அமலாகுது தானியங்கி பட்டா மாறுதல் முறை!
சொத்து வாங்குவோர் பெயருக்கு, தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில், வீடு, மனை போன்ற சொத்து வாங்குவோர், பத்திரப்பதிவு முடிந்தவுடன், பட்டா மாறுதலுக்கு அலைய வேண்டி உள்ளது.
இதற்கு தீர்வாக, உட்பிரிவு இன்றி முழுமையாக விற்கப்படும் சொத்துக்களுக்கு, தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்க முடிவு செய்யப்பட்டது.
‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு இணைய தளத்தில், சொத்து தகவல்களை உள்ளீடு செய்யும் போது, பட்டா மாறுதல் தொடர்பாக சில கேள்விகள் இருக்கும்.
இதற்கு, சொத்து வாங்குவோர் உரிய பதிலை அளிக்க வேண்டும்.
பத்திரப்பதிவின் போது, சார் – பதிவாளரும் இந்த பதில்களை சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், சொத்து வாங்குவோர் பெயருக்கு, பட்டா மாறுதல் தானியங்கி முறையில் நடந்து விடும்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத் தாலுகாவுக்கு உட்பட்ட, சார் – பதிவாளர் அலுவலகங்களில், சோதனை முறையில் இத்திட்டம், இன்று அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் பின், மற்ற தாலுகாக்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என, தெரிகிறது.
சரி,. இனி பட்டா என்பது என்ன என்பதை பற்றிப் பார்ப்போம்
நமது அரசாங்கம் தமிழ் நாட்டில் உள்ள நில உரிமையை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது.. ஒன்று, அரசு (அல்லது) புறம்போக்கு நிலம்; இரண்டு, நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமை உள்ள பட்டா நிலம்..இவ்விரண்டில் அரசு நிலத்திற்கு மக்கள் எவரும் உரிமை கொண்டாட முடியாது..அந்நிலத்தினை எவரேனும் ஆக்ரமிப்பு செய்வாரே ஆகில் அது சட்டப்படி குற்றமாகும்.. அந்த ஆக்ரமிப்பு இடிக்கப்படும்.. இந்த புறம்போக்கு நிலங்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன..
ஏரிப்புறம்போக்கு:
இது ஏரியும், அதனைச் சார்ந்த நிலம்
குளம் புறம்போக்கு:
இந்த நிலத்தில் முன்பு குளம் இருந்து தற்போது தூர்ந்து போயிருந்தாலும்..
ஆற்றுப் புறம்போக்கு:
ஆறும், அதன் கரையில் உள்ள நிலம்
மேய்க்கால் புறம்போக்கு;
ஆடு மாடுகள் மேய்க்கப்படும் நிலம்.. இங்கே ஆடுமாடுகள் மேய்த்து கொள்ளலாம்..வேறு பயன்பாடுகள் அனுமதி இல்லை..
சாலைப் புறம்போக்கு:
இது பற்றி வாசகர்களுக்கே தெரியும்..சாலை உள்ள பகுதி
நத்தம் புறம்போக்கு:
இது மக்கள் வீடுகள் கட்டி குடியிருக்கும் நிலம். இந்நிலத்தில் குடியிருக்க மட்டுமே அனுமதி.. பட்டா பெறாத வரை உரிமை கொண்டாட முடியாது..
மற்றொரு வகையான நிலம் பட்டா நிலம்.. இதற்கு உரிமையாளர்களுக்கு உரிமை ஆவணமாக பட்டா வழங்கப்படும்..
தமிழ்நாட்டில், வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் செயல் படுகிறது. மேலும், இது அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் படி செயல் படுகிறது. இது குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது.. இவ்வாறு குறிப்பிட்டப் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்த படி அமைக்கப்பட்ட வருவாய் நிர்வாக நில உடமையைக் குறிக்கும் முக்கிய ஆவணமாக இருப்பது “சிட்டா” ஆகும்..
வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களின் மொத்த தொகுப்பினை கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும் ஒரு முக்கிய தொகுப்பு ஆகும்..சிட்டா வில் அந்த வருவாய் கிராமத்தின் நில உடமையாளர்கள் பெயர்கள் அகர வரிசைப்படி, ஏறு முறையில் பட்டா எண் வழங்கப்பட்டு எழுதப் பட்டிருக்கும்.. நிலங்களுக்கு தனித்தனியாக புல எண் (survey number) வழங்கப்பட்டு இருக்கும்.. ஒரு நிலத்தினை அடையாளம் காட்டுவது இந்த எண்களே.. ஒவ்வொரு நில உடமையாளர்களுக்கும் அந்த வருவாய் கிராமத்தில் உரிமை உள்ள நன்செய் நிலம், புன்செய் நிலம் ஆகியவை என்று ஒவ்வொரு நிலத் துண்டின் பரப்பளவு, பரப்பளவுக்குரிய நில உரிமையாளர் ஆகியவை குறிக்கப்பட்டு இருக்கும்..
” சிட்டா”, கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும்..நில உரிமை மாறும்போது, அதாவது நிலம் பரிவர்த்தனை செய்யும் போது; உதாரணமாக நிலம் விற்பனை, உயில் சாசனம், செட்டில்மென்ட், போன்றவைகளால் உரிமை மாற்றம் அடையும் போது, அந்த மாற்றம் குறித்து நிலம் வாங்கியவர் வட்டாட்சியருக்கு(தாசில்தார்) மனுச் செய்து கொள்ள வேண்டும்.. அவ்வாறு நிலப் பரிவர்த்தனை முழு நிலத்திற்கும் ஆனது எனில், விசாரணைக்குப் பிறகு நிலம் விற்றவரின் பெயரை சிட்டாவிலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டு வாங்கியவர் பெயரில் நில உரிமையாளர் எனக் குறிப்பிட்டு ஆணை வழங்கப்படும்..அவ்வாறன்றி பகுதி நிலம் மட்டிலுமே விற்பனை செய்யப் பட்டிருந்தால் அந்தப் பகுதி நிலத்தினை அளந்து அதன் சரியான பரப்பினைக் கண்டறிந்து அந்த நிலத்தின் புல எண்ணினை உட்பிரிவு (sub division) செய்து விற்றவரின் பெயரில் உள்ள உட்பிரிவு எண், பரப்பளவு மற்றும் வாங்கியவர் பெயரில் உள்ள உட்பிரிவு எண் பரப்பளவு ஆகியன குறிப்பிட்டு ஆணை வழங்கப்படும்.. உதாரணமாக ஒருவரின் நிலத்தின் புல எண் 2 என்று வைத்துக் கொள்வோம்..அது விற்பனைக்கு பிறகு 2ஏ, 2பி என்று பிரியும்.. பிற்காலத்தில் 2ஏவில் பிரிவுகள் ஏற்பட்டால் 2ஏ1, 2ஏ2 என்று வழங்கப்படும்.. இப்போது வாசகர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்..
இந்தப் பரிமாற்றத்தின் அடிப்படையில் அந்தந்த உடமைதாரருக்குப் பட்டா வழங்கப்படும்.. அவ்வாறு வட்டாட்சியரின் உத்தரவு பெறப்பட்ட பின்னர், உரிமை மாற்றம் குறித்த உத்தரவின்படி பதிவுகள் செய்து இந்த சிட்டா பதிவேடு அந்தந்த கிராம் நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும்.. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சிட்டா சீர் (update) செய்யப்படும்..
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை யின் நில உடமை ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுளாளது.(computerised).. நிலத்தின் விவரங்களின் பதிவுகள் வேண்டினால் முன்பு போல் கிராம் நிர்வாக அலுவலரால் வழங்கபாபடாமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்..
தற்போதைய நிலவரப்படி, நில மாற்றம் உட்பிரிவு ஏதுமின்றி முழுமையானதாக இருந்தால், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டு அறிவித்துள்ளது..
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
: பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.
இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.
சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை
வேறொரு விவரம் குறித்து பின்னர் பார்ப்போம்..