சென்னை நெல்லூர் ஹைவேயில் பொன்னேரியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில், மீஞ்சூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் பச்சை பசேல் என்ற வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் தேவதானம். இந்த ஊரில் தன்னைப் போற்றிப் பாடிய தும்புருவுக்கும், அனுமனுக்கும் சக்ரதாரியாக சயனக் கோலத்தில் பெருமாள் காட்சி தந்ததால் அதனைக் காண தேவர்கள் அனைவரும் வருகை தந்ததால் இவ்வூருக்கு தேவதானம் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது..
மேலும் அவதானம் என்ற சொல்லுக்கு உய்த்தணர்தல் என்று பொருளும் உண்டு.. தேவர்கள் இந்த ஊரில் உள்ள பெருமாளை உய்த்துணர்ந்ததால் இந்த ஊருக்கு இப்பெயர் அமைந்திருக்கலாம்..
இந்த ஊரில் உள்ள நிலங்கள் யாவும் தேவர்களால் கிராம மக்களுக்கு தானம் கொடுத்ததால் தேவ தானம் என்று வழங்கப்படுகிறது என்றும் சிலர் கூறுவர்..
ஆயிரம் வருடங்களுக்கு மேலான பழமையான திருக்கோயில்.. ஸ்ரீ ரங்கத்திற்கும் முன்பானக் கோயில் என்று நம்பப்படுகிறது.. ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் பள்ளி கொள்ளப் போகிறார் என்பதை முன்னரே அறிந்த தேவர்களும் முனிவர்களும் அந்த திருக்கோலத்தைக் காண பல்வேறு அரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.. விபுலனின் குமாரன் தும்புரு ஒரு கந்தர்வன்..இந்திரனைப் புகழ்ந்து பாடிய தவறான செய்கையால் நாரதரால் சாபமிடப் பட்டார். தன் தவறுணர்ந்து சாபவிமோசனம் வேண்டினார்..விதிவசத்தால் பூமியில் திருவேடகத்தில் ஒரு பொய்கையில் தள்ளப்பட்ட அவர் நீந்தி எதிர் கரை சேர்ந்து தவம் இருந்து சித்தி பெற்றார்.. சயனக்கோலத்தில் பெருமாளை தரிசிக்க சென்று கொண்டிருந்த அவர் மன்க் கண்ணில் கண்டுணர்ந்து களித்தார்.. மற்றவர்கள் அந்த காட்சியைக் காண வேண்டவே தேவர்கள் முனிவர்கள் அனைவர்க்கும் சயனக்கோலத்தில் காட்சி தந்தார்..
அதேபோல் இராம இராவண யுத்தத்தின் போது அனுமன் சஞ்சீவினி மலையை எடுத்து வந்த போது இந்த பெருமாளையும் தரிசித்து சென்றுள்ளார்..ஆகவே சன்னதியில் நித்திய வாசிகளான தும்புருவுக்கும், அனுமனுக்கும் சேவை சாதிக்கிறார்..




இத்தலத்தின் சிறப்பைக் கேள்விப்பட்ட சாளுக்கிய மன்னர் ஒருவர் சுமார் ஒன்றரை ஏக்கரில் இந்த திருக்கோயிலை கட்டி ” வடரங்கம” என்று அழைத்துத் திருப்பணிகள் பல செய்தான்.. ஸ்ரீ ரங்கநாதர் பதினெட்டரை அடி நீளமும், ஐந்தடி உயரமும் கொண்டு மிகவும் அழகாக வசீகரிக்கும் தோற்றத்துடன் ஐந்து தலை ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார்.. கிழக்கு திருமுக மண்டலம்..
பெருமாளின் திருமேனி சாளக்கிராம கல்லால் வடிவமைக்கப்பட்டது.. மூலவருக்கு தைலக்காப்பு மட்டுமே செய்ய படுகிறது.. பக்கத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி உள்ளார்.. மூலஸ்தானத்திற்கு வெளியில் மணவாள மாமுனிகள், விஷ்வக்சேனர், ஆழ்வார்கள் வேதாந்த தேசிகர் பகவத் இராமானுசர், வேணுகோபாலன் சன்னதிகளும் உள்ளன. தாயார் ஸ்ரீ ரங்கநாயகியும் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார்.. தாயார் இங்கே படிதாண்டா பத்தினியாக தனிக் கோயில் நாச்சியாராக எழுந்தருளி உள்ளார்.!
இத்திருக்கோயில் ஸ்தல விருட்சம் பாரிஜாதம்..
சென்ற ஜனவரி மாதம் இத்திருக்கோயிலை நான் தரிசித்து மகிழ்ந்தேன்..
இத்திருக்கோயிலில் ஏழு சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றிப் பெருமாளையும் புற்றில் உள்ள நாகராஜரையும் வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்றும் திருமண தடைகள் நீங்குகின்றன என்பதும் பக்தர்களின் நம்பிக்கை..
இக்கோயில் வடரங்கம், உத்தர ரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.. மார்கழி உற்சவம் தமிழ் புத்தாண்டு போன்ற நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தரிசன நேரம் காலை 7-11; மாலை. 4-7.
அன்பு வாசகர்களே இக்கோயிலைத் தரிசித்து அரங்கனின் அருள் பெறுவீர்களாக..!!!