
ஸமஸ்த ஸம்பத்ஸுகதாம் மஹாச்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாச்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாச்ரியம்
பஜாம்யஹம் ஞானகரீம் மஹாச்ரியம்
– லக்ஷ்மி ஹ்ருதயம்
ஆடி வெள்ளியில் நம்மைத் தேடி வருகிறாள் அன்னை வரமகாலக்ஷ்மி! வரலக்ஷ்மி விரதம் அனைத்து சுமங்கலி பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.. அந்த விரத மகிமை பற்றிய புராணக் கதைகள் வாசகர்கள் எல்லோரும் அறிந்த ஒன்று..எனவே அதனையே திரும்ப உங்களுக்கு சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.. இந்த வெள்ளிக்கிழமை நாம் ஒரு மூன்று திருக்கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..இவை மூன்றும் மகாலக்ஷ்மியின் கோவில்கள்..
முதலில் நாம் தெரிந்து கொள்ள இருப்பது கோலாப்பூர் மகாலக்ஷ்மி கோயில்.. இக்கோயில் பற்றி அனேகமாக பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.. இருப்பினும் நான் அறிந்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..
கோலாப்பூர் மகாலக்ஷ்மி
இந்த கோயில் மகாராட்டிர மாநிலத்தில் கோலாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.. இந்து மத புராணங்களில் உரைத்துள்ளபடி இந்த பாரதத்தில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த சக்தி பீடம் இந்துக்களுக்கு ஒரு மிகவும் சிறப்பு பெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும்.. இந்த இடத்தின் சிறப்பு இங்கே ஒருவன் வந்து தேவியை வழிபடுவதால் அவன், அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை வரமகாலக்ஷ்மி நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதே ஆகும்..
இந்தக் கோயில் கன்னடத்து சாளுக்கிய மன்னர்களால் கி.பி.700 ஆண்டுகளில் ஆட்சி புரிந்த போது முதல் முதலாக கட்டிய கோவில்களில் ஒன்றாகும்.. கருங்கல்லில் அமைந்த ஒரு அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் கூடிய மகுடம் தரித்த தேவியின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது..

மேலும் இந்த விக்ரகம் மணிக்கற்களால் வடிவமைத்ததாகும்.. இந்த விக்ரகத்தின் எடை சுமார் 40 கிலோ கிராம் அளவாகும்.. மகாலக்ஷ்மியின் வடிவம் கறுப்பு கல்லில் செதுக்கியதாகும்.. உயரம் சுமார் மூன்று அடிகளாகும்.. இந்த கோயிலில் உள்ள ஒரு சுவரில் தேவியின் ஸ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது..விக்ரகத்தின் பின்னால் தேவியின் வாகனமாக சிங்கத்தின் சிலை செதுக்கப்பட்டுள்ளது.! மேலும் கிரீடத்தில் சேஷநாகத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.. தேவியின் நான்கு கரங்களில் இந்துக்கள் புனிதமாகக் கருதப்படும் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.. கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் ஒரு கௌமோதகி என்ற தண்டாயுதமும், அது தலை கீழாக தரையைத் தொட்டுக் கொண்டு உள்ளது..இடது மேல் கரத்தில் ஒரு கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடது கரத்தில் ஒரு பான பாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்து காணப்படுகிறாள். தேவி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறாள்.. மேற்கு சுவர் பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது.. அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும்.. சுமாராக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21 தேதியை ஒட்டி மூன்று நாட்கள் இவ்வாறு நடை பெறும்.!
இந்த கோவிலின் வெளிப்ரகாரத்தில் நவகிரகங்கள், மகிஷாசுரமர்த்தினி, விட்டல்-ரகுமாயி, சிவன் விஷ்ணு துளஜா பவானி மற்றும் பல இதர தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. இவைகள் 11ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.. இந்த கோயில் வளாகத்தில் மணிகர்ணிகா குண்டம் எனும் திருக்குளம் உள்ளது.. அதன் கரையில் விஷ்வேஷ்வர் மகாதேவருக்கான ஒரு கோயிலும் உள்ளது..
ஒவ்வொரு நாளும் ஐந்து கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், பௌர்ணமி அன்றும் தேவி பிரகாரத்தை சுற்றி வலம் வருவாள்..
இக்கோயிலில் சமீபத்தில் தேவி ஸ்ரீ மகாலட்சுமிக்கு தங்கத்தில் நெய்யப் பட்ட புடவை சார்த்தப்பட்டது.

அடுத்து நாம் பார்க்க இருப்பது கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்..
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், ஈச்சனாரி

இந்த கோயில் கோவை மாநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது..
மூலவர் மற்றும் உற்சவர்: மகாதுர்கா, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதி. இக்கோயில் வைதீகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது..
இந்த கோயில் வட இந்திய கோயில் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.. பூஜைகள் மட்டும் தென் மாநில ஆகமங்களின் படி நடக்கிறது.. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.. கோயில் நுழைவாயிலில் ஸ்ரீ கௌரி விநாயகர் மற்றும் ஸ்ரீ செந்தில் குமரன் சன்னதிகள் உள்ளன.. தெற்கு நோக்கி ஆஞ்சனேயர் சன்னதி. கோயிலைச் சுற்றி நந்தவனம் அமைந்துள்ளது..
இந்த கோயில் 2002ஆம் ஆண்டு ஜுன் மாதம் கட்டப்பட்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்வாமிகளால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.. மீண்டும் 2014ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் நடை திறக்கும் நேரம்: காலையில் 7.30 மணி முதல் 12 மணி வரை; மாலையில் 5 மணி முதல் 8?30 மணி வரை..
தசரா, விஜயதசமி தமிழ் வருடப் பிறப்பு அனுமன் ஜெயந்தி ஆடி வெள்ளிக்கிழமைகளில் உற்சவம் நடைபெறுகிறது..
அடுத்து நாம் பார்க்க இருப்பது கடவில் மகாலட்சுமி திருக்கோயில், கேரளா..
கடவில் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயில், பள்ளிபுரம், ஆலப்புழை மாவட்டம், கேரளா
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் பகுதியில் நெசவு தொழில் செய்து வந்த சில குடும்பத்தினர் தங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள கேரளா மாநிலம் சேர்த்தலா அருகில் உள்ள ஒரு இடத்திற்கு குடி பெயர்ந்தனர்.. அங்கே அவர்கள் தொழிலைத் துவங்கும் முன் அவர்கள் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் வழிபட்டு வந்த மகாலட்சுமியை நினைத்து வழிபட்டனர்.. அங்கு அவர்களது தொழிலுக்கு நன்மதிப்பும் வருவாயும் கிடைத்தது.. அவர்கள் பொருளாதாரம் உயர்ந்தது.. மகிழ்ச்சி அடைந்த அந்த மக்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அந்த அன்னை மகாலட்சுமியை தாங்கள் இருக்கும் இடத்தில் வந்து கோயில் கொள்ளுமாறு வேண்டினர்.. அவர்கள் வேண்டியபடியே அங்கிருக்கும் குளம் ஒன்றின் கரையில் தாங்கள் வழிபட்ட மகாலட்சுமி வந்திறங்கியிருப்பதை அறிந்த அம்மக்கள் அங்கு புதிதாக கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர் என்பது தலவரலாறு..

இந்த கோயில் கேரள மாநிலம் ஆலப்புழையிலிருநது 30 கி.மீ தொலைவில் சேர்த்தலா என்ற இடத்தில் வடகிழக்கில் 7 கி.மீ தொலைவில் உள்ளது..சேர்த்தலாவிலிருந்து தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன..
இக்கோயிலில் இருக்கும் தேவி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் முன்புற வலது கையில் நெற்கதிர்கள், இடது கையில் கிளி, பின்புற வலது கையில் சக்கரமும் இடது கையில் சங்கும் ஏந்தி காட்சி தருகிறார்.. செல்வம், ஞானம், உணவு, மன் உறுதி, புகழ், வீரம், நன்மக்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் ஆகிய எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் செல்வ லட்சுமியாக அருள் பாலிக்கிறார்..
இக்கோயிலின் சுற்றுப் பகுதியில் கணபதி சிவன் ஐயப்பன் கொடுங்காளி க்ஷேத்திர பாலகர்கள் சன்னதிகள் உள்ளன.. ஆலயத்தின் நுழைவு வாயிலில் ஒன்பது கோள்களுக்கான அதி தேவதைகள் ஒரே இடத்தில் இருப்பது தனிச்சிறப்பு..
கேரள நாட்காட்டியின் படி மகர(தை) மாதத்தில் வரும் புனர் பூசம் நாளில் கோயில் நிறுவப்பட்ட நாள், மகர சங்கராந்தி மாசி சிவராத்திரி புரட்டாசி நவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்..
வாசகர்கள் அனைவரும் வரலக்ஷ்மியை தங்கள் இல்லங்களில் ஆவாஹனம் செய்து பல செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ அந்த வரமகாலக்ஷ்மியை வேண்டுகிறேன்