
அந்த கிராமம் காலையிலேயே மிகவும் பரபரப்பாக இருந்தது.. கார்களும் வேன்களும படபடவென்று வந்து நின்றன..
” என்னப்பா விசேஷம்?”
” நம்ம பெருமா கோயில்ல ஏதோ ஷூட்டிங் காம்பா..”
” யார் வர்றாங்க தெரியுமா?”
” எனக்கென்ன ப்பா தெரியும்..உனக்காச்சும் தெரியுமா?”
” அட! நம்ம காரணத்தெரு ஜகன் இருக்கான்ல.. அவன் ஏதோ சினிமா கம்பெனில இருக்கானாமே.. அவன் ஏற்பாடாம் போல'”
சிறிய கிராமம் என்பதனால் இதுதான் எல்லோரின் பேச்சாக இருந்தது..
ஒரு குடிசையில் இருந்து தலை நீட்டிய குப்பாயி” தே..! உள்ளாறப் போயி கஞ்சி குடிச்சிட்டு சுருக்கா வேலைக்கு வா..வாசல்லயே குந்திகினு கீற..”
” அடிபோடி சிறுக்கி!..விஷயமே தெரியாதா? நம்ம பெருமா கோயில்ல ஷூட்டிங் காம்.. தளபதி விஜய்,. சமந்தா எல்லாம் வர்ராங்களாம்..”
” அட போய்யா..இன்ன பொழப்பை பாப்பியா.. ஷூட்டிங் காம்..வாவா சுருக்க பொறப்பட்டு வா..”… சொல்லி கொண்டே குப்பாயி சும்மாடை சுருட்டி தலை மேல வைத்து கொண்டு அதில் கூடை, மண்வெட்டி வைத்து வேலைக்கு புறப்பட்டாள்..
ஆனால் நம்ம மருதன் புறப்பட தயாரில்லை..இது போல் பல குடும்பங்கள்..
ஆயிற்று மணி 9.30..வெயில் வேறு சுள்ளேன்று ஆரம்பித்தது..
சிறிது நேரத்தில் படப்பிடிப்பு வேனில் இருந்து கேமிரா, லைட்டுகள், இத்யாதிகள்..வேனுடன் இழுத்து வரப்பட்ட கிரேனும் செட் செய்யப்பட்டது..
கோயிலின் உள்ளே இருந்த ஒரு மண்டபத்தில் காகித பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.. தரையில் ஜமக்காள விரிப்புகள் பல விதமாக விரிக்கப்பட்டு இருந்தன.. ஒரு திருமண காட்சி அங்கே ஷூட் செய்ய இருப்பதால் அவ்வாறு தயார் செய்து இருந்தனர்..
சற்று நேரத்தில் ஒரு லக்ஸுரி கார் வந்து நின்றது.. அதிலிருந்து சற்று முன் வழுக்கை தலையுடன் டீசன்டாக ஒருவர் இறங்கினார்..அவரைத் தொடர்ந்து பட்டு புடவை நகைகள் அணிந்து ஒரு நடுத்தர வயது பெண் இறங்கினாள்.. அதன் பின்னர் மாடர்ன் டிரஸ் அணிந்து பளபளப்பாக ஒரு இருபது வயது அழகி இறங்கினாள்.. முதலில் இறங்கியவர் டைரக்டர் வேணிப்பிரஸாத்.. அடுத்து அவர் மனைவி மரகதம்.. கடைசியாக இறங்கியது அவரது ஒரே மகளும் ஸ்டார் நடிகையுமான நளினா.. சற்று நேரத்தில் மணப்பெண்ணுக்கான காஸ்ட்யூமில் இருப்பாள்.. அவள் வளர்ந்து வரும் ஒரு ஸ்டார்.. அவளின் முதல் படம் சுமாராகத்தான் போயிற்று.. அடுத்து வந்த” காலம் பதில் சொல்லும்”.. பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. தொடர்ந்து மூன்று நான்கு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்..கேட்தணுமா..நல்ல வசூல்.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணிய அவளது அப்பாவும் டைரக்டருமான வேணிபிரஸாத் இதுவரை பலரின் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்த நளினாவை தமது சொந்த படத்திலேயே போட்டு நல்ல காசு பார்க்கும் எண்ணத்தில் இந்த படம்” யார் இவன்” தயாரித்து வெளியிட ஆர்வம் கொள்ள தற்போது ஷூட்டிங் போய் கொண்டு இருக்கிறது.. முக்கால் வாசி ஷூட்டிங் முடிந்து படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது.. படத்தின் கதாநாயகன் ரமேஷ் ஒரு பிரபலமான நடிகர்.. அவரிடம் கால்ஷீட் வாங்குவது மிகவும் சிரமம்.. ஆனாலும் கஷ்டப்பட்டு இன்றைய ஷூட்டிங் கிற்கு கால்ஷீட் வாங்கியாச்சு.. இன்று இந்த கல்யாண சீன் எடுத்து விட்டால் அதன் பின் ஒரு சில சிறிய சீன்கள் தான்.. அவை முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்.. எல்லாம் சரியாக போனால் இன்னும் இரு வாரங்களில் ரிலீஸ் செய்து விடலாம் என்கிற கனவில் மிதந்தார்.. டைரக்டரும் தயாரிப்பாளருமான வேணிபிரஸாத்..
இன்றைய காலையில் ஷூட்டிங் கிற்காக புறப்பட்ட போது..
” அம்மா..நளினா..ரெடியா?.. ஷூட்டிங் கிற்கு டயம் ஆவுது”
” இதோ..ரெடிப்பா..” மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டே கூறினாள் நளினா
அதே நேரத்தில் அங்கே வந்த மரகதம்..” என்னங்க.. நானும் வர்றேன்..”
” எங்கே..?”
“கோயிலுக்கு.. அந்த பெருமாள் ரொம்ப சக்தி வாய்ந்தவராம்.. நம்ம ஜகன் நேற்றே சொன்னான்.. அதான் நானும் கிளம்பிட்டேன்.. தரிசனம் செய்யலாம்னு..”
” சரிசரி..வா”
இதுதான் காலையில் நடந்தது..
சரி..நாம ஷூட்டிங் ஸ்பாட்க்கு வருவோம்
காரை விட்டு இறங்கிய டைரக்டரை படப்பிடிப்பு குழுவினர் வரவேற்று ஊர் முக்கிய பிரமுகர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர்..
” ஏம்பா…ஜகன்.. எல்லாம் ரெடியா? … ஷூட்டிங் ஆரம்பிக்கலாமா.. ஹீரோ ரமேஷ் வந்தாயிற்றா..”
” அது வந்து.. வந்து.. அவர் வரவில்லை சார்..” தலையை சொரிந்து கொண்டே கூறினான்.
” என்னது..? வரவில்லையா..? ஷாக்காகினார் வேணிபிரஸாத்..
” என்னப்பா.. ஏன் வரவில்லை? ஏதாவது தகவல் உண்டா?..இப்ப என்ன செய்ய.. ஷூட்டிங் முடியணுமேப்பா.. எல்லாம் ரெடியா…சரியா இருக்க சொன்னா.. இப்படி சொதப்பிட்டியே..”
” இல்ல சார்.. அவருக்கு கொரானாவாம்.. இப்பதான் அவரது மேனேஜர் போன் செய்து சொன்னாங்க..
” த்சு..த்சு..அடக் கஷ்டகாலமே..அவரை ஒன்றும் சொல்ல முடியாது..என்ன செய்யலாம்.. பேக்கப் தான் செய்ய வேண்டும்..ஏம்பா.. எல்லா ஏற்பாடுகளும் செய்தாச்சே..ஹும்.. படம் ஷூட்டிங் ஆரம்பிச்சு நல்லா போய் கிட்டு இருந்திச்சு..”. சலித்து கொண்டார்..
அந்த நேரத்தில் தான் அங்கிருந்த கூட்டத்தில் ஒருவன் தனியாகத் தெரிந்தான்..அவனையே உற்றுப் பார்த்தார்.. அவரது மூளையில் பொரி தட்டியது.. அந்த ஆள் அவரது பட ஹீரோ ரமேஷ் போலவே இருந்தான்.. அனேகமாக லுக் அலைக்காக இருக்கும் போல..
சரி..இனி ஷூட்டிங் ஆரம்பிக்க குறைந்தது ஒரு மாதத்திற்கு மேலாக ஆகும்..ரமேஷை வைத்து ஷூட் செய்ய வேண்டிய சீன் இது ஒன்று தான்.. படத்தை அந்த புதுப் பையனை வைத்து முடித்து விடலாம்.. கூடுமானவரை பையனுக்கு க்ளோசப் வைக்காமல் லாங் ஷாட்டில் எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்..ஜகனைக் கூப்பிட்டு தன் யோசனையை சொன்னார்..
அந்த பையனின் பேரும் ரமேஷ் தானாம்.. சென்னை வளசரவாக்கத்தில் தான் இருக்கிறானாம்.. அவனும் ஏதோ சீரியல் ஷூட்டிங்ல கேமரா மேனாம்..
எல்லாம் நினைத்தபடி நடந்தது.. கல்யாண சீன் ஷூட்டிங் சென்று கொண்டிருந்தது.. அந்த கல்யாண கும்பலில் எல்லோரோடும் பெரிய மனிதராக டைரக்டர் வேணிப்பிரஸாத்தும் நின்று இருந்தார்.. வழக்கமாக அவரது படங்களில் எல்லாம் ஒரு சீனில் தலை காட்டுவார்.. இன்றும் அப்படித்தான்..
கல்யாண சீனில் நளினா கழுத்தில் தாலி கட்டினான் போலி ரமேஷ்..நளினா மிகுந்த வெட்கப்பட்டாள்.. அங்கிருந்த பெரியோர்கள் எல்லோர் காலிலும் விழுந்து ஆசி வாங்கினாள்.. அவளது அப்பாவும் டைரக்டருமான வேணிபிரஸாத்திடம் வந்தாள்.. அங்கே அருகில் இருந்த அவளது அம்மாவும் பக்கத்தில் வந்து நின்றாள்.. அவர்கள் காலிலும் விழுந்து ஆசி பெற்றாள்.. ஷுட்டிங் முடிந்தது.. டைரக்டர் பேக்கப் சொன்னார்..
அதன் பின் டைரக்டர், அவரது மனைவி காரில் ஏறச் சென்றபோது தான் கவனித்தார்..
” அம்மா நளினா..அது ஷூட்டிங் தாலிம்மா.. இன்னும் எதற்காக அதை மாட்டிகிட்டு இருக்க..கழட்டு..”
“இல்லப்பா..அது வந்து..”
” என்னம்மா.. நான் சொல்லிகிட்டே இருக்கேன்..” வேணிபிரஸாத் சூடானார்..
இல்லப்பா.. நான் இன்றைக்கு கழுத்தில் கட்டி கொண்டது நிஜத் தாலி.. நானும் ரமேஷூம் ஒருவரையொருவர் காதலிக்கிறோம்..இது தெய்வ சங்கல்பம்..அப்பா.. நான் காதலித்த ரமேஷே அங்கே ஏன் வரவேண்டும்?.. எனக்கு தாலி கட்டணும்..”
” ஆமாங்க.. குழந்தை விருப்பம் தானே நம்ம விருப்பம்..” மரகதம் நளினாவிற்கு சப்போர்ட் செய்தாள்..
” ஏதோ.. செய்யுங்க..” பல்லைக் கடித்தவாறு. காரில் ஏறப் போனவர்..”. அவளை..அவனோடயே எங்காவது போய் வாழ்ந்துக்க சொல்லு” காரை ஸ்டார்ட் செய்ய..
” என்னங்க.. நம்ம பொண்ணு கடவுள் சன்னதியில் பல பேர் முன்னாலேயே கல்யாணம் செய்திருக்கா.. நாமளும் ஆசி பண்ணோம்..இப்ப போயி..” இழுத்தாள்..
“அப்பா..நீங்களே.. க்ரூப் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்த அம்மாவை அஸிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னு குடிபோதையில் ஒரு நாள் உளரல..
அவருக்கு அப்போது தான் உரைத்தது. இது பல பத்திரிகைகளுக்கு தீனி போடும்.. படம் டல்லாகும்.. சுதாரித்து கொண்டார்.. தான் செய்யாததையா தன் பொண்ணு செஞ்சிட்டா.. சட்டென்று முகபாவம் மாறியது.. டைரக்டர் ஆச்சே..
அவருக்கு தெரியாது.. முதல் நாள் மாலையே நடிகர் ரமேஷூக்கு கொரானா என்று ஜகன் சொன்னது, நளினாவும் அவள் தாயார் மரகதமும் சேர்ந்து ஜகனுடன் திட்டம் போட்டு அவள் காதலன் ரமேஷை அங்கே வரவழைத்து தாலி கட்டி கொண்டது.. மொத்தத்தில் ஒரு நிஜத் திருமணம் சினிமா திருமணம் போல நடந்தது..