நமது பாரதம் விடுதலை பெற்று நாம் வைரவிழாவை நோக்கி நடை போட்டு கொண்டு இருக்கிறோம்..பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தோமா? இருந்தாலும் இன்னும் நாம் முனைப்புடன் செயல்பட்டு காக்க வேண்டும்..இது நமது தலையாய கடமை.. இந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்க எத்தனை நல் உள்ளங்கள் தமது மூச்சினை தியாகம் செய்து உள்ளனர்.. தெரிந்து கொண்டால் வியப்பாகவும், அதே நேரத்தில் அவர்களின் நெஞ்சுரத்தினையும் நாம் ஆழ்மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.. இந்த சுதந்திரப் போராட்ட வேட்கை மண்ணில் அங்கங்கே கூறப்பட்ட விதைகள் முளைத்து செழித்து மரமாகி தங்களையே தியாகம் செய்து உள்ளனர்..
இன்றைய திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்-பழனி செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சி எனும் ஊரில் கி.பி.1725இல் நாயகர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரய்யா நாயகர் காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் கோபால் நாயக்கர்.இவரின் இயற் பெயர் திருமலை குப்பள சின்னைய்யா நாயகர் அல்லது திருமலை கோபால் சின்னையா நாயகர்..விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையம் பட்டுகளில் என்றான் விருப்பாச்சியின் 19வது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வந்தார்..
விருப்பாச்சியின் முந்தைய பெயர் நங்காஞ்சி..இப்பகுதிக்கு வந்த விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதி மக்களின் வீரத்தைப் பாராட்டி தனது மனைவியின் பெயரான விருப்பாச்சியை அவ்வூரின் பெயராக வைத்தார்..
கோபால் நாயக்கருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும் முத்துவேல் நாயகர், பொன்னப்ப நாயகர் என்ற இரு மகன்கள் இருந்தனர்..

விருப்பாச்சி பாளையக்காரராக விளங்கிய கோபால் நாயக்கர் கண்காணிப்பில், புரட்சி படையினர் ஆங்கிலேயர் முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர்..மருது பாண்டியருடனும் கன்னட மராட்டிய பகுதி மன்னரான துந்தாசிவாக்குடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்பு உருவாக்கினார்..இது தீபகற்ப கூட்டமைப்பு என்று அழைக்கப்பட்டது. இந்த கூட்டுபடையில் மலபார் கேரளவர்மனும், கிருஷ்ணப்ப நாயகனும் இருந்தனர்.. இவர்கள் அனைவரும் கூட்டுப்படை கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்.. விருப்பாச்சியில் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடி வெள்ளையர்களை விரட்ட சபதம் எடுத்தனர்..இந்த அறைகூவல் கிராமந்தோறும் பனையோலை மூலம் எடுத்து செல்லப்பட்டது.. தீபகற்ப கூட்டமைப்பு தலைமையில் மக்கள் திரளாக பங்கேற்ற முதல் சுதந்திர போர் தொடங்கியது..
கி.பி 1799ல் மார்ச் மாதத்தில் கோபால் நாயக்கர் வழிகாட்டுதலின் படி மணப்பாறை லட்சுமி நாயகர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு நத்தம், மேலூர், மணப்பாறை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினர்..
கி.பி.1799 அக்டோபரில் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிடப்பட்ட பின் விருப்பாச்சி அரண்மனைக்கு மேஜர் ஐ.ஏ பானர்மேன் எச்சரிக்கை செப்பு பட்டயம் ஒன்றை அனுப்பினார்..

அதில் கும்பனியருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டால் கட்டபொம்மனைப் போல தூக்கிலிட்டு கொல்லப்படுவர் என்ற செய்தி இருந்தது.. தற்போதும் இடையக் கோட்டை ஜமீன் அரண்மனையில் இச்செப்பு பட்டயம் பாதுகாப்பாக உள்ளது..
ராணி வேலுநாச்சியாருக்கும் ஊமைத்துரைக்கும் இவர் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள் நாயகர் மீது ஆத்திரமடைந்தனர்..கி.பி1800 சூனில் கோவையில் உள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முகமது ஹாசன், பரமத்தி அப்பாவு சேசையா ஆகியோர் தளபதிகளாக இருந்து தாக்க திட்டம் தீட்டினார்..இதை அறிந்த வெள்ளையர்கள் நாலாபுறமும் பீரங்கிப் படையை நிறுத்தி புரட்சி படைகளைப் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர்..முகமது ஹாசன் கூட்டணி இரகசியம் காக்க தன் கழுத்தை தானே அறுத்து கொண்டார்.
கோவைத் தாக்குதலுக்கு பிறகு கி.பி அக்டோபரில் ஆங்கிலேயப் படை லெஃப்ட்டின்ட் கர்னல் இன்னஸ் பெரும்படையுடன் விருப்பாச்சியை முற்றுகை இட்டான்.. விருப்பாச்சி, இடையக்கோட்டை, வேலுர் பாளையத்தை சேர்ந்த மக்களும் மற்ற பாளையத்தின் போர் வீரர்களும் சத்திரப்பட்டி அரண்மனை முன்பு போர் புரிந்தனர்.

போரில் கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயகர் கொல்லப்பட்டார்.. கோபால் நாயக்கர் தப்பி விட்டார்.. கர்நாடக மராத்திய தளபதி தூந்தாசிவாக்கை கைது செய்து பீரங்கி வாயில் கட்டி வைத்தனர்.. தொடர்ந்து கோபால் நாயக்கரின் மனைவி பாப்பம்மாள், இளைய மகன் சொன்னப்ப நாயகர் உட்பட 22 பேரை திண்டுக்கல்லில் கி.பி 1816 வரை சிறை வைத்தனர்.. கோபால் நாயக்கர் தலைக்கு அந்த காலத்திலேயே 20000 ரூபாய் என அறிவித்தனர்.. பணத்திற்காக துரோகிகள் காட்டிக் கொடுத்தனர். கி.பி 1801 செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல் ஊருக்கு வெளியே குளக்கரையில் புளிய மரத்தில்தூக்கிலிட்டனர்.. அந்த குளம் கோபால் நாயக்கர் சமுத்திரம் என தற்போது நகரின் மத்தியில் உள்ளது..
கோபால் நாயக்கரின் அரண்மனையும் அவரது மனைவிக்காக கட்டிய அந்தப்புரத்தையும் இடித்து தரை மட்டமாக்கினர்.. அரண்மனையின் சுவர்களின் அடித்தளம் 45அடி நீளமுள்ளது மட்டும் இன்றும் உள்ளது.. அரண்மனை முன்பு யானை கட்டும் நடு கல், குதிரைகள் தண்ணீர் குடிக்கும் கருங்கல் தொட்டி இன்றும் காண முடிகிறது..

திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த மணிமண்டபம் தமிழக அரசால் 69 லட்சம் செலவில் கட்டப்பட்டது..