பாண்டவர்கள் பனிரெண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்து பதிமூன்றாம் ஆண்டு மத்ஸ்ய தேசத்தில் மாறுவேஷத்தில் கழித்தனர்..
யுதிஷ்டிரன் கங்க பட்டராக மன்னனின் ஆலோசகராகவும், பீமன் வல்லபன் என்ற பெயரில் சமையல் கலைஞராகவும், அர்ஜூனன் பிருகன்னளை என்ற பெயரில் அரவாணியாகி அரசகுமாரிக்கு இசை நாட்டியம் கற்றுத் தருபவளாகவும் நகுலன் தாமகிரந்தி என்ற பெயரில் குதிரைகளை பாதுகாப்பாகவும் சகாதேவன் தந்திரி பாலன் என்ற பெயரில் மாடுகளை பராமரிப்பவனாகவும் சைலேந்நிரி என்ற பெயரில் திரௌபதியும் மறைந்து வாழ்ந்தனர்
அஞ்ஞாத வாச காலமும் முடிந்தது..விராட மன்னன் பாண்டவர்களை இனம் கண்டு கொண்டு மகிழ்ச்சி அடைந்தான். இந்த காலகட்டத்தில் தான் கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை மகன் அபிமன்யுவுடன் அங்கே வந்தாள்..விராட மன்னனின் மகள் உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும் திருமணம் நடைபெற்றது..
அதன் பின்னர் ஆட்சி உரிமை கேட்டு கிருஷ்ணர் அஸ்தினாபுரம் சென்று திருதிராஷ்டிரனிடம் தெளிவுபடுத்த துரியோதனன் மறுத்து விட்டான்.. வேறு வழியின்றி போருக்கு அறை கூவல் விடுக்கப்பட்டது.. போர் குருக்ஷேத்திரம் எனும் இடத்தில் நடைபெற்றது. அந்த ஊர் இன்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ளது.. இந்த போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது.. மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது..
இப்போரில் பாண்டவர்கள் அணியில் பாஞ்சால அரசன் துருபதன், அவர் மகன் த்ருஷ்ட்த்யும்னன், சிகண்டி கடோத்கஜன் அரவான் மத்சிய நாட்டின் மன்னன் விராடன் அவனது மகன்கள் உத்தரன் சுவேதன் மற்றும் சோமததத்தன், வ்ருஷ்ணி குலத்தின் சாத்யகி காசி நாட்டின் மன்னன், கேகேயர்கள், சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் மகன் திருஷ்டகேது, மகத நாட்டின் மன்னன் ஜராசந்தனின் மகன் ஜயத்சேனன், நீலனின் மகிழ்மதி நாட்டின் படைகள், மற்றும் பாண்டியர்கள்.. இந்த படையில் 15,30,900 படை வீரர்கள் இருந்தனர்.

மகாபாரதப் போரில் சோழர், சேரர், பாண்டியர், மற்றும் திராவிடர் எனப்படும் மன்னர்கள் பங்கு கொண்டதாக சொல்லப்படுகிறது (மகாபாரதம் 8-12). இவர்கள் பாண்டவர்கள் அணியில் இருந்து போரிட்டனர்..இவர்களுள் பாண்டிய மன்னன் சாரங்கத்வஜன் (மகாபாரதம் 7-23) பற்றி குறிப்புகள் உள்ளன.. இவனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் முன்பகை இருந்ததாகவும் ஆனால் அவனது மதியூகி மந்திரிகளான நண்பர்களின் ஆலோசனைப்படி அவன் ஸ்ரீ கிருஷ்ணருடன் நட்பு கொண்டு பாண்டவர்களுக்காக போரிட்டான் என்று மகாபாரதம் தெரிவிக்கிறது..
பாண்டவர்கள் அணியில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக ஸ்ரீ கிருஷ்ணர் பங்கு வகித்தார்..

மகாபாரதத்தின் மூலம் மூன்று பாண்டிய மன்னர்கள் ஒரே காலகட்டத்தில் இருந்து அவர்கள் எதிர் எதிர் அணியில் போர் புரிந்து உள்ளனர் என்றும் தெரிகிறது..(மகாபாரதம் 9-2). இது தவிர சேர் நாட்டின் மன்னன் ” உதியஞ்சேரல்” என்பவன் கௌரவ படைகளூக்கு உணவு அளித்தான் என்றும் அதன் காரணமாக அவரை ” பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்” என்று அழைக்கப்பட்டாலும் பழம் பாடல் ஒன்று கூறுகிறது..
இப்போரில் கௌரவர்கள் பக்கம் படை பலம் அதிகமாக இருந்தது.. இவர்களில் நாமறிந்த பீஷ்மர், துரோணர், கர்ணன், கிருபர், துரோணரின் மகனான அஸ்வத்தாமன், துரியோதனன் மற்றும் அவனது 99 சகோதரர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.. இவர்கள் தவிர அறிமுகம் இல்லாத சிலரும் இப் போரில் பங்கு கொண்டு போரிட்டனர்.. அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் தருகிறேன்:
சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன்.. இவன் துரியோதனனின் தங்கை துத்சலையின் கணவன்..குருக்ஷேத்திரப்போரில் பதிமூன்றாம் நாளில் ஜயத்ரதன், அபிமன்யுவை மற்றவர்கள் கொல்வதற்கு துணை புரிகிறான்.. இதனால் ஆத்திரமடைந்த அர்ஜூனன் மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக அவன் தலையை கொள்வதாக சபதம் செய்கிறான்.. ஜயத்ரதனின் தந்தை அவனுக்கு ஒரு வரம் அளித்துள்ளார்.. அதன்படி அவன் தலையை யார் மண்ணில் சாய்க்கிறார்களோ அக்கணமே சாய்த்தவர எரிந்து சாம்பல் ஆகிவிடுவார் என்று.. போரின் பதினான்காம் நாளன்று ஜயத்ரதன் போரில் பங்கு கொள்ளாமல் தலைமறைவாக இருக்கிறான்.. சூரிய அஸ்தமனம் ஆகும் முன் சில நாழிகைகள் இருந்த போது ஸ்ரீ கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தைச் செலுத்தி சூரியனை மறைக்கிறார்.. எங்கும் சூரிய அஸ்தமனம் ஆனது போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது.. அந்த நேரத்தில் ஜயத்ரதன் மறைவிடத்தில் இருந்து வெளிப்பட ஸ்ரீ கிருஷ்ணர் சக்ராயுதத்தை விலக்குகிறார்.. மீண்டும் எங்கும் சூரிய ஒளி பரவுகிறது..

அந்த நேரத்தைப் பயன்படுத்தி அர்ஜூனன் ஜயத்ரதனின் தலையைக் கொய்து தவம் செய்து கொண்டிருந்த அவனது தந்தையின் மடியில் விழச் செய்கிறான்.. சற்றும் எதிர்பாராத அவர் அத்தையை கீழே தள்ள, அவரும் மாண்டு போகிறார்..
இந்நேரத்தில் சூரிய அஸ்தமனம் இரண்டு முறை நிகழ சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது..இது குறித்து விஞ்ஞான ரீதியாக ஒரு பதில் உள்ளது..அதனை அடுத்து பார்ப்போம்..
நாளை சந்திப்போம்