மின்சார ரயில் வண்டியில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தவாறு இருக்க திரிசூலம் ஸ்டேஷன் வந்தது. ஒரு வட இந்திய பெண் ஒரு அலுமினிய தட்டும் வலது தோளில் ஒரு அழுக்கு மூட்டையும் இடது இடுப்பில் ஒரு குழந்தையுடன் ஏறினாள். அவளுக்கு முன்னால் ஒரு ஆறேழு வயதுள்ள சிறுமியும் நான்கு வயதில் ஒரு சிறுவனும் ஏறினார்கள். ஏறியவுடன் ரயில் புறப்பட இரு சிறுவர்களும் கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதன் அம்மா அலுமினிய தட்டில் குச்சியால் தாளம் தட்டிக் கொண்டிருந்தாள். நிறைமாத கர்ப்பிணி வேறு. அந்த வயிற்றில் இருந்த சிசுவும் வயிற்றில் உருண்டு கொண்டு இருந்தது. ப்ரஹ்லாதனுக்கு எட்டெழுத்து உபதேசம் போல அபிமன்யுவுக்கு அர்ச்சுனன் சக்ரவ்யூஹம் பற்றி சொன்னது போல அந்த குழந்தைக்கு மந்திர உபதேசம் ஆனதோ என்னவோ? வெளியே வந்து அதுவும் வித்தை காட்டி பிழைப்பு நடத்தும். வாழ்க்கை யில் வித்தை தெரிந்தவன் வாழ்கிறான்..தெரியாதவன் தோல்வி அடைகிறான்