பாங்காக் நகரின் டான்ம்யூங் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருந்து அந்த விமான வான் நோக்கி பாய்ந்து மிதக்க ஆரம்பித்தது..ஜன்னலோரத்தில் அமர்ந்து இருந்த நான் வெளியே பஞ்சுப் பொதிகளாய் காணும் மேகக் கூட்டங்கள்..அதனைப் பின்நோக்கி தள்ளி விமானம் பறந்து கொண்டிருந்தது.. என் நினைவுகளும் தான்…..
“ நடாஷா.. அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்.. நான் இங்கே கிச்சனில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்..நீ அங்கே பெரிதாக ப்ளேயரில் சவுண்ட் வைத்து டேன்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறாய்.. சற்று இங்கே வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு…” அதன் பிறகு என் சித்தி ஏதோ முணுமுணுப்பு செய்து கொண்டு இருந்தார்..
“ இதோ வந்து விட்டேன் சித்தி” என்ற வாறே ப்ளேயரை ஆஃப் செய்து விட்டு கிச்சனில் நுழைந்தேன்.. அதற்குள் என் மொபைல் சிணுங்கியது.. எனது ஃப்ரண்ட் ஜோசஃபைன் மறு முனையில்..
“ நடாஷா.. நமக்கு ஒரு குட் நியூஸ்.. நமது குரூப்பிற்கு ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கிறது.. பாங்காக்கில் ஒரு பெரிய ஹோட்டலில் பார் டான்ஸராக.. மாதம் பத்தாயிரம் டாலர்கள்.. மூன்று மாதங்கள் கான்ட்ராக்டில்.”
அவள் சொல்ல சொல்ல எனக்கு சிறகுகள் விரிந்து பறக்க துவங்கியது..
ஆமாம்.. நான் நடாஷா கேப்ரியல்.. ஒரு க்ளப் டேன்ஸர்.. எனக்கு வயது இருபது.. எனது ஐந்தாம் வயதில் என் அம்மா என்னை விட்டு விட்டு போய் விட்டாள்.. இப்போது என் அப்பாவின் இரண்டாம் மனைவி சூசன் உடன் தான் இருக்கிறேன்..
நான் இன்னும் பத்து நாட்களில் தாய்லாந்து புறப்பட வேண்டும்..மெல்ல மெல்ல என் சித்தியிடம் விவரத்தை சொன்னேன்.. அவள் பொரிந்து தள்ளி விட்டாள்.. கூடவே என்னுடைய அப்பா தன் பங்கிற்கு வசை பாடினார்.. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாக எனது பயணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டேன்.. அந்த நாளும் வந்தது.. இதுதான் எனது முதல் விமான பயணம்.. விமானத்துடன் போட்டி போட்டு கொண்டு என் மனம் விண்ணில் பாய்ந்தது.. லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது..பல மணி நேரப் பயணத்திற்கு பிறகு நான் தாய்லாந்து நாட்டின் விமான நிலையத்தில் இறங்கினேன்.. அந்த விமான நிலையத்தின் பெயர் கூட எனக்கு தெரியாது.. எல்லாம் என் ஃப்ரெண்ட் ஜோசஃபைனின் ஏற்பாடு.. அவள் இதற்கு முன் சில தடவைகள் இங்கே வந்திருப்பதாக எனக்கு சொன்னாள்..அது தவிர அவள் மேலும் சில நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் தெரிவித்தாள்..அவளே முன்னின்று எல்லா ஃபார்மாலிடீஸும் முடித்ததனால் எனக்கு சிறிதும் சிரமம் ஏற்படவில்லை.. அவள் என் கணிப்பில் மேலும் உயர்ந்து நின்றாள்..
அன்று முழுவதும் எங்களுக்கு ரெஸ்ட்.. மாலையில் கொஞ்சம் ஷாப்பிங்.. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஏர்போர்ட்டில் ரிசீவ் செய்து எங்களை ஒரு டீசன்டான ஹோட்டலில் தங்க வைத்தனர்.. அவர்கள் கொடுத்த முன்பணத்தில்தான் ஷாப்பிங்..
இரண்டாம் நாள் மாலை நாங்கள் டான்ஸ் ஆடவேண்டிய க்ளப்பிற்கு அழைத்து சென்றார்கள்.. இரவு நடனம் துவங்கியது..முன்னரே கொஞ்சம் ரிகர்சல் பார்த்து இருந்ததால் நான் என் திறமைகளை வெளிப்படுத்தி ஆடினேன்..பலத்த கைதட்டல் கிடைத்தது.. எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது போன்ற ஒரு மன மகிழ்ச்சி.. என்னைப் பல பேர் நெருங்கி வாழ்த்து தெரிவித்தனர்.. அதில் ஒரு முகம் மட்டும் ஏனோ என் நெஞ்சில் ஆழப் பதிந்தது..
மறுநாள் காலையில் நான் தங்கியிருந்த ஹோட்டலின் ரெஸ்டாரன்ட்டில் நானும் ஜோசஃபைனும் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட அமர்ந்திருந்தோம்.. அப்போது நேற்று பார்த்த அந்த முகம் ரெஸ்டாரண்ட்டின் கண்ணாடிக் கதவிற்கு வெளிப்புறம் தெரிந்தது.. என் மனதில் மீண்டும் ஒரு படபடப்பு.. அவன் நம்மை சந்திபபானா என்ற எதிர்பார்ப்பு..நினைத்தது நடந்தது.. அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.. சுற்றும் முற்றும் பார்த்த அவன் நேரே எங்கள் டேபிளுக்கு வந்தான்.. ஒரு புன்சிரிப்புடன் எங்கள் எதிரில் அமர்ந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.. அவன் பெயர் மைக்கேல்.. சுருக்கமாக மைக் என்று கூப்பிடுவார்கள் என்று சொல்லி நீங்கள் என்னை யூஸ் பண்ணிக் கொள்ளலாம் என்று ஒரு பலத்த சிரிப்பு சிரித்தான்.. அவன் ஜோக் அடிப்பதாக நினைத்து கொண்டு அந்த சிரிப்பு.. எனக்கு அவன் சொன்னது முதலில் புரியவில்லை.. பிறகு புரிந்தது.. நானும் சிறிது புன்னகைத்தேன்.. விரைவிலேயே எங்களின் உற்ற தோழனானான்..அவனின் பழக்கம் என்னுடன் மிகவும் நெருக்கமானது..
அடிக்கடி எனது ஹோட்டலுக்கு வந்து எங்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு என்னைத் தனியே வெளியில் அழைத்துச் சென்றான்.. அவனுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்தேன்.. சுற்றுலா மையங்கள் எல்லாவற்றையும் எனக்கு காண்பித்தான்.. ஒரு நாள் அவன் என்னை மிகவும் நேசிப்பதாக மிகவும் நேர்த்தியான முறையில் தனது காதலை வெளிப்படுத்த, அதனை நான் முன்னரே எதிர்பார்த்து இருந்ததால் சற்று தயக்கம் காட்டினேன்.. எனது குடும்பச் சூழல் மற்றும் நான் இந்த கிளப் டான்ஸராக மேற்கொண்ட நிலை ஆகியவைகளை அவனிடம் மறைக்காமல் சொன்னேன்.. அவன் எல்லாவற்றையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டான்..இனி என்னை ராணி போல வைத்து வாழுவேன் என்று சொன்னா(ன்)ர்.. அவரிடத்தில் எனக்கு மரியாதை வந்தது.. நான் அமெரிக்கா திரும்பும் நாளும் வந்தது… ஒருவரையொருவர் விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்.. நான் வீட்டுக்கு சென்று எனது அப்பா மற்றும் சித்தியிடம் விவரத்தை சொல்லி அவனை எங்கள் வீட்டுக்கு அழைப்பதாக சொன்னேன்..
நான் அமெரிக்கா வந்து என் பெற்றோர்களிடம் கூறினேன்.அவர்கள் தயக்கம் காட்டினர்.. பிறகு என் சந்தோஷம் தான் முக்கியம் என்று கருதி சம்மதித்தனர்.. நான் மைக்கேலுக்கு போன் செய்தேன்.. ஆனால் பல தடவைகள் முயன்றும் அவன் கிடைக்கவில்லை.. எனக்கு மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்பட்டது.. அவன் ஒரு டைம்பாஸுக்காக என்னுடன் பழகினானோ என்று தோன்றியது.. என் மனம் இப்போது எல்லாம் டான்ஸில் அவ்வளவாக ஈடுபாடு கொள்ளவில்லை..எனது வருமானம் நின்றது.. கையில் கொண்டு வந்த பணம் எல்லாம் கரைந்து விட்டது..இனி என்ன செய்ய போகிறோம் என்பதே கேள்வி குறியானது…
ஒரு நாள் பக்கத்தில் இருந்த பார்க்கில் அமர்ந்து மைக்கேல் உடன் நான் கழித்த நாட்களை எண்ணி கண்ணீருடன் மனம் அசை போட்டது.. அப்போது தான் அது நிகழ்ந்தது.. என் கைபேசி ஒலித்தது..எடுத்து ” ஹலோ” என்றேன்.. மறுமுனையில்…. மைக்கேல்.. எனது ஆனந்தம் மேலும் கண்ணீரைப் பெருக்கியது.. அவன் முதலில் மன்னிப்பு கேட்டான்.. அவன் ஏதோ அவன் செய்யாத தவறுக்காக கடந்த மூன்று மாத காலமாக ஜெயிலில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் தற்போதுதான் விடுதலை ஆகி வெளியில் வந்ததாகவும் கூறி மிகவும் வருத்தப்பட்டார்.. பேசும்போதே பல இடங்களில் அவரது குரல் உடைந்திருந்தது. என்னாலும் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.. நான் அவரருகில் இருந்து அவரது துக்கத்தை பகிர்ந்து அவரைத் தேற்ற முடியவில்லையே என்று என் மேலேயே எனக்கு கோபம் வந்தது.. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சகஜ நிலைக்கு வந்தோம்.. எனது குடும்பம் அவரை ஏற்றுக் கொண்டதைச் சொன்னேன்.. ஆனால் அவர் தான் முதலில் நல்ல ஒரு வேலையை ஏற்பாடு செய்து எனக்கு தருவதாகவும் தாய்லாந்து திரும்ப வரும்படியும் வற்புறுத்தினார்..அவரது அழைப்பை தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டேன்.. எனது பெற்றோரிடம் மீண்டும் வேண்டி தாய்லாந்து புறப்பட்டேன்..விசா, டிக்கெட் எல்லாம் மைக் தான் ஏற்பாடு செய்து இருந்தார்.. மீண்டும் என் வாழ்வில் வசந்தம் வீசும் என்று நான் எதிர்பார்க்கவில்லை..
தாய்லாந்து விமான நிலையத்தில் மைக் எனக்காக காத்திருந்து என்னை அழைத்து சென்றார்.. இப்போது நேராக அவனது வீட்டுக்கே அழைத்து சென்றார்.. சிறிய ஆனால் அழகான வீடு… பொருட்கள் சிதறாமல் அதனதன் இடத்தில் நன்றாக வைக்கப்பட்டிருந்தது.. ஒரு பேச்சிலர் வீடு மாதிரியாகவே தெரியவில்லை.. நான் அவரிடத்தில் இருந்தால் இப்படி வைத்திருப்பேனா என்று கூடத் தெரியவில்லை.. அவர் வீட்டைப் பற்றி பெருமையாக புகழ்ந்தேன்..அவரது கண்களில் தெரிந்த சந்தோஷம்… சொல்லி முடியாது.. நாங்கள் வாழத் தொடங்கி விட்டோம்.. எனக்காக அவரும், அவருக்காக நானும் என்ற சூழலே எங்களின் நெருக்கத்தை மேலும் அதிகப் படுத்தியது.. நான் இரவு வேளைகளில் அவ்வப்போது கூப்பிடும் க்ளப்புகளில் நடனமாடி சம்பாதிக்க ஆரம்பித்தேன்..மைககும் எங்கோ வேலை செய்வதாகச் சொன்னார்.. திருமணம் செய்து கொள்ளவில்லையே தவிர நாங்கள் மிகவும் சந்தோஷமாக சேர்ந்து வாழ துவங்கி விட்டோம்.. நாட்கள் பறந்தன.. மீண்டும் ஒரு மூன்று மாதங்கள் போனது..
ஒரு நாள் மைக் என்னிடம் ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொன்னார்.. எனக்கு பாரீசில் ஒரு க்ளப்பில் நடனமாடும் கான்ட்ராக்ட் கிடைத்து இருப்பதாகவும் அவர் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்ததாகவும் சொன்னார்.. நான் சந்தோஷத்தில் அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்த மழை பொழிந்தேன்.. அவரும் மிகுதியான ஒரு சந்தோஷத்தை வெளிப்படுத்த, எனக்கு திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது.. நான் பாரீஸ் போய் விட்டால்… மைக்?.. மீண்டும் அவரை இழக்க நான் தயாரில்லை.. அவரிடத்தில் எனது சந்தேகத்தைக் கேட்டேன்.. அவர் சிரித்தார்..”பைத்தியம்… உன்னை விட்டு நான் எங்கே போகிறேன்? பல நாட்கள் கழித்து நீ எனக்கு கிடைத்த பொக்கிஷம்..உன்னை விட்டு விலகி விடுவேனா? முதலில் நீ போ.. என் நண்பன் உனக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுப்பான்.. இரண்டொரு நாட்களில் நான் இங்கே உள்ள சில செட்டில்மென்ட் வேலைகளை முடித்து கொண்டு அங்கே வந்து விடுவேன்.. அங்கே என் நண்பன் எனக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்து இருக்கிறார்..” என்று சொல்லி என்னை மீண்டும் அணைத்து எனக்கு மேலே சந்தேகம் தோன்றாவண்ணம் செய்தார்..
இரண்டு நாட்கள் சென்றன.. நான் பாரீஸ் செல்லத் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன்.. மைக் என்னுடன் சிறிய சிறிய ரொமான்ஸ் செய்தபடியே எனக்கு ஹெல்ப் செய்து கொண்டு இருந்தார்.. என் பேகில் சில துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன்.. அப்போது மைக். ” இந்த பேக் வேண்டாம்..மிகப் பழசாக இருக்கிறது..நீ பாரிஸில் போய் இறங்குவதற்குள் கிழிந்து விடும்” என்று சொல்லி அங்கே அலமாரியில் இருந்த வேறொரு பேக்கை எடுத்து அதில் அந்த துணிகளை பேக் செய்தார்..
மறுநாள் காலையில் என்னிடம் பாஸ்போர்ட், விசா கொடுத்து என்னை ஏர்போர்ட்டில் கொண்டு விட்டார்.. போகும் முன் தன் அன்பு முழுவதையும் சேர்த்து எனக்கு ஒரு ஆழ்ந்த முத்தமிட்டார்.. தனக்கு ஏதோ அவசர வேலை என்று சொல்லி புறப்பட்டு போய் விட்டார்.. நான் அவர் சென்ற காரின் திசை நோக்கி கை அசைத்து கொண்டே என் பேக்குகளை இழுத்து கொண்டு விமான நிலையத்தின் உள்ளே சென்றேன்..கௌன்டரில் என் பாஸ்போர்ட்டைக் கொடுத்தேன்.. அந்த பெண் அதனை வாங்கி பார்த்து விட்டு” மேம்…திஸ் எஸ் கௌன்டர் ஃபார் பாரீஸ் ஃபளைட்ஸ்.. யுவர் டிக்கெட் ஷோஸ் தேட் யு ஆர் கோயிங் எத்தியோப்பியா..கோ டு கௌன்டர் நம்பர் ஃபவ்” என்றாள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை.. மீண்டும் அவள் தான் சொன்னதையே திரும்பச் சொன்னாள்.. எனக்கு தலை சுற்றியது.. அந்த நேரத்தில் அங்கே நாயுடன் ஒரு கஸ்டம்ஸ் ஆபீஸர் ஒவ்வொரு பெட்டியையும் செக் செய்து கொண்டு வந்தார்.. அந்த நாய் என்னருகில் வந்தது.. எனக்கு பயம் பிடித்துக் கொண்டது.. இருந்தாலும் நம்மிடம் ஏதுமில்லையே என்ற தெளிவு..
அந்த நாய் என் பேக்குகளை முகர்ந்து பார்த்து குறைத்தது.. அந்த ஆபீஸர் என் பேக்குகளை எடுத்து கொண்டு அவள் பின்னால் வரச் சொன்னார்.. நானும் சென்றேன்..என்னை சோதனை செய்தார்.. பின்னர் என் உடமைகளை.. என் பேக்.. அதாவது மைக் என்னிடம் கொடுத்தது… அதில் அந்த ஆபீஸருக்கு சந்தேகம் எழுந்தது.. அந்த பேக்கை கிழித்து உள்ளே உள்ள எல்லாவற்றையும் எடுத்தாள்.. அந்த பேக்கின் அடியில் ஒரு மறைவிடத்தில் மூன்று ப்ளாஸ்டிக் கவரில் வெள்ளையாக ஒரு பொடி இருந்தது..அதனைச் சோதனை செய்த அந்த ஆபீஸர் அது கொக்கைன் எனும் போதைப் பொருள் என்று சொல்லி, அதனை யார் கொடுத்தார்கள் என்று பல கேள்விகளால் துளைத்தாள்.. நான் கண்ணீருடன் நடந்த அனைத்தையும் சொன்னேன்.. முடிவில் போதைப்பொருள் கடத்த வைத்திருந்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. நான் நம்பி மோசம் போனதற்கு என்னையே நான் நொந்து கொண்டேன்.. சிறையில் எல்லா வார்டர்களும் அன்பானவர்கள் இல்லை.. என்னிடம் பலர் அதிகாரத்துடன் முரட்டு தனமாகத்தான் நடந்து கொண்டார்கள்.. இதில் சில சக கைதிகளும் அப்படியே..பத்து நாட்கள் சென்றன..எங்களை நீதி மன்றம் அழைத்து சென்றார்கள்.. எனக்கு இருபத்தி இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது..வானமே என் தலையில் விழுந்தது போல் ஆயிற்று.. என் துக்கத்தை பகிர்ந்து கொள்ள யார் இருக்கிறார்கள்..நானே வரவழைத்து கொண்ட வாழ்க்கை..இதை வாழந்துதான் ஆக வேண்டும்.. இந்த வார்டர்களில் ஒரு பெண் மட்டும் என்னிடம் கனவாக நடந்து கொண்டாள்.. அவள் சற்று நடுத்தர வயது உடையவள்.. ஆங்கிலம் தெரிந்தவர்.. என் சிறுவயது அவளுக்குள் ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.. என்னிடம் நெருங்கி பழகினாள்.. என் நிலைமையை புரிந்து ஆறுதல் சொல்வாள்..
ஒரு நாள் எனக்கு உடல் நிலை சரியில்லை.. வயிற்றில் ஏதோ சங்கடங்கள்..வாந்தி எடுக்கும் உணர்வு..வாந்தி எடுத்தேன்.. டாக்டர் வந்து பார்த்தார்.. என் நாடி பிடித்து பார்த்து ஒரு வருத்தம் கலந்த சந்தோஷச் செய்தியைச் சொன்னார்.. ஆம்.. நான் தாயாகப் போகிறேன்.. அந்த மைக்கேல் தந்த பரிசு.. இந்த குழந்தை வெளிவர வேண்டாம் என்று தோன்றியது.. ஆனால் என் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வில்லை.. மாதங்கள் சென்றன.. ஒரு மழைக்காலத்தில் நான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன்.. இந்த ஏமாற்று உலகில்..அய்யோ! இன்னும் ஒரு பெண்ணா! என் மனம் பதைபதைத்தது..சில நாட்களில் எனது சித்தி வந்திருப்பதாகவும் குழந்தையை அவர் எடுத்துச் செல்வார் என்றும் அந்த வார்டன் தோழி தெரிவித்தார்..
நான் என் சித்தியை எந்த முகத்துடன் பார்ப்பேன்..குழந்தையை மட்டும் கொடுத்து விட்டு சித்தியைப் பார்க்காமல் திரும்பி விட்டேன்.. ஒவ்வொரு நாள் இரவும் எனக்கு நரகமாகியது.. பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தையை பிரிந்து என் மனம் ஆறாத் துயரில் தத்தளித்தது..
பத்தாண்டுகள் ஓடின.. இன்னும் பனிரெண்டு ஆண்டுகள்.. திடீரென்று ஒரு நாள் எங்களை அழைத்துக்கொண்டு நீதிபதி முன்னர் நிறுத்தினர்.. பல்வேறு நாடுகளின் உடன்படிக்கை படி ஒரு சில கைதிகளை மட்டும் அவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்பி மீதமுள்ள தண்டனை காலத்தை அங்குள்ள சிறையில் கழிக்கலாம் என்று சொல்லப் பட்டது.. ஐந்து கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை என்றும் சொன்னார்கள்.. ஒவ்வொரு பெயராக சொன்னபோது என் மனம் என்னிடமில்லை.. என் பெயரை எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் வேதனையில் துடித்தது.. ஐந்தாவதாக என் பெயர் சொன்னபோது என் மனம் என்னிடம் இல்லை.! பல்லாயிரம் மைல்கள் தாண்டி லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தது.. ஆம்! நான் தற்போது அந்த உடன்படிக்கையில் தான் அமெரிக்கா திரும்பிக் கொண்டு இருக்கிறேன்..
விமானம் தாழ இறங்கி ரன்வேயைத் தொட்டபோது தான் மீண்டும் நிகழ் காலத்திற்கு வந்தேன்.. விமானம் விட்டு இறங்கி அங்கே லௌஞ்சில் என்னுடன் வந்த மேலும் இரு கைதிகளையும் அமர வைத்தனர் எங்களுடன் வந்த போலீஸார்.. என் கைகள் விலங்கிடப் பட்டன..சில ஆண்டுகளுக்குமுன் இங்கு இருந்த என் நிலைமையை நினைத்தேன்..எத்தகைய மாற்றங்கள் என் வாழ்வில்.. சுமைகளை நானே ஏற்றி என் சிறகுகளை இழந்தேன்..இரு நாட்டின் போலீஸ் ஆபீஸர்களும் பரஸ்பர அறிமுகத்திற்கு பின்னர் அவர்களின் ஃபார்மாலிட்டீஸ் துவங்கியது..
சற்று தூரத்தில்… என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.. எனது சித்தி.. அவளின் கையைப் பிடித்து கொண்டு ஏழெட்டு வயது சிறுமி.. பார்க்க துறுதுறுவென எனது சிறு வயது ஃபோட்டோ போலவே இருந்தாள்.. ஆம்.. என் மகள்தான் போலிருக்கிறது.. சித்தி அருகே வந்து அந்த அமெரிக்க போலீசாரிடம் ஏதோ பேசினாள்.. என்னுடைய தாய்லாந்து வார்டன் தோழி அனைத்து விவரங்களையும் என் சித்திக்கு கடிதம் எழுதி அவர்களை ஏர்போர்ட்டிற்கு வரவழைத்து இருந்தாள் என்று ஊகித்தேன்.. என் மனம் அவளின் தன்னலம் கருதா செய்கை கண்டு பெருமை கொண்டது.. இந்த ஏமாற்று உலகில் இப்படியும் மனிதர்கள்!!!
ஒரு அதிகாரி என்னருகில் வந்து என் கைவிலங்கை அப்புறப் படுத்தினாள்..
சித்தி என் அருகில் வந்தாள்.படாரென்று என் கன்னத்தில் அறைந்தாள்.. பின்னர் என்னைக் கட்டிப் பிடித்து அழுதாள்.. என்னைப் பெறாத தாயல்லவா.. இந்த பத்து ஆண்டுகளில் என்னை நினைத்தே என் தந்தை மறைந்து விட்டார் என்று சொன்னாள்.. எல்லாவற்றுக்கும் காரணம் நான் தான் என்று எண்ணியபோது எனது தண்டனை சரியானதுதான் என்று தோன்றியது.. அந்த குட்டிப் பெண்ணை நோக்கி இரு கரங்களையும் நீட்டினேன்.. அவள் அருகில் வந்தாள்.. நான் அவளை என் நெஞ்சோடு அணைத்து கண்ணீர் விட்டேன்.. அவள் என் காதருகில் மெதுவாக
” நீ தான் என் அம்மாவா? ” என்று கேட்டாள்.. நான் உடைந்து போனேன்.
.” ஆமாம் அம்மா.. அந்த துர்பாக்கியசாலி.. நான் தான்” என்றேன்.” உன் பெயர் என்னம்மா?” ”
“நான் ஜேனட்.. நான் இரண்டாம் கிளாஸ் படிக்கிறேன்”
” நன்றாக படியம்மா..படித்து நல்ல முறையில் வாழ வேண்டும்”
” நீ…இப்ப எங்க கூட வருவியா?”
இந்த கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.. இருந்தாலும் கண்ணீரும் சிரிப்புமாக கலந்த ஒரு நிலையில் ” சீக்கிரம் வருவேனம்ம்மா..நீ பாட்டியிடம் சமர்த்தாக நடந்து கொள்ள வேண்டும்” என்று சொன்னேன்.
நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது..ஆபீசர்கள் என்னை அழைத்து கொண்டு சென்று காரில் ஏற்றினார்கள்.. எனக்கு மீண்டும் கைவிலங்கு.. எங்கள் கார் புறப்பட்டது..வெளியே என் மகளுடன் என் சித்தி கையசைத்தார்கள்..கனத்த இதயத்துடன் மீதமுள்ள நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்..
விரைவில் எனக்கு விடிவுகாலம் பிறக்கும்