இதிகாச நிகழ்வுகளை பற்றி ஆராய நமக்கு தடயங்கள் தேவைப்படுகிறது.. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை.. நான் முன்னரே குறிப்பிட்டவாறு பல காலமாற்றங்கள், நாடுகளில் படையெடுப்பு ஆகியன தடயங்களை அழித்து விடுகின்றன..
புராண கால அரசுகளுக்கு பின்னர் இந்து மன்னர்கள் ஆட்சி செய்தனர்..அவர்கள் காலத்திலும் பௌத்த, சமண ஆதிக்கம் இருந்த தனால் இந்து சமய சின்னங்களை மீறி அச்சமயங்களின் சின்னங்கள் பரவின.. அதன்பின் முகலாய பேரரசு பாரதத்தின் வடமேற்கே உச்ச நிலையில் இருந்த போது பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு ஆக இருந்தது..கி.பி..1526 முதல் 1713 வரை இப்பேரரசு நிலைப்பெற்று இருந்தது..கி.பி 1526ல் இப்ராஹிம் லோடி முதல் முகலாய பேரரசை நிறுவினார்..
இஸ்லாமியர்களின் படையெடுப்பால் இந்தியாவின் தொன்மையான பல சான்றுகள் அழிக்கப் பட்டு விட்டன.. குறிப்பாக அவர்கள் போரிட்டு நாட்டினை வென்றதோடு அல்லாமல் இந்து கோயில்களை அழித்து பல விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையும் அடித்துள்ளனர்.. திருவரங்கம் பெருமாளைக் காத்திட நம் முன்னோர்கள் மேற்கொண்ட கடும் முயற்சிகளை ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய ” திருவரங்கன் உலா” எனும் புதினத்தில் காணலாம்..
அதுமட்டுமின்றி இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்னர் 1857ல் ஆங்கிலேயர் ஆட்சி.. இவ்வாறு அந்நியர்களால் இந்தியத் தொன்மங்கள் அழிக்க பட்டுவிட்டதால் நமக்கு பண்டைய வரலாறுகளின் உண்மைத்தன்மை ஆராய வழிவகைகள் யாவும் அற்றுப் போனது..
புராணங்களில் இராமர் பிறந்தது திரேதாயுகத்தில் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தது துவாபர யுகம் என்றும் கூறப்படுகிறது.. யுகங்களின் காலங்களும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது..
திரேதாயுகம். 1296000 ஆண்டுகள்
துவாபர யுகம். 864000 ஆண்டுகள்
கலியுகம். 432000 ஆண்டுகள்
கலியுகத்தில் இதுவரை சுமார் 5000 ஆண்டுகள் முடிந்துள்ளன..
இந்த கணிப்பு படி ஆராய்ந்தால் இராமர் பிறந்து சுமார் 2165000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.. அந்த கால வரலாறோ அல்லது விஞ்ஞான ரீதியான சான்றுகளோ நமக்கு கிடைக்கப் பெறவில்லை.. இருப்பினும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இராமர் சேது கட்டியது சுமார் 1000000 ஆண்டுகளுக்கு முன்னர் என்றும், அதுதான் முதன்முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் என்றும் குறிப்பிடுவர்..
மற்றொரு ஆராய்ச்சியில் இராமர் வாழ்ந்த காலத்தில் மக்கள் பட்டாடை உடுத்தி இருந்தனர் என்றும் கால்நடைகளை பழக்கப்படுத்தி இருந்தனர் என்றும் தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தனர் என்றும் தெரிகிறது.. ஆகவே இராமர் வாழ்ந்த காலம் உலோக காலம்; அது கி.மு. 5000 ஆண்டுகள் முதல் கி.மு 3000 வரை என்று கணிக்கலாம்.. ஸ்ரீ மத் பாகவதத்தில் இராமனின் புதல்வன் குசனுக்குப் பிறகு அவனது வழித்தோன்றல் ஆன பிரகத்பாலனோடு ரகுவம்சம் அழிவடைந்ததாகக் கூறப்படுகிறது..பிரகத்பாலன் குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டு அபிமன்யுவால் கொல்லப்படுகிறான்.. ஆகவே ரகுவம்சமானது கி.மு 3137ல் முடிவடைந்தது.. அவ்வாறாயின் இராமாயண காலம் கி.மு 5000ம் ஆண்டுகளில் இருந்திருக்கலாம்.. இந்த கால ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..
இராமாயணம்
இராமாயணம் ஸ்ரீ வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ஒரு காவியம் ஆகும்.. அவர் இதனை ஏழ காண்டங்களாகப் பிரித்து 24000 ஸ்லோகங்களில் இயற்றியுள்ளார்.

வால்மீகி முனிவரின் இயற்பெயர் அக்னி சர்மா.. இவர் ப்ருகு கோத்திரத்தைச் சேர்ந்த ப்ரசட்டா(சுமாலி) என்கிற அந்தணருக்குப் பிறந்தவர்..ஒரு சமயம் இவர் நாரத முனிவரை சந்திக்க நேர்ந்தது.. அவரது உபதேசத்தின்படி இவர் ” மரா” எனும் மரத்தின் கீழ் அமர்ந்து ” மரா, மரா” என்று சொல்லி தவம் செய்தார்..பல ஆண்டுகள் தவம்.. அவரது உடலை சுற்றி கரையான்கள் புற்று ஏற்படுத்தி விட்டிருந்தது.. இருப்பினும் அவர் தவம கலையவில்லை..அவர் நாவில் மரா மரா என்று உச்சரித்து ராம ராம என்று ஆனது.. புற்றிலிருந்து வெளிப்பட்டார் என்பதனால் வால்மீகி எனும் பெயர் பெற்றார்..
ஒரு சில புராணங்களில் இவர் முன்னாளில் திருடனாக இருந்து பின் நாரத முனிவர் உபதேசத்தால் மாறியதாக சொல்லப்படுகிறது..
ஒரு நாள் வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையில் தமது சிஷ்யர் பரத்வாஜர் மற்றும் சிலருடன் ஸ்நானம் செய்ய சென்ற போது நீரின் தெளிவைக் கண்டு வியந்தார்.. அப்போது அங்கே ஆணும் பெண்ணும் ஆன இரண்டு கிரௌஞ்ச பட்சிகள் விளையாடிக்கொண்டு இருந்தன.. அப்போது திடீரென ஒரு அம்பு அந்த ஆண் பட்சி மீது பாய்ந்து அதனை கொன்றது.. அதனை கண்டு பெண் பட்சி அலறியவண்ணம் கண்ணீர் வடித்தது.. இக்காட்சியை கண்ட வால்மீகி முனிவர் மனதில் வருத்தமும் கோபமும் அதிகமாக அந்த பட்சியை கொன்ற வேடனைப் பார்த்து
” மா நிஷாத! ப்ரதிஷ்டாம்ப்த மகம:
சாஸ்வததீ: ஸமா: !
யத் கிரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காம் மோஹிதம்!!
ஹே! வேடனே! கிரௌஞ்சப் பட்சிகள் சந்தோஷமாக இருக்கும் போது அதனை அடித்து விட்டாயே! நீ வெகு காலம் இருக்க மாட்டாய்…” என்று அந்த வேடனைப் பார்த்து சபிப்பது போல சில வார்த்தைகள் கூற, அப்படி அவர் வாக்கில் வந்த வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தஸில் 32 அக்ஷரங்கள் கொண்ட ஸ்லோகமாகி விட்டது..இதுவே உலகின் முதல் ஸ்லோகமாகக் கருதப்படுகிறது.
வால்மீகி முனிவரின் வாக்கிலிருந்து முதல் முதலாக வந்த அந்த ஸ்லோகத்திற்கு மகான்கள், “…’மா’ என்றால் லக்ஷ்மி தேவி. ‘மா நிஷாத’ என்றால் லக்ஷ்மி தேவியின் கணவர். அதாவது, மகாவிஷ்ணு. கிரௌஞ்ச என்றால், ராக்ஷசன் என்று ஒரு பொருள். ‘ராக்ஷஸ தம்பதிகளிலே, மண்டோதரி புலம்பும்படி ராவணனை வதம் செய்து, உலகுக்கெல்லாம் நன்மை செய்த, ஹே ராமா!’…’சாஸ்வதி ஸமா: பிரதிஷ்டாம் த்வம்’, என்றால் ‘பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!’…என்று சொல்லும்படி இதில் ஒரு பொருள் இருக்கிறது…”, என்று சொல்லுவர்.
அப்பறம் வால்மீகி முனிவருடைய ஆசிரமத்திற்கு, பிரம்ம தேவர் வந்தார். பத்தாயிரம் வருஷம் கடுமையான தபஸ் செய்தவர்களுக்கு தான் அவர் தரிசனம் தருவார். இங்கே, வால்மீகி முனிவருக்கு அவர் கேட்காமலே தரிசனம் தர காரணம் என்ன? புற்று மண்ணுள்ளே, அவர் செய்த ராம நாம ஜபம் தான் காரணம்!
பிரம்ம தேவரைப் பார்த்தவுடனே, வால்மீகி முனிவர் பரபரப்புடன் அவரை நமஸ்காரம் செய்து, பூஜை செய்தார். பிரம்ம தேவர் மிகவும் சந்தோஷம் அடைந்து, வால்மீகி முனிவரை அருகே உட்காரச் சொன்னார். அவரருகே வால்மீகி முனிவர் பணிவுடன் அமர்ந்த போது, அந்த நேரத்திலும் வால்மீகி முனிவர் தன் வாக்கிலே வந்த ஸ்லோகத்தின் பற்றிய எண்ணம் அவர் மனதில் வந்தது. அப்போது பிரம்மதேவர், “யாமே ஸரஸ்வதி தேவியை உம் வாக்கிலே ஆவிர்பரித்திரிக்கிறோம். நாரதர் உம்மிடம் சொன்ன ராம சரித்திரத்தை நீர் விஸ்தாரமாக ஒரு காவ்யமாக எழுதுங்கள்…” என்று ஆசி கூறினார்.
மேலும், “உமக்கு ஸ்ரீ ராம சரித்திரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உமது யோக சக்தியினால் உமக்கு தெரியும். அதில், ஸ்ரீ ராமருக்கும், சீதா தேவிக்கும் மறந்து போனவைகள் கூட உமக்கு தெரிய வரும்… ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்த நிகழ்ச்சிகள் கூட, அவர்களுக்குள் ரகசியமாக பேசியது சிரித்தது, ஹனுமாரின் பிரபாவம், இப்படி எல்லா விஷயங்களும் உங்களுக்கு மனதில் தெரியும்… அதை அப்படியே எழுதவும். அதில், ஒரு பொய்யும் இருக்காது! ”, எனக் கூறினார்.( Courtesy: valmikiramayan.in)
இவ்வாறு தான் வால்மீகி முனிவர் இராமாயணம் உதயமானது..இதனை ஒற்றி பல்வேறு இராமாயணங்கள் இயற்றப்படுள்ளன
அவற்றைப் பற்றியும் இராமாயண காவியத்தை சுருக்கமாக அடுத்து பார்ப்போம்
நாளை சந்திப்போம்