருக்கோயில்கள் உள்ளன.. அவற்றில் 108 திவ்ய ஸ்தலங்களில் எழந்தருளி சேவை சாதிக்கும் பெருமாளை பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.. அந்த திவ்ய தேசங்கள் எங்கே உள்ளன என்பதனைக் குறிக்கும் ஒரு பழம் பாடலில் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி

என் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம்- சீர் நடுநாடு

ஆறோடு ஈரெட்டுத் தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு

கூறு திருநாடு ஒன்றாக்கொள்..

சோழநாட்டில். 40

பாண்டிய நாட்டில் 18

மலை நாட்டில் 13

நடு நாட்டில் 2

தொண்டை நாட்டில் 22

வட நாட்டில் 12

திருநாட்டில் 1..

இந்த திவ்ய தேசங்களில் 106 ஐ சேவித்தவர்கள் இந்த நிலவுலக வாழ்நாள் முடிவுற்றதும் பெருமாளே மற்ற இரு திவ்ய தேசங்களில் நமக்கு சேவை சாதிப்பார் என்பது ஐதீகம்..

பெருமாளின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது..

ஸ்தாபனா என்பது நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்க வழிபடுதல்

அஸ்தாபனா என்பது அமர்ந்த திருக்கோலம்

ஸமஸ்தாபனா என்பது சயனக் கோலம்

பரஸ்தாபனா என்பது வாகனங்களில் பற்பல ரூபத்தில் சேவை

பிரதிஷ்டானா என்பது சன்மார்ச்சையுடன் சேவை

மேலே குறிப்பிட்ட 108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலங்கள்

கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் 39

மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் 12

தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் 14

வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் 2

அடுத்து அமர்ந்த திருக்கோலங்கள்

கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் 13

மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் 3

தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் எதுவும் இல்லை

வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் 1

அடுத்தது சயனத் திருக்கோலங்கள்

கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் 18

மேற்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் ஸ3

தெற்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் 3

வடக்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் எதுவுமில்லை..

மேற்குறிப்பிட்ட சயனத் திருக்கோலத்தில் பத்துவித சயனங்கள் உள்ளன..

அவை. 1) ஜலசயனம் 2) ஸ்தல சயனம் 3) புஜங்க சயனம் அதாவது சேஷசயனம் 4) உத்தியோக சயனம் 5)’வீர சயனம் 6) போக சயனம் 7) தர்ப்ப சயனம் 8) பத்ர சயனம் 9) மாணிக்க சயனம் 10) உத்தான சயனம்

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்

அச்சுதா அமரேரே ஆயர்தம் கொழந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!!!

மாரி மலை முழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரிமயிர் பொங்க வெப்பாடும் பே ர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமாப் போலே

நீ பூவை பூவண்ணா உன் கோயில் நின்றிங்கே போந்தருளி

கோப்புடைய சிங்காசனித்திலிருந்து யாம் வந்த காரியம்

ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசலிலே

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!!

இந்த மூன்று நிலைகளிலும் ஒரு சேர சேவை சாதிக்கும் சில தலங்களும் உள்ளன..அவை திருநீர்மலை, திருக்கோஷ்டியூர், மற்றும் மதுரைக் கூடலழகர், ஆகிய ஸ்தலங்கள் ஆகும்..

இக் கட்டுரையை என்னுள் இருந்து எழுத வைத்த அந்த பரந்தாமனே போற்றி!!!

ஓம் நமோ நாராயணா!!!!

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

One thought on “பரந்தாமனின் பஞ்ச நிலைகள்

  1. What a valuable information I got through your என்மனம்.
    I treated this as a blessings of SriRam.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: