விளம்பியில் தோன்றி விரிவடைந்தது உன் அரசாங்கம்
விளங்க இயலா முடிச்சுகளுடன் முகம் காட்டும் வைரஸே
நலிவுற்ற மக்கள் நாளும் நாளும் அஞ்சவைத்தாய் உனக்கு
சலிப்பு தான் தோன்றாதோ சமர் செய்ய வேண்டுமா நீ
பல்லாயிரவர் இவ்வுலகில் பலியாகும் பரிதாபம்
சொல்லோணா துயர் தந்து சோர்வடைய செய்கிறாய்
எல்லாமறிந்த இறைவனுமே மௌனம் காப்பதும் ஏனோ
வல்வினைதான் தீர்ப்பாரோ வரமளித்து காப்பாரோ
நிலமுழுது பயிர் வளர்த்த பெரியோர்கள் யாவருமே
பலமிழந்து பரிதவித்து பாழாய்த்தான் போகின்றார்
புலம் பெயர்ந்த மாந்தருமே புரியாமல் விழிக்கின்றார்
அவலநிலை தீராதோ வெளியேற மாட்டாயோ
நடுங்கும் நாட்டினரை நலமாக்க வேண்டும்
கடுகளவேனும் கருணை தான் கனிந்து தான் காட்டாயோ
சுடு நெருப்பாய் மனம் வாடும் சூழ்நிலையும் மாறாதோ
கொடுங்கோலா கோவிட்டே இனியேனும் வெளியேறு
பொருளாதாரம் படுகுழியில் புதைந்திடவே வகை செய்தாய்
அருளாதாரம் அளிக்கத் தான் மாட்டாயோ அவுணனே
மருள்கின்றோம் மனக்கலக்கம் தினம் கூட மக்கள்
இருள் நீங்க வகை செய்து இனியாகிலும் வெளியேறு..