வாசலில் காலிங் பெல் ஒலித்தது..
“உஸ்… அப்பாடா ” என்றபடியே செண்பகம் சென்று வாசல் கதவை திறந்தாள்..
வாசலில் அவளது கணவர் இராமு என்கிற ராமசாமி நின்று கொண்டு பக்கத்து வீட்டு நாயுடுவோடு ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்..
செண்பகம் வாசலைத் திறந்துவிட்டு உள்ளே சென்றாள்..
பேச்சு முடிஞ்சு ராமு உள்ளே நுழைந்தார்..
” என்னவாம் நாயுடுவிற்கு?…. வழக்கமான புராணம் தானே..பிள்ளையைப் பத்தி….மாட்டுப் பெண்ணைப் பத்தி…கம்ப்ளேயன்ட்?”
“ஆமாமா.. வேறு என்ன.. பாவம்.. அவருக்கு சொல்லிக் கொள்ள யாரு இருக்கா.. ஏதோ ..அப்பப்ப அவரோட கஷ்டத்தை சொல்லிக் கிறார்…” ராமு மெள்ள சோஃபாவில் சாய்ந்தார்
காபியை ஆற்றி செண்பகம் நீட்ட… ராமு பக்கத்தில் இருந்த பையைத் திறந்து ஒரு கவரை அவளிடம் கொடுத்தார்..
வாங்கிப் பிரித்துக் கொண்டே” என்ன.. சம்பளம் தானே” என்றாள்..
” வேறு என்ன எனக்கு வருமானம்?”
” அதானே…பொழைக்கத் தெரிஞ்சிட்டாலும்..”.. கவரில் உள்ள பணத்தை எண்ணியவள்…”என்னங்க…என்ன இரண்டாயிரம் ரூபாய் குறையுது?”
” அதில்ல செண்பகம்.. ஆபீஸ் விட்டு வர வழியில நம்ம கிட்டுவப் பார்த்தேன்.. அவனுக்கு நாலு மாசமா வேலை இல்லையாம்.. ரெண்டு பொண் குழந்தைகள் வேற…சாப்பாட்டுக்கே கஷ்டப் படறான்…அதான்…” என்று இழுத்தார்..
“. ஒஹோ..கர்ணப் பிரபு இந்தா வச்சுக்கன்னு வாரி கொடுத்திட்டீங்களாக்கும்..! ஒவ்வொரு மாசமும் பணத்தை தான தர்மம் பண்ணிட்டு… சம்பளத்தை முழுசா பாத்தே பல மாசமாகுது..ஹூம்!!! உங்களுக்கு எப்பத்தான் நல்ல புத்தி வரப்போகுதோ… ஏதாவது எகஸ்ட்ராவா சம்பாதிச்சா கூட பரவாயில்லை..நீதி நேர்மை நாணயம்னு பேசிக்கிட்டு அதுக்கும் வக்கில்ல..”
” செண்பகம்..நீதி நேர்மை எல்லாம் என்னைக்கும் நம்மள காப்பாத்தும்.. உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.. இப்படி வந்து ஒக்காரு…”
” ஆமா..கதை கேட்டு நான் பாழாப்போனேன்..ஒங்களுக்கு வேற வேலையில்ல…எனக்குமா?”
” அட! வேல கெடக்கட்டும்..செஞ்சிக்கலாம்..வா..”
அவள் அரை மனதாக உட்கார்ந்தாள்..
இப்படித்தான் பாரு… முன்னொரு காலத்தில பாவனாங்கற ஊர்ல கௌதமன்ற ப்ராம்மணன் இருந்தான்.. அவன் அவனோட அம்மாவோட தூண்டுதலினாலே கெட்ட வழியில் திரிஞ்சான்.. இப்படி பட்டவனுக்கு. மணிகுண்டலன்னு ஒரு பணக்கார ஃப்ரெண்ட் கிடைச்சான். அவன் ரொம்ப நல்லவன். அவன் தர்மம் நியாயம்னு இருப்பவன்..
கௌதமனுக்கு மணிகுண்டலனோட செல்வத்தை சுருட்டணும்னு ஆசை.. எப்படி அத நெறவேத்தறதுன்னு யோசிச்சான்..
மணிகுண்டலன்கிட்ட போயி ” நாம ரெண்டு பேரும் வியாபாரம் செய்யலாமான்னு ” யோசன சொன்னான்.. அதுக்கு அவன்” என் கிட்ட தான் நெறய சொத்து இருக்கே… எதுக்கு வியாபாரம் செய்யணும்னு” கேட்டான்..
நம்ம ஆளு விடுவானா? ” அதில்ல மணி..அது ஒங்க அப்பாவோட சொத்து..நாம ஒழச்சு சம்பாதிக்க வேண்டாமா” அப்படீன்னான்..
முதல்ல. யோசிச்ச மணியை கொஞ்சம் கொஞ்சமாக கரைச்சான் கௌதமன்..கடைசீல மணி ஒத்துகிட்டான்..
ரெண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் செஞ்சாங்க..நல்ல லாபம் கிடைச்சது..மணி பாதி லாபத்தை பிரிச்சு கொடுத்தான்.. முதல் போடாமலேயே கௌதமனுக்கு லாபத்தில் பங்கு.. ஆனால் அவன் திருப்தி அடையல..மணியோட மொத்த பணத்தையும் தான் அடையணும்னு திட்டம் போட்டான்..
” மணி..நீ நீதி நேர்மை நாணயம்னு பேசிக்கிட்டு இருக்கே… அதனால் எல்லாம் காசு சம்பாதிக்க முடியாது” என்றான்.
அதற்கு மணி” அப்படியில்லப்பா.. தர்மம் தான் என்றைக்கும் நமக்கு. நல்லது செய்யும்” என்றான்.
“அப்படியா..பார்க்கலாமா..என்ன பெட்..நீ சொல்றதையும் நான் சொல்றதையும் நம்ம ஜனங்கள் கிட்ட கேட்போம்.. அவங்க நீ சொல்றத ஒத்துகிட்டா என் பணம் முழுவதையும் உனக்கு அப்படியே கொடுத்திடறேன்..அப்படி இல்லன்னா.. உன் பணமும் எனக்கு..சரியா?”
கௌதமன் ஒப்புக்கொள்ள..உன்ன மாதிரி மக்கள் கிட்ட கேட்டாங்க.. பதில் எப்படி இருக்கும்!! கௌதமன் சொன்னதுதான் கரெக்ட்னு அவங்களும் சொல்ல மொத்த பணத்தையும் கௌதமன் சுருட்டிகிட்டான்..அத்தோடு விட்டானா… மணிக்கு மீண்டும் ஆசை காட்டி வியாபாரம் செஞ்சாங்க.. இம்முறையும் மொத்த பணத்தையும் கௌதமன் எடுத்து கிட்டான்.. அப்படியும் அவன் வெறி அடங்கல…மணிகுண்டலோனோட இரண்டு கைகளையும் வெட்டி விட்டான்.. மீண்டும் வியாபாரம் தொடர்ந்தது..மணிகுண்டலன் தமது நேர்மை தர்மத்தின் மீது இன்னும் அசையாத நம்பிக்கை கொண்டு இருந்தான்.
அடுத்தும் கௌதமன் வெற்றி பெற்று மணிகுண்டலனின் இரு கண்களையும் பறித்தான்..அவனை ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த ஒரு சிவன் கோயிலில் விட்டுவிட்டு சென்றான்..
மணிகுண்டலன் அப்போதும் தான் கொண்ட கொள்கையிலேயே மனம் தளராமல் இருந்தான்.. அன்றிரவு அந்த கோயிலில் பூஜை செய்ய விபீஷணன் தன் பரிவாரங்களுடன் வந்தான்.. அங்கே கண்களையும் கைகளையும் இழந்த மணிகுண்டலனைக் கண்டு மனம் வருந்தி அருகில் இருந்த ஒரு மூலிகை செடியில் இருந்து மருத்துவம் பார்த்து மணிகுண்டலனை பழைய நிலைக்கு கொண்டு வந்தார் விபீஷணன்..இராமலக்ஷ்மணர்களுக்காக இலங்கைக்கு அனுமன் சஞ்சீவினி மலையை எடுத்து சென்ற போது சில மூலிகைகள் அங்கே விழுந்து முளைத்து செடிகளாக வளர்ந்து இருந்தன..
மணிகுண்டலன் அதன் பின்னர் பக்கத்தில் இருந்த ஒரு சிறு நாட்டிற்கு சென்றான்.. அந்த நாட்டின் இளவரசி நோய்வாய்ப்பட்டு இருந்ததைக் கேள்விப்பட்டு அந்த மூலிகைகளால் மருத்துவம் பார்த்து குணப்படுத்தினான்.. அதனால் சந்தோஷம் அடைந்த அந்நாட்டு மன்னன் இளவரசியை மணிகுண்டலனுக்கே திருமணம் செய்து அந்த நாட்டையும் கொடுத்தான்..
” என்ன… செண்பகம்..இப்ப புரியுதா.. தர்மம் தலை காக்கும்”
” ஆமா… நீங்களும் உங்க கதையும்…இப்படியே…. புராணம் பேசிக்கிட்டு இருங்க” செண்பகம் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை… அப்போது டெலிபோன் மணி அடித்தது..
” செண்பகம்..யார்னு பாரு..”
செண்பகம் ரிசீவரை எடுத்து கேட்டு விட்டு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க..” எல்லாம் உங்க தேங்காமூடி வக்கீல் தான்..நீங்களே பேசிக்குங்க..”
ராமுவுக்கு நந்தம்பாக்கத்தில் ஒரு பூர்வீக வீடு மற்றும் தோட்டம் இருந்தது..அது பல கோடி ரூபாய் பெறும்.. அதன் மேல் ஒரு பங்காளி வழக்கு..அது பற்றி பேசியது தான்.. செண்பகம் சொன்ன தேங்காமூடி வக்கீல்..
ரிசீவரை எடுத்து கேட்ட ராமு முகத்தில் அப்படியொரு பிரகாசம்..” அடியே செண்பகம்.! நான் தான் சொன்னேனே தர்மம் தலை காக்கும்னு…” ஆனந்தத்தில் அவருக்கு பேச்சு வரவில்லை..
” என்னங்க? என்ன விஷயம்..?”
” நாம் கேஸ்ல ஜெயிச்சிட்டோம்.. தீர்ப்பு நம்ம பக்கம் தான்..”
செண்பகத்தின் முகத்திலும் சந்தோஷம்..
( பத்ம புராணத்தில் படித்த கதையின் தாக்கத்தில் எழுதப்பட்டது)