மகாபாரதத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக வாரணாவதத்தில் நிர்மாணிக்கப்பட்ட அரக்கு மாளிகை எரிப்பு.. அதன் பின்னர் சிலகாலம் மறைந்து வாழ்ந்த பாண்டவர்கள் பாஞ்சாலத்தில் நிகழ்ந்த திரௌபதி சுயம்வரத்தில் வெளிப்பட்டனர்.. அதன்பின்னர் யுவராஜ பட்டாபிஷேகத்திற்கு யுதிஷ்டிரன் மற்றும் துரியோதனன் ஆகியோரிடம் போட்டி ஏற்பட்டது.. அச்சமயத்தில் அதற்கு தீர்வாக பாண்டவர்களுக்கு காண்டவப்ரஸ்தம் தரப்பட்டது.. அந்த பகுதியில் தக்ஷகன் எனும் நாகம் மாயாசுரனின் உதவியால் வசித்துவந்தான்..அப்பகுதியை அடைந்த பாண்டவர்கள் அப்பகுதியில் நகரம் நிர்மாணிக்க முற்பட தக்ஷகன் அவர்களை எதிர்த்து போரிட்டு தோல்வி அடைந்து பழிவாங்கும் நோக்குடன் பதுங்கி வாழ்கிறான்.. பாண்டவர்கள் புது நகரினை நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்று பெயரிடுகிறார்கள்..
நகரத்தின் புதுமனைப் புகுவிழாவிற்கு திருதிராஷ்டிரன் ஒரு லட்சம் பசுக்களை வழங்கினான்.. ஆனால் சகுனியும் துரியோதனனும் தக்ஷகனை அழைத்து அப் பசுக்களை கவர்ந்து பாண்டவர்களை பழிவாங்க சந்தர்ப்பத்தை உருவாக்கினார்கள்..தக்ஷகனும் அவ்வாறே பசுக்களை கவர்ந்து சென்றான். அவற்றைக் காப்பாற்ற அர்ஜுனன் தனது காண்டீபம் எடுக்க யுதிஷ்டிரனும் திரௌபதியும் இருக்கும் அறைக்கு சென்று எடுத்து வந்து தக்ஷகனிடமிருந்து பசுக்களை காப்பாற்றினான்.. ஆயினும் யுதிஷ்டிரனும் திரௌபதியும் தனிமையில் இருக்கும் அறையில் அவர்கள் அனுமதி இன்றி நுழைந்த குற்றத்திற்காக ஒராண்டு வனவாசம் செல்கிறான்..
அவனது வனவாசத்தில் ஒரு நாள் கங்கை நதியில் நீராடி கொண்டு இருந்த போது அவன் நீரினுள் இழுக்க படுவதைஉணர்ந்தான்..உண்மையை அறிய முற்பட்ட அர்ஜுனன் அந்நிகழ்வுக்கு காரணம் உலுப்பி எனும் நாககன்னிகை என்று அறிந்தான்.. அவள் அவனை நாகலோகத்திற்கு அழைத்து சென்றாள்.

. அவ்விடம் அவளது தந்தை கௌரவ்யா எனும் நாகராஜனுக்கு சொந்தமானது.. அங்கே யாகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது.. அர்ஜுனன் அந்த யாகத்தில் பங்கு கொண்டு அக்னிக்கு ஆவிர்பாகங்களை வழங்க அக்னி தேவன் திருப்தியுறுகிறான்.. அர்ஜுனன் தன்னை நாகலோகத்திற்கு அழைத்து வந்த நாகக்கன்னிகை உலூப்பியிடம் அவளைப் பற்றி கேட்க அவள் தான் அர்ஜுனன் மீது தீராத காதல் கொண்டு உள்ளதாகவும் தன்னை மணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறாள்..
ஆனால் அர்ஜுனன் தான் திரௌபதியை மணந்து கொண்டதாகவும் தற்போது ப்ரம்மச்சரியம் கடை பிடிப்பதாகவும் கூறுகிறான்..அதனை ஏற்று கொள்ள மறுத்து உலூப்பி திரௌபதியின் மணம் செய்தது தம்மை எவ்விதத்திலும் பாதிக்காது என்று கூறி அவனை வற்புறுத்துகிறாள்..

இதனால் மனமாற்றம் அடைந்த அர்ஜுனன் அவளை மணந்து அவள் மூலமாக அரவான் எனும் மகனைப் பெற்றான்..
அரவான் பற்றிய தகவல்கள் வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.
மனம் மகிழ்ந்த உலூப்பி அர்ஜுனனுக்கு ஒரு வரம் அளித்தாள்.அதன்படி நீர் வாழ் உயிரினங்கள் யாவும் அவனுக்கு கீழ் படியும் என்றும் நீருக்குள் அவனது உருவம் மறையும் என்றும்..
பிற்காலத்தில் குருக்ஷேத்திரப் போரில் பீஷ்மரை அர்ஜுனன் வென்று அழிக்கிறான்.. அஷ்ட வசுக்களில் ஒருவரான பீஷ்மரை கொன்றதற்காக மற்ற வசுக்கள் அர்ஜுனனுக்கு சாபம் அளிக்கின்றனர்..
இச் சாபத்தினை அறிந்த உலூப்பி தனது தந்தை கௌரவ்யா மூலம் கங்கை மாதாவிடம் வேண்ட அவர் ஒரு தீர்வு அளித்தார்.. அதன்படி அர்ஜுனனின் மற்றொரு மகனான பப்ருவாஹனன்( அர்ஜுனனுக்கும் சித்ராங்கதாவிற்கும் பிறந்தவன்) ஒரு போரில் அர்ஜுனனைக் கொல்வான் என்றும் அப்போது உலுப்பி அவளிடத்தில் உள்ள நாகமணி மூலம் அர்ஜுனனை மீண்டும் உயிர் பெற்று எழ வைக்கலாம் என்று கூறுகிறாள்..
அர்ஜுனன் தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தான்,. அப்போது ,அவன் இமயமலைக்கு கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றான்..அங்கு அவன் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையை சந்தித்தான்.. அர்ஜுனன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினான்.. அதற்கு அவர், அவ்வூர் வழக்கப்படி சித்திராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும், அவர்களை அர்ஜுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார்.. அர்ஜுனன் சித்திராங்கதையையும் அவளது குழந்தையையும் கூட்டி செல்வதில்லை என்று உறுதி கொடுத்து, மணமுடித்து கொள்கிறான்.. இவர்களுக்கு பாப்புருவாகனன் என்ற மகன் பிறந்தான்..அவனே மணிப்பூர் அரசின் வாரிசு ஆனான்..
இதன் தொடர்பாக வேறு ஒரு கதை உள்ளது.. குருக்ஷேத்திர போருக்கு பின், தர்மபுத்திரன், அஸ்தினாபுரத்தின் மகாராஜாவாக முடிசூட்டிக் கொண்டார்..அதன் பின் அவர் ஒரு அஸ்வமேத யாகம் செய்தார்..யாகக்குதிரை பல இடங்களுக்கு சென்றது.. அதன் பின்னால் அர்ஜூனன் சென்றான்.. வடதேசம் முழுவதும் வெற்றி கொண்டபின் அர்ஜுனன், தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருந்த மணலூர்புரம் என்ற ஊரை அடைந்தான்.. மதுரை, அப்போது கடம்ப வனமாக இருந்தது . மணலூர் புரம் தான், அந்த நாட்டின் தலைநகரமாக இருந்தது.. அந்த நாட்டை பப்ருவாகனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான்.. இவன் அர்ஜுனனுக்கும் சித்ராஙாகதைக்குமா பிறந்தவன்.. அவனை, அர்ஜுனன் பாண்டிய மன்னருக்கு தத்துப் பிள்ளையாக கொடுத்துவிட்டான்..
யாகக் குதிரை வந்திருக்கும் தகவல் பப்ருவாகனனுக்குத்
தெரிவிக்கப்பட்டது.. அவன் பெரியப்பாநடத்தும் அஸ்வமேத யாகக் குதிரைக்கு காவலாக வந்திருக்கும் தனது தந்தைக்கும் சகல மரியாதைகளும் செய்ய வேண்டும் என்று விரும்பினான்.. அதன்படி,மாலை மற்றும் காணிக்கைகள் உடன் அர்ஜுனனிடம் சென்றான்.. ஆனால் அர்ஜுனன் அதை விரும்பவில்லை தன் மகன் தன்னுடனே போர் செய்ய வேண்டும் என்று விரும்பினான்.. அர்ஜுனன் பெற்றிருந்த சாபத்தை முன்னரே அறிந்த கண்ணன் தான் அர்ஜுன மனதில் அப்படி ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்து இருக்கலாம்.. தந்தைக்கும் மகனுக்கும் இடையே போர் நடந்து அர்ஜுனனை பப்ருவாகனன் கொன்று விட்டான்.. இதனை அறிந்த சித்திராங்கதை போர்க்களத்தில் வந்து அழுது அரற்றினாள்..அதே நேரத்தில் அங்கே அர்ஜுனனின் மற்றொரு மனைவியான உலூப்பியும் அங்கு வந்து சேர்ந்தாள்..
உலூப்பி தன் மனதில், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மணியை நினைத்தாள்.. உடனே அது அவள் கையில் வந்து சேர்ந்தது.. அந்த மணியை, அர்ஜுனன் உடலில் வைத்து அவனை உயிர்த்தெழச் செய்தாள்..

குருச்சேத்திரப் போரில் தன் மகன் அரவான் களப்பலி கொடுக்க உலூப்பி இசைகிறாள்..அரவானைப் பற்றி தனியே ஒரு பதிவு செய்கிறேன்.. இவ்வாறு தான் பெற்ற மகனையே களபலி கொடுக்கவும், இறந்து போன தன் கணவரை உயிர் பெறச் செய்ததும், உலூப்பியின் மிக உன்னதமான செயல் ஆகும்.. அவளது உறவு அர்ஜுனனுக்கு ஒரு உன்னதமான உறவு என்று சொல்வது மிகையாகாது..