மூசிக வம்சம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா வாசகர்களே?
ஆம்! பண்டைய பாரதத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருந்த மூசிக நாடு அல்லது புலி நாட்டினை ஆண்டவர்கள் இந்த மூசிக வம்சத்தினர்.. சங்க காலத்தில் தென்னிந்தியாவின் தற்கால கேரளத்தில் இருந்த தமிழ் பேசிய மக்களின் நாடுகளில் ஒன்றாகும்.. இந்த நாட்டை. எழிமலை நாடு, கொளத்து நாடு, சிரக்கல் நாடு என்றும் அழைப்பர்.. இந்த நாடு தி.மு 6ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி 11ஆம் நூற்றாண்டில் குலைந்துள்ளது..


இதன் தலைநகரம் எழிமலை.. இது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியாகும். இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 286 மீட்டர் உயரம் கொண்டது..கண்ணூருக்கு வடக்கே 38 தி.மீ தொலைவில் தனித்து உள்ளது.. மலையும் மலையைச் சார்ந்த கடல் பகுதியும் மிக அற்புதமான தோற்றம் கொண்டது.

பொது வருடம் என்று சொல்லப் படுகிற common era தொடக்கத்தில் செழிப்பான துறைமுகமாகவும் வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது..எழிமலை 11ஆம் நூற்றாண்டில் சோழர்-சேரர் போர்களில் முக்கிய போர்க்களங்களில் ஒன்றாக இருந்தது.! கௌதம புத்தர் எழிமலைக்கு வந்ததாக சிலர் நம்புகின்றனர்.!
இராமாயணத்தில் சில பகுதிகள் மற்றும் உள்ளூர் இந்து புராண கதைகளில் எழிமலையை குறிப்பாக அனுமனுடன் தொடர்பு படுத்தி கூறப்படுகின்றன..
எழிமலை, பழையங்காடி மற்றும் இந்த பிராந்தியத்தில் உள்ள பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் குறித்து தமிழின் சங்க கால இலக்கியங்களில் (கி.மு 500 முதல் கி.பி 300வரை) ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன..பழையங்காடி என்பது அதன் பண்டைய தமிழ் பெயரான பாழியின் சிதைந்த வடிவமாகும்..மூசிக அல்லது கோலாதிரி அரச மரபின் மன்னனான உதயன் வேண்மான் நன்னனின் பண்டைய தலைநகரமாக பாழி குறிப்பிடப்பட்டுள்ளது..
எழிமலையின் மிகச் சிறந்த அரசன் எழிமலை நன்னன் என்பவனாவான்.. இந்த பகுதி தற்போது ராமந்தளி ஊராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.. நன்னன் மரபானது சேரர் சோழர் பாண்டியர் போன்றோரின் உறவினர் அல்லது சகோதரி வம்சமாக இருந்த போதிலும் அவர்களிடையே தொடர்ந்து போர்கள் நடந்து வந்தன.. இதற்கு நன்னன் காலமும் விதிவிலக்கு அல்ல.. தனது நாட்டின் மீது படையெடுத்து வந்த சேர மன்னர்களுக்கு எதிராக நன்னன் பாழியில் எதிர்த்து போராடியதாக நூல்கள் கூறுகின்றன.. இறுதியில் சேர மன்னர் நார்முடிச் சேரரால் நன்னன் கொல்லப்பட்டார்..
புகழ் பெற்ற அறிஞர் “இல்லம் குளம் குஞ்சன் பிள்ளை” கூற்றுப்படி பழைய எழிமலை நாட்டின் கோட்டயம் மற்றும் கண்ணூர் பகுதிகளில் இருந்தே எண்ணற்ற உரோமானிய தங்க நாணயங்கள் அகழப்பட்டன.. இதில் ஒரே சந்தர்ப்பத்தில் கிடைத்த நாணயங்கள் ஆறு சுமை தூக்கும் தொழிலாளர்களால் எடுத்து செல்லக்கூடிய அளவு கிடைத்தன..கி.பி 491 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது..
கி.பி.11 ஆம் நூற்றாண்டில் ஆதூலன் என்பவரால் எழுதப்பட்ட மூசிக வம்சம் எனும் நூல் மூலம் குறிப்பாக மூசிக அரச மரபினரைப் பற்றியும் பொதுவாக வடக்கு கேரள நாட்டைப் பற்றியும் தெளிவாக அறிய முடிகிறது..மூசிக வரலாற்றில் முதலில் குறிப்பிட்ட மன்னர் இராமகதா மூசிகர் ஆவார்.. இந்த வம்சத்தின் பிற்கால மன்னர்கள் இப்போது கோலாதிரி வம்சம் என்று அழைக்கப்படுகிறார்கள்.. இவரது வாரிசுகள் தலைநகரை எழிமலை, வல்லப்பட்டினம் நகருக்கும் இறுதியில் சிக்கல், அருகில் உள்ள பிற இடங்களுக்கு அடுத்த நூற்றாண்டுகளில் மாற்றினர்..
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஆசியாவின் மிகப்பெரிய நிறுவனமான எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியை 2009ஆம் ஆண்டு சனவரி 8ந்தேதி திறந்து வைத்தார்..

இந்த நிறுவனம் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது..