
கொடிய நோயான கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இந்த அகில உலகமும் தத்தளித்துக் கொண்டு உள்ளது..சென்ற நவம்பர் மாதத்தில் சைனா நாட்டின் ஊஹான் மாகாணத்தில் வித்திட்ட இவ்விஷ வ்ருக்ஷம் உலகில் உள்ள 195 நாடுகளுக்கு மேல் கிளைகள் பரப்பி செழித்து வளர்ந்து பல சொல்ல முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுவரை 1.50 கோடி மக்கள் உலகளவிலும் 9.50 லக்ஷம் மக்கள் இந்திய அளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்..
பல நாடுகளின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டு உள்ளது..இதனின்று நாம் மீண்டு வர வேண்டும்.. வருவோம்…!!! அணு ஆயுத தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மக்கள் போல; சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழும் ஃபீனிக்ஸ் பறவை போல…
உடல் நலம் காக்க, அரசாங்கம் அவ்வப்போது அளித்து வரும் அறிவுரைகளைப் பின்பற்றுவோம்..
இந்நேரத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் 12.05.2020 அன்று கொரானா பெருந்தொற்று பற்றி உரையாற்றுகையில் “ஆத்ம நிர்பான் பாரத்” என்பதைப் பற்றி கூறினார்.. இதன் பொருள் நமக்கு நாமே எனலாம்.. சுதந்திர போராட்டத்தில் ” சுதேசி இயக்கம்” என்று செய்தோம் இல்லையா? அதே போன்றது தான் இதுவும்..நம் நாட்டிற்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ளுதல்..அது தவிர ஏற்றுமதியும் செய்தல்..” Make in India” என்பதன் மறுவடிவம் என்றும் சிலர் கூறுவர்..எது எப்படியாயினும் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது ஓன்றே நோக்கம்.. இதன் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்.. பொருளாதாரம் மேம்படும்.. இந்தியா வல்லரசாக மாறும்..
தற்சார்பு இந்தியா என்பது உலகின் மற்ற நாடுகளின் தொடர்பை துண்டித்து கொள்வது அல்ல.. மாறாக அவர்களிடமிருந்து முதலீடுகளை வரவேற்போம்.. அவர்களது தொழில்நுட்ப ரகசியங்களை கற்று அறிவோம்.. ஆனால் நாமே அவற்றினை உற்பத்தி செய்வோம் என்பதே.. தற்காப்பு முகக் கவசங்கள் தயாரிப்பு பணியில் இந்த மார்ச் மாதத்தில் ஜீரோ; ஆனால் மே மாதத்தின் முதல் வாரத்தில் 1,50,000 ஆக உயர்ந்துள்ளது..இது உலகில் சைனாவிற்கு அடுத்த நிலையில் உள்ளது.. இந்த தொழில் நிறுவனங்கள் இதன் காரணமாக ரூபாய் 7000 கோடி இரண்டு மாதங்களில் சம்பாதித்து உள்ளன..I.I.T alumni council இந்திய சுயச்சார்பை மேம்படுத்த ரூபாய் 21000 கோடி நிதியைத் திரட்ட உள்ளது..
சைனா வின் உற்பத்தி பொருட்கள் உலகளவில் பரவியுள்ளது என்றால் அதன் காரணம் அங்கே அதிகரித்து வரும் குடிசைத் தொழில்கள் தான்.. குண்டூசி முதல் பெரிய இயந்திரங்களுக்கு தேவையான சிறுசிறு பொருட்களை குடிசைத் தொழில்கள் மூலமாக தயாரித்து உற்பத்தியைப் பெருக்குகிறார்கள்.. உதாரணமாக செல்போன் சர்க்யூட், கம்ப்யூட்டர் ஸ்பேர்ஸ், கடிகாரங்கள் இன்னும் பல..இவை வெறும் சேம்பிள்தான்.. இன்னும் நிறைய இருக்கிறது.. இவைகளின் உற்பத்தியைப் பெருக்கி சைனா தனது ஆக்டோபஸ் கரங்களால் உலகம் முழுவதும் பரவி தமது பொருட்களை சந்தைப்படுத்தியுள்ளது.. தமது பொருட்களை கொண்டு செல்ல ” சில்க் ரோடு” என்ற போக்குவரத்து வழித்தடத்தை 900 மில்லியன் டாலர் செலவில் மேம்படுத்த 2013ல் திட்டமிட்டு அதனை செயல் படுத்தவும் செய்து கொண்டு இருக்கின்றனர்..
சரி, நாம் நமது நாட்டின் நிலையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? தற்போது உலக நாடுகள் பலவற்றின் கோபம் கொரானா காரணமாக சைனா மீது திரும்பியுள்ளது.. இதனில் முதலில் இறங்கியது அமெரிக்கா.. சைனா வின் செல்போன் கம்பெனியான Huwai நிறுவனத்தின் பொருட்களை தடை செய்யப்பட்டுள்ளது.. அதன் தொடர்ச்சியாக பிரிட்டனும் தடை செய்துள்ளது.. இருப்பினும் மற்ற நாடுகளில் சைனா வின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.. இதன் காரணம் அப்பொருளின் குறைந்த விலை.. குறைந்த விலைக்கு அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தக் காரணம் உற்பத்தி செலவு குறைவு.. உற்பத்தியும் அதிகம்..இவை யாவற்றையும் ஒருங்கிணைத்து பார்த்தால் அதன் விடை குடிசைத் தொழிலாக அவைகளை கையாண்ட விதம்.. தரம் பார்க்கிறோமோ இல்லையோ, நாம் விலை பார்த்து வாங்க பழகி விட்டோம்.. உதாரணமாக ஒரு சிறு மோட்டார்..( acquarium pumps) பொதுவான சந்தை மதிப்பு ரூபாய் 300/- ஆனால் அதுவே சைனா தயாரிப்பு என்றால் ரூபாய் 120/- மட்டுமே.. இவ்வாறு பல பொருட்கள்.. இதன் காரணம் உற்பத்தி விலை குறைவு..
இந்நிலை நம் நாட்டில் ஏன் உருவாகக் கூடாது? நம் நாட்டில் இல்லாத மனித உழைப்பா? இன்றும் தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி போன்ற இடங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தேவையான குச்சிகளை அடுக்குதல், பெட்டி செய்தல், லேபில் ஒட்டுதல் போன்றவைகளை குடிசைத் தொழிலாக தான் செய்து வருகின்றனர்..
மத்திய அரசு அறிவித்துள்ள நிதி உதவி திட்டங்கள் MSME பிரிவுகளுக்கானது.. அதாவது சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கானது.. இதற்காக மத்திய அரசு ரூபாய் இருபது லக்ஷம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.. வங்கிகளில் பிணையம் (security) இல்லாமல் உடன் தொகை வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.. நமது நாட்டின் தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் அல்லாத மக்களை குறிப்பாக படித்து வேலை தேடும் இளைஞர்களைப் பயன் படுத்தி தமது தொழில்களை விரிவாக்கம் செய்யலாம்..அக்கிராமங்களைத் தத்தெடுத்து வளர்ச்சி அடையச் செய்யலாம்.. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி.. அவரது கனவுக்கு இது ஒரு நன்றிக்கடனாகவாவது இருக்கட்டும்.. குடிசைத் தொழிலாக எவைகளை எல்லாம் செய்ய இயலுமோ அவைகளை செய்து கொள்ளலாம்..
தற்போது தகவல் தொழில்நுட்பம் (I.T.sector) வீட்டில் இருந்தபடியே (work at home) செய்கின்றனர்.. இதனால் அந்நிறுவனங்களுக்கு பெரிய கட்டிடங்களுக்கான வாடகை, ஊழியர்கள் போக்குவரத்து, மற்றும் மின்சாரச் செலவு ஆகியன மிச்சம் ஆகிறது.. வீட்டில் இருந்தபடியே பணி செய்வதால் ஊழியர்கள் அதிக நேரம் பணியில் கவனம் செலுத்த இயலுகிறது.. மனித உழைப்பு அதிகமாக உற்பத்தி மேம்படுகிறது..
இதே நிலையில் ஆயத்த ஆடைகள் நிறுவனங்களை எடுத்து கொண்டால் கிராமத்துப் பெண்கள் பலர் இவற்றில் பணி புரிகின்றனர்.. அவர்கள் வீட்டிலேயே பணி புரிய அவர்களுக்கு தையல் இயந்திரங்கள், தையல் பொருட்கள் இத்யாதிகள் ஆகியவற்றை வழங்கி அவர்களிடம் தமக்குத் தேவையான பணியைப் பெற்றுக் கொள்ளலாம்..பல நிறுவனங்களில் பெண்கள் தமது மேற்பார்வையாளர்களால் பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாகக் கேள்விப் படுகிறோம்.. இதுவும் தவிர்க்கப் படும்.. கிராமத்தில் உள்ள நபர்களுக்கு தகுந்த பயிற்சிகள் அளித்து அதிக மனித உழைப்பைப் பெற்றுக்கோள்ளலாம்.. உற்பத்தி கூடும்..
தற்போது பல இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன.. இவைகளுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன.. ஆனால், நான் சில இடங்களில் கேள்விப்பட்டது, இக் குழுவினர் சிலர் வங்கியில் தவறான தகவல்களை அளித்து கடன் உதவி பெறுவதாகவும் அவர்கள் அத்தொகையைக் கொண்டு எந்த விதமான தொழிலும் செய்வதில்லை என்று.. வேதனை.. இதற்கு சில வங்கி ஊழியர்களும் உடந்தையாக உள்ளனர் என்பது இன்னும் வேதனை.. நாம் நேர்மையான முறையில் செயல்படுத்த வேண்டும்.. வங்கி ஊழியர்கள்களிடமும் முறையான கண்காணிப்பு தேவை..
மேற்சொன்ன தொழில் போல கம்ப்யூட்டர் சர்க்யூட், செல்போன் சர்க்யூட், சைக்கிள் வீல் ஸ்போக்ஸ் அசெம்பிளி ஆகியன போன்ற பல்வேறு சிறிய தொழில்கள் உள்ளன.. எங்கெல்லாம் குடிசைத் தொழில்களை உருவாக்க இயலுமோ அங்கெல்லாம் உருவாக்கி உற்பத்தியை அதிகரித்தால் இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கலாம்.. சமீபத்தில் கூகுள் நிறுவனம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க ரூபாய் 75000 கோடி ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது..இது போன்று பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய வழி வகை செய்ய வேண்டும்.. அதற்கான ஆயத்த நடவடிக்கைகள் செய்யப் பட்டு வருகிறது.. மக்கள் தொகை மிகுந்த சைனா தமது பொருட்களை கொண்டு செல்ல சில்க் ரோடு அமைத்து போல, அதற்கு அடுத்து மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டிலும் அச் சூழ்நிலை உருவாக கடும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்..
அந்த மாதிரியான சூழல் நமது பாரதத்திற்கும் ஏற்பட வேண்டும்.. இந்த கொடிய நோய் நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.. மறைந்த மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நம்மை எல்லாம் கனவு காணுங்கள் என்றார்.. ஆம்!!! நாம் காணுவோம் மேலே சொன்ன தற்சார்பு நிலை வளர… நிச்சயமாக ஒரு நாள் கனவு மெய்ப்படும்..!?! காத்திருப்போம்… நம்பிக்கையுடன்..
வாழ்க பாரதம். வளர்க தற்சார்பு
ஜெய்ஹிந்த்!!!!
ல