வானத்தில் சூரியன் தன் கரங்களால் சுட்டெரித்து கொண்டு இருந்தான். சுற்றிலும் பசுமை என்பதே கண்ணுக்கு புலப்படவில்லை.. அந்த ஒத்தையடிப்பாதையில் அந்த கிழவி காலில் செருப்பு இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள்..தாகம் அதிகரிக்க நாவினால் ஈரப்படுத்தி கொள்வதைத் தவிர வேறு எதுவும் வழி தெரியவில்லை.நடக்க நடக்க தூரம் அதிகமாகிக்கொண்டே போவது போல ஒரு பிரமை.. இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று அவளுக்கு தெரியும். நல்ல வேளை அவள் கண்களுக்கு சில தூரத்தில் ஒரு வேப்ப மரம் தெரிந்தது.. மெள்ள அதனை நோக்கி நடந்தாள்…மரம் நெருங்கி வந்ததும் அவளை அறியாமல் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்…சற்று ஓய்வெடுக்க தோதாக மரத்தின் கீழ் அமர்ந்து தன் முந்தானையால் விசிறிக் கொண்டாள்..பசி வேறு ஒரு புறத்தில் வயிற்றில் புரண்டது…சிறிது நேரத்தில் அவள் கண்கள் இருள மெல்ல சாய்ந்து விட்டாள்… கண்கள் மெல்ல திறந்தது…

அவளருகில் கையில் பிறந்த குழந்தையுடன் அவளது கணவன் முருகேசன் நின்று கொண்டு இருந்தான்.. அவனது முகத்தில் தெரிந்தது அவனது மகிழ்ச்சி.. “ஆம்பள புள்ள..” இவளது இதழில் சிறிது மகிழ்ச்சியுடன் பெருமிதமும் கூட.. பத்தாண்டுகள் ஒடிய பின்னர் பிறந்த மகவாயிற்றே…முருகேசன் அவளுக்கு பிள்ளை பிறக்க வில்லை என்று ஒரு நாளும் கடிந்தது இல்லை.. உண்மையில் அவளை அதிகமாகவே நேசித்தான்.. ஆயிற்று பத்து நாட்கள்.. அவள் குழந்தையை தூளி போல தோள்களில் கட்டிக்கொண்டு முருகேசனுடன் கூலி வேலைக்கு சென்று விட்டாள்.. அவர்கள் அந்த கிராமத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஒரு நகரத்தில் அரிசி ஆலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர்..பிரசவ நாள் வரை தன் வேலையை செய்து கொண்டு தான் இருந்தாள் “ என்ன முனிமா…அதுக்குள்ளாற வேலைக்கு வந்துட்ட…பச்சை உடம்புக்காரி…கொஞ்ச நாள் பொறுத்து வரக்கூடாதா”.. வாஞ்சையுடன் அந்த ஆலையின் சொந்தக்காரரது பொண்டாட்டி ரெட்டியாரம்மா கேட்டாள் “இருக்கட்டும்மா…உடம்பப் பார்த்தா வயிறு ஒண்ணு இருக்கு இல்லையா ம்மா…அதகண்டி…இப்ப இன்னொரு உசுறு வேற வந்திடிச்சியில்ல…சம்பாரிக்க வேணாம்..?” “ உன்னாண்ட என்ன சொன்னாலும் கேட்க மாட்டே..” ரெட்டியாரம்மா வருத்தம் கலந்த சிரிப்புடன் சொல்லி விட்டு சென்றாள்.. நாட்கள் சென்றன…பையனுக்கு தியாகராஜன் என்று பெயர் வைத்து தியாகு என்று கூப்பிட்டு வந்தார்கள்.. அவன் பத்து வருஷங்களுக்கு பிறகு பிறந்ததால் அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள்..அக்கம்பக்கத்தில கடன் வாங்கியாகிலும் அவனுக்கு படிப்பு விசயத்தில் குறையில்லாமல் வளர்த்தனர்.. தியாகு பள்ளி படிப்பை முடித்த போது எதிர்பாராத விதமாக முருகேசன் சிலநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான்.. முனியம்மா மிகவும் நொந்து போனாள்.. எவ்வித ஆதரவும் இல்லாமல் தியாகுவை வளர்க்க சிரமப்பட்டாள்…ஏதோ ரெட்டியார் அம்மா போன்ற நல்லவர்கள் இவளுக்கு உதவ மெல்ல மெல்லக் தன் துயரத்தில் இருந்து மீண்டு வந்தாள்.. மிகவும் சிரமப்பட்டு தியாகுவை ஒரு அரசுக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் வைத்தாள்…
காலச்சக்கரம் யாருக்காகவும் நிற்பதில்லை.. தியாகு மெல்ல எழுந்து நின்று விட்டான்…கல்லூரி படிப்பு காலத்திலேயே மங்களா என்கிற ஒரு வசதியான பெண்ணின் காதல் அவனை கிறங்கடித்தது.. படிப்பு முடித்து வேலை தேட அவனுக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை.. அவனது காதலி மங்களாவின் தந்தையின் தொழிற்சாலை நிர்வாக பொறுப்பு அவனுக்கு கிடைத்தது..…
முனியம்மாவிற்கு தெரியப்படுத்தாமலே டவுனில் திருமணம் நடைபெற்றது.. அக்கம்பக்கத்தில கேள்வி பட்டு முனியம்மா கண்ணீர் வடித்தாள்.. தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்..பெற்ற வயறு இல்லையா பிள்ளை எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும் என்று வாழ்த்தினாள்..
தியாகு எப்போதாவது வந்து முனியம்மா வை பார்த்து விட்டு செல்வான்…அந்நேரத்தில் அவள் கையிலிருக்கும் காசை செலவழித்து மீன் கறி என்று சமைத்து போடுவாள்.. அவன் மனைவியை ஒரு நாளும் அழைத்து வந்து காட்டியது இல்லை…எப்போதாவது முனியம்மா ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் அவளிடம் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி விடுவான்.. முனியம்மாவிற்கு இது பழக்கம் ஆகிவிட்டது..
“ ஏ கிழவி…கண்ணைத் திறந்து பார்..” என்று யாரோ உலுக்கினார்கள்.. முகத்தில் சில்லென்று தண்ணீர் பட்டதும் கிழவிக்கு இந்த உலக ப்ரக்ஞை வந்தது..
கண் விழித்து பார்த்தாள்.. மூன்றாவது வீட்டு ராக்கப்பன் தான்..
“ ஏ கிழவி.. என்ன இங்கன விழுந்து கெடக்கற…ஒடம்பு சரியில்லையா?”
பசியில் காது அடைந்திருக்க மலஙகமலங்க விழித்தாள்..
ராக்கப்பன் நிலைமையை உணர்ந்து கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து பிஸ்கெட்டுகளை அவள் கையில் கொடுத்தான்..அவசர அவசரமாக அதனை வாயில் திணித்து கொண்ட முனியம்மா சற்று நிதானித்தாள்
“ ஆமாம்…டவுன்ல ஒம்மகனுக்கு ஒடம்பு சரியில்லாம டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க அவனை பாக்க போகணும்னு சொல்லி ஆயிரம் ரூபாய் கைமாத்து வாங்கிட்டு போன.. அங்கேயே அவனோடயே தங்கி சொச்சம் காலத்தை கழிக்க போறேன்னு சொல்லிட்டு போன.. பணத்தை கூட டவுன் பக்கம் வரும்போது வாங்கிக்க சொன்ன…இப்ப என்னடான்னா இங்கே விழுந்து கெடக்கற…என்னாச்சு?
கேட்ட முனியம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது..
“ தியாகுவை டவுன் ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்காங்கனு வெவரம் தெரிஞ்சு நான் போய் பார்த்து கூடவே இருந்தேன்…ஒடம்பு சரியாகி வூட்டுக்கு வந்திட்டான்.. நானும் இனிமே அங்கேயே இருந்துடறேன்னு சொன்னேன்…மருமவ அதுக்கு ஒத்துக்கல.. நானும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன்.. தியாகு எனக்காக அவகிட்ட எதுவும் பேசலை..சண்டை பெரிசாகி அந்த சிறுக்கி என்ன கழுத்த பிடிச்சு வெளில தள்ளிட்டா…எம்மவனு ஒருத்தன் தவமிருந்து பெத்து வளத்தேனே அவனும் பலவிதமா திட்டி கடசீல என் வவுத்துல எட்டி ஒதச்சு தொரத்திட்டான்…என்ன செய்ய…விதியேன்னு நம்ம ஊருக்கே நடந்து வந்திகினு இருந்தேன்..கைல காசில்லை.. எதுவும் வாங்கி துண்ண முடியல…தாகம்..வெயிலு வேற ஏறிடுச்சா..தல கிர்ருன்னு சுத்தி கீழே விழுந்திட்டேன்..”அழுது கொண்டே அவள் சொன்னது ராக்கப்பன் மனதை என்னவோ செய்தது.. “விடு கெழவி.. அவன் கெடக்கறான் வெளங்காதவன்…ஆயி அப்பனை தொலச்ச எனக்கு தெரியும் உன் அருமை..தியாகுன்னு பேரு வச்ச.. தியாகம் ஏதும் செய்ய வேணாம்..பெத்தவள வச்சு காப்பாத்த தெரியாதவனெல்லாம் ஒரு ஆம்பளையா? வா நம்ம ஊருக்கு.. நான் ஒனக்கு கஞ்சி ஊத்தறேன்”
கெழவியை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து சென்றான் ராக்கப்பன்..
சூலில் தாங்காத ஒரு பிள்ளை அவளின் மிச்ச காலத்திற்கு துணையானது.